Pages

Thursday, December 24, 2015

நான் யார்? - 4


அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!

யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?

ம்ம்ம்! தெரியறதான்னு பாத்துடலாமே!
நான் இந்த உடம்பா? சர்வ சாதாரணமா என் கை, என் கால், என் உடம்பு வலிக்கறது ந்னு எல்லாம் சொல்லறோமே? அப்ப உடம்பும் நானும் வேற வேறத்தானே? ரொம்ப ரொம்ப சிம்பிளா நான் செத்துப்போனப்பறமும் இருக்கற இந்த உடம்பை நான்ன்னு எப்படி சொல்லறது? அப்படியேவிட்டா சில நாட்கள், பதப்படுத்தி வெச்சா இன்னும் பல நாட்கள் இருக்கிற இந்த உடம்பு நானா? இதயம் துடிச்சு கொண்டிருந்தாலும் மூச்சு லேசா விட்டுக்கொண்டு இருந்தாலும் கூட சில சமயம் டாக்டர்கள் இது தேறாதுன்னு சொல்லிடறாங்களே? ப்ரெய்ன் டெட் ந்னு சர்டிஃபை பண்ணி அதிலேந்து சிறுநீரகம் முதற்கொண்டு பல உறுப்புக்களை எடுத்து வேற வேற ஆசாமிங்களுக்கு வெச்சுடறாங்களே? இந்த உடம்பு நானா இருக்க முடியாது.

இந்த உலகத்தை நான் அஞ்சு உணர்வுகளால அறியறேன். எல்லாமே இந்த அஞ்சுல அடங்கிடுமே? பலதும் பார்க்கலாம்; இல்லை இசை மாதிரி பார்க்க முடியாத சிலதை கேட்கலாம். பார்க்கவும் கேட்கவும் முடியாதது காத்துன்னா அதை நம் தோலால உணரலாம். இதுக்கெல்லாம் அகப்படலைன்ன அதுக்கு ஒரு வாசனையாவது இருக்கும்; தெரிஞ்சுக்கலாம்.
அல்லது ஒரு ருசியாவது இருக்கும்.
எல்லாம் சரிதான். ஆனா தூக்கத்திலே இதெல்லாம் இருந்ததா? நான் ஒண்ணுமே சாப்பிடலை; ஆனா ரசிச்சு ருசிச்சு லட்டு சாப்டா மாதிரி கனவு கண்டேனே? கனவுல கண்ட தீ சுட்டுதே?
அப்ப இதெல்லாம் தப்பா காட்டுது. பொய்! அது நானா இருக்க முடியாது. கண்ணில்லாத காது கேளாத ஆசாமிங்க இருக்காங்களே? அது எல்லாம் இல்லை என்கிறதால அவங்க இல்லாமலா போயிட்டாங்க?
ஒரு இடத்தில் உக்காந்து ஏதே ப்ரசங்கம் கேட்டுண்டு இருக்கேன். திடீர்ன்னு மின் தடை. கும்மிருட்டு. பக்கத்துல இருக்கற ஆள் கூட தெரியலை. ஆனா நானிருக்கேனான்னு சந்தேகம் கூட வரலை. ஒண்ணுமே சத்தமே இல்லாட்டாலும் ஒரு வாசனையும் இல்லாட்டாலும் தொட்டுப்பார்த்தா நான் இருக்கேன்னு தெரிஞ்சுக்கணும்? தானே நானிருக்கேன்னு தெரியறதே? ஆக எந்த உணருகிற கருவியோ அந்த சிக்னலை ப்ராசஸ் செஞ்சு இதான் ந்னு நிர்ணயிக்கிற விஷயமோ நானில்லை.
இந்த நுரையீரலையோ வயித்தையோ குடலையோ இயக்கற சக்தியும் நானில்லை. மூச்சை இழுத்து விடாம இருக்கப்பாத்தா அது கொஞ்ச நேரத்துக்கு மேலே என்னால முடியலை. டாய்லெட் போக இப்ப வேணான்னு தள்ளிப்போடப்பாத்தா அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மேல என்னால முடியலை. என் கண்ட்ரோல்ல இல்லாத எதை நான் நான்னு ஒத்துக்கறது?

தூக்கத்தில இருக்கற மனம் நான் அறிஞ்ச மனமா இல்லே. அது என் கண்ட்ரோல்ல இல்ல. அது என் கண், மூக்கு, காது முதலானது வழியா எதையும் உள் வாங்கிக்கலை. அது பாட்டுக்கு புதுசு புதுசா எதை எதையோ லாஜிக் இல்லாம உருவாக்கிகிட்டு இருக்கு. ஆழ்ந்த தூக்கத்தில சுகமா இருந்தேன். அப்போ மனசு இல்லை. ஆனாலும் அந்த சுகம் இருந்ததே! அந்த சுகத்தை நான் அறிஞ்சேனே? ஆக மனசு நான் இல்லை.
--

ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தமெனும் பஞ்ச விஷயங்களையும் தனித்தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்‌ஷுஸ், ஜிஹ்வா, க்ராணம் என்கிற ஞானேந்திரியங்கள் ஐந்தும் நானன்று.வசனம், கமனம், தானம், மல விசர்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கிற வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் நானன்று.சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற ப்ராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று.நினைக்கின்ற மனமும் நானன்று. சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களும் அற்று விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தி இருக்கும் அஞ்ஞானமும் நானன்று.

No comments: