Pages

Thursday, July 21, 2016

அந்தணர் ஆசாரம் - 4





அடுத்து பல் துலக்குதல்.
கிழக்கு நோக்கி உட்கார்ந்து பல் துலக்க வேண்டும். வெறும் வாய் சுத்தத்திற்கு என்று இல்லாமல் இதை ஒரு கர்மாவாகவே சொல்லி இருக்கிறது. ரிஷி, சந்தஸ் தேவதையுடன் ஆயு: என்னும் மந்திரத்தால் பல்குச்சியை அபிமந்திரித்து துலக்க வேண்டும். குச்சி சுண்டு விரல் பருமனாகவும் 8 அங்குல நீளமும் இருக்க வேண்டும்.
முள் உள்ள எல்லா மரங்களின் குச்சிகளும் பல் துலக்க தகுந்தவைகள். அவை புண்ணியத்தை தரும். பால் உள்ள குச்சிகளாலும் துலக்கலாம்; அவை கீர்த்தியை கொடுக்கும்,
வேம்பு, நாயுருவி, அத்தி, க்ளா, கருங்காலி, கடம்பை, புன்கு, சாரடை, மூங்கில், வெண்மந்தாரை, நாவல், எருக்கு,வில்வம் - இவை சிலாக்கியமானவை. வில்வத்தை சில மஹரிஷிகள் ஒத்துக்கொள்ளவில்லை.
அச்வத்தம் (ஆல்), புரசு, சிம்சுபா ஆகியன தவிர்க்க வேண்டியவை. சதுர்தசீ, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சங்க்ரமணம் ஆகிய தினங்களில் குச்சியால் பல் துலக்கக்கூடாது. ச்ராத்தம், உபவாஸம் ஆகிய தினங்களில் பல் துலக்குதல் தவிர்க்கப்பட வேண்டும். துலக்கினால் ப்ராயச்சித்தம் 100 காயத்ரி ஜபித்த நீரை பருகுதல்.
குச்சி இல்லாமல் இலைகளாலும் புல்லாலும் பல் துலக்கலாம். அமாவாசை ஏகாதசி தவிர இதற்கு விலக்கு இல்லை. நாவல், இச்சி, மாவிலை ஆகியனவற்றுக்கு இந்த விலக்கு கூட இல்லை. இவற்றுள் மாவிலை மிகவும் சிலாக்கியமாகும். கன்னிகை, ப்ரம்ஹச்சாரி, விதவை ஆகியோர் குச்சியால் என்றும் பல் துலக்கக்கூடாது.
சூர்ணங்களை பயன்படுத்தினால் ஆள்காட்டி விரலைத்தவிர்த்து மற்ற விரல்களால் துலக்கலாம்.
அலோபதி மருத்துவத்தில் தினசரி இரவு படுக்கப்போகும் முன் பல் துலக்கச்சொல்கிறார்கள். நெடு நேரம் உணவுபொருட்கள் பல்லுடன் சேர்ந்து இருப்பது இரவு நேரத்தில்தான். உணவு உண்ட பின் 16 முறை வாய்கொப்பளிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டதால் வாயிலிருந்து எல்லா உணவுத்துகள்களையும் நீக்க இது அவசியமாகிவிட்டது. 

Wednesday, July 20, 2016

கிறுக்கல்கள் - 147





உண்மையான ஆன்மீகம் சமுதாய சமாசாரம் இல்லை; ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமானது” என்று மாஸ்டர் சொல்வது மக்களுக்கு எட்டிக்காயாக இருந்தது. இதை கேட்ட மாஸ்டர் சொன்னார்:
ஒரு துருவக்கரடிக்குட்டி இருந்தது. அது தன் அம்மாவிடம் கேட்டது “அம்மா! என் அப்பா ஒரு துருவக்கரடியா?”
ஆமாம்ப்பா!”
கொஞ்ச நேரம் கழித்து அது மீண்டும் கேட்டது: “அம்மா! என் தாத்தாவும் ஒரு துருவக்கரடியா?”
ஆமாம்ப்பா!”
கொஞ்ச நேரம் கழித்து அது மீண்டும் கேட்டது: “அம்மா! என் கொள்ளு தாத்தா எப்படி? அவரும் ஒரு துருவக்கரடியா?”
ஆமாண்டா கண்ணு! ஆமா ஏன் திருப்பித்திருப்பி இப்படி கேக்கறே?”
ஏன்னா எனக்கு குளிர் தாங்கலே!”
மாஸ்டர் முடித்தார்: “ஆன்மீகம் சமூக சமாசாரமும் இல்லே; பரம்பரை சமாசாரமுமில்லே! அது ரொம்பவே சொந்த சமாசாரம்!” 

Tuesday, July 19, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 11






கோபத்துடன் டீயை உறிஞ்சிக்கொண்டு இருந்தான் அந்த இளைஞன். பக்கத்தில் யாரோ வந்து உட்கார்ந்ததை உணர்ந்தான். அது அந்த பெரியவராகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஏனோ உதாசீனமாகவே இருந்தான்.
அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கோவில்களில் இருந்தும் பாட்டுச்சத்தம் காதை பிளந்து கொண்டு இருந்தது. ஒரு இடத்தில் இருந்து கதை சொல்லுவது கேட்டது. அதில் அங்கங்கே ஒருவர் ஆமா என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நடுவில் கதையை இடைமறித்து ஆங்காங்கே இருக்கும் பக்த கோடிகள்… என்று அறிவிப்பு வந்தாலும் அந்த ஆமா நிற்கவில்லை!
"ஜபத்துக்கு ரொம்பவே இடைஞ்சலா இருக்கோ?” என்று மென்மையான குரல் கேட்டது, இளைஞன் சற்று ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்தான். இவருக்கு எப்படித்தெரியும்?
பெரியவர் வெறுமே புன்னகை பூத்தார்.
ஆமா!”
இந்த காலகட்டத்துல இப்படி இருக்கறது சகஜம்தான்.”
எப்படி இருக்கறது?”
ஜபம் செய்யறோமே, அதுக்கு இந்த பாட்டு சத்தம் எல்லாம் இடைஞ்சலா இருக்கேன்னு நினைக்கிறது.”
ம்! ரொம்பவே தொந்திரவா இருக்கு. ரொம்ப நாள் முயற்சி செஞ்சு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் மனசு குவியுது. இப்ப இது வேற!”
பரவாயில்ல.”
எது பரவாயில்ல? ஜபம் பண்ண முடியாம இருக்கறதா?”
ஆமாம். ஏன் இந்த பாட்டு தப்புன்னு நினைக்கிறே?”
பாட்டு? பாட்டு எங்கே இருக்கு? வெறும் சத்தம்தான் அதிகமா இருக்கு! அதுல ஒரு கருத்தோ ஒரு ராகமோ இல்லியே?”
பெரியவர் சிரித்தார். “ஆமா. ஆனா அது ஒரு பத்து வருஷம் முன்னால. இப்ப கொஞ்சம் கொஞ்சமா மாறிப்போச்சே! அதோ கேளூ! ”
குறையில்லை தாயே… மீனாட்சி நீயே’ என்று பாடல் கேட்டது. முடிந்த சுருக்கிலேயே மகமாயீஈஈஈஈ என்று இன்னொரு பாடல் ஆரம்பித்தது.
ஒவ்வொத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட். இப்படித்தான் வகை வகையா இருக்கும். மொத்தத்தில இது இப்ப நல்லாத்தான் ஆகிகிட்டு இருக்கு; அதாவது உனக்கு பிடிச்ச மாதிரி நல்லா!”
என்னதான் பண்ணச்சொல்லறீங்க?”
பாட்டுல வரதும் கடவுள் பேருதானே? உன் வழக்கமான ஜபத்தை விட்டுட்டு இதையேத்தான் பாலோ பண்ணிப்பாரேன்! என்ன தப்பு? அதுவும் கடவுள் பேருதான். இதுவும் கடவுள் பேருதான். என்ன ராமான்னு சொல்லறதை விட்டுட்டு மகமாயி ந்னு சொல்வாங்க. அவ்ளோதான்.”
அப்ப்டி சொல்லறீங்க?”
சிந்தனையில் ஆழ்ந்த இளைஞன் ஒரு முடிவுக்கு வந்து பேச யத்தனித்த போது அவர் அருகில் இருக்க மாட்டார் என்று தோன்றியது. அதே போல் இல்லை! 

Monday, July 18, 2016

சங்கல்பம்





மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் 

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் ³தோபிவா| : ஸ்மரேத் புண்ட³ரீகாக்ஷம்ʼ : பா³ஹ்யாப்யந்தர: ஶுசி:||  மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரீ ராம-ராம-ராம|| திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த ….

ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ வித்யாபலம் தைவபலம் ததேவ கௌரீபதே (லக்‌ஷ்மீபதே) தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி”
இப்படித்தான் பல காரியங்களுக்கும் சங்கல்பம் ஆரம்பிக்கிறது. இதன் பொருளை பார்ப்பது நல்லது. ஏன் என்பது பின்னால் விளங்கும். இதன் பொருளை பார்க்கலாம்.

நான் செய்த எல்லா பாவங்களையும் அழிப்பதன் மூலம், பரமேஸ்வரனை திருப்தி படுத்துவதற்காக
புனிதமல்லாததோ புனிதமானதோ எந்த நிலையில் இருப்பவனானாலும்.
யார் தாமரைக்கண்ணனை மனதால் நினைக்கிறார்களோ அவருடைய உள்ளும் புறமும் சுத்தமானதாகிறது. மனது சொல் இவற்றால் செய்த செயல்களால் கிடைத்த பாபம் ஸ்ரீ ராமனை நினைப்பதால் நீக்கப்படுகிறது; சந்தேகம் வேண்டாம்.
விஷ்ணுவே திதி. அதுவே வாரம். நக்ஷத்ரமும் விஷ்ணுவே. யோகம் கரணம் ஆகியவையும் விஷ்ணுவே. உலகமெல்லாமே எல்லாமே விஷ்ணு மயமாகும்.

கௌரீ பதியாகிய சிவபிரானே (லக்ஷ்மியின் பதியான விஷ்ணுவே) உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) லக்னம் நல்ல லக்னமே; நாள் நல்ல நாளே. நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவை நல்லன செய்வனவே. கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
எல்லா கூறுகளையும் கவனிக்கப்போனால் நல்ல நேரம் என்பது தேவர்களுக்கும் அகப்படாதாம். அப்படியானால் மனிதர்களான நமக்கு மட்டும் எப்படி அகப்படும்? அதனால் சுலபமான வழி இறைவனை நினைப்பதே. அது ராமனோ கௌரீபதியான சிவனோ லக்ஷ்மி பதியான விஷ்ணுவோ - அது நம் குல ஆசாரப்படி இருக்கட்டும். அப்படி இறைவனை நினைக்க அந்த லக்னமே நல்ல லக்னம் ஆகிவிடுகிறது. அந்த நாளே நல்ல நாள் ஆகிவிடுகிறது. அமாவாசை அன்று சந்திரனுக்கு பலமில்லை. இருந்தாலும் இறைவனை நினைக்க அது பலம் பொருந்தியது ஆகிவிடுகிறது.
சிலர் நல்ல நாள்தான் பார்த்தோம்; நல்ல முகூர்த்தம்தான் பார்த்தோம். இருந்தாலும் எடுத்த காரியம் இப்படி ஆகிவிட்டது என்று புலம்புகிறார்கள். என்ன பிரச்சினை? கர்மாவை செய்து வைப்பவர் சொல்லச்சொல்ல திருப்பிச்சொன்னார்களே தவிர இந்த சங்கல்ப நேரத்தில் பகவானை நினைத்தார்களா?
அதற்காக முகூர்த்தமே பார்க்க்க வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். முடிந்த வரை நல்ல முகூர்த்தமாக பார்த்துவிட்டு - ஆதர்ச முகூர்த்தம் கிடைப்பது அரிது என்பதாலும், தெரிந்த தெரியாத தோஷங்கள் இருக்கலாம் என்பதாலும் - பகவானை நினைத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.
இனியேனும் சங்கல்ப நேரத்தில் இறைவனை நினைத்துக்கொண்டு சங்கல்பம் செய்வோம். 

Friday, July 15, 2016

கிறுக்கல்கள் - 146




விருந்தாளி மாஸ்டரிடம் புலம்பினார். “என் வாழ்க்கை உடைந்த கண்ணாடி போலாகிவிட்டது. ஆன்மாவில் தீயனவற்றின் கறை படிந்துவிட்டது. எனக்கு ஏதும் விடிமோட்சம் உண்டா?”
ஆமாம். உடைந்த எல்லாவற்றையும் ஒட்டி கறைகளை துடைத்து சுத்தமாக்கும் வழி ஒன்று இருக்கிறது!”
! என்ன அது?”
மன்னிப்பு!”
யார் எதை யாரை மன்னிக்க?”
“நீயேதான்! எல்லாரையும்! வாழ்க்கை, கடவுள், உன் அண்டை வீட்டுக்காரர், …. மிக முக்கியமாக உன்னையே!”
இதை எப்படி செய்வது?”
பழி சுமத்த யாருமே இல்லை என்பதை உணர்வதால்! ஆமாம். யாருமே இல்லை!” என்றார் மாஸ்டர். 

Thursday, July 14, 2016

கிறுக்கல்கள்! - 145




நிசப்தத்தை மாஸ்டர் எப்படி கண்டுபிடித்தார் என்று ஒரு சீடர் கேட்டார். மாஸ்டர் கதை சொன்னார்:
ஒரு தொழிற்சாலைக்கு தவளைத்தோல் தேவையாக இருந்தது. விளம்பரம் செய்தார்கள். ஒரு விவசாயி கடிதம் போட்டார். அதில் என்னால் ஒரு லட்சம் தவளைகளை அனுப்பி வைக்க முடியும். தேவையானால் இன்னும் அதிகமாக என்று குறிப்பிட்டு இருந்தது.
கம்பனியார் ஆச்சரியப்பட்டு “முதல் தவணையாக உடனே ஐம்பதாயிரம் அனுப்பி வைக்கவும்“ என்று கடிதம் அனுப்பினார்கள். இரண்டு வாரங்கள் கழித்து ஒரே ஒரு தவளை வந்து சேர்ந்தது. கூடவே ஒரு கடிதம். “மன்னித்துக்கொள்ளுங்கள். பக்கத்து வயலில் இது மட்டுமே இருந்தது. இதன் சத்தம் என்னை ஏமாற்றிவிட்டது!”

பின்னால் சொன்னார்: “மக்கள் இடும் கூச்சல்களை காது கொடுத்துக்கேள், ஆராய்ச்சி செய். அடுத்து உன் கூச்சலையும் விலகி நின்று கவனி. எல்லாமே அர்த்தமில்லாதவை என்று புரியும். பின்னால் நிசப்தமான அமைதியும் தெரியும்.

Wednesday, July 13, 2016

கிறுக்கல்கள்! - 144




கவர்னர் மாஸ்டரைக்கேட்டார்: “என் பணியில் நீங்கள் சொல்லக்கூடிய எனக்கு அறிவுரை ஏதும் உண்டா?”
உண்டே! கட்டளையிடப் பழகிக்கொள்ளுங்கள்!”
எப்படி?”

மற்றவர்கள் தாம் தாழ்ந்தவர் என்று நினைக்காத வண்ணம்!”

Tuesday, July 12, 2016

கிறுக்கல்கள்! - 143




எப்போதும் ஜாலியாக இருந்த ஒரு சீடனைப்பார்த்து மாஸ்டர் சொன்னார்: “உன் வாழ்கை அமைதியாக அமைந்துவிட்டதால் நீ கெட்டுப்போய்க் கொண்டு இருக்கிறாய். ஒரு பேரழிவுதான் உன்னை காப்பாற்றும்!”
பின்னால் சீடர்களுக்கு விளக்கினார்: கொதிக்கும் நீரில் ஒரு தவளையை போட்டால் உடனே அது வெளியே குதித்துவிடும். ஆனால் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு மெல்ல சூடாக்கினால் அது வெளியே குதிக்க வேண்டும் என்று விரும்பும்போது அதன் தசைகளில் வலு இருக்காது!” 

Monday, July 11, 2016

கிறுக்கல்கள்! - 142




தன் சீடர்களுக்கு தான் பேசுவது புரியாமல் போக நிறையவே வாய்ப்பிருப்பது மாஸ்டருக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். இருந்தாலும் என்றோ ஒரு நாள் அது இதயத்தில் இருந்துகொண்டு வெளிவந்து மலர்ந்து விடும் என்ற நிச்சயத்திலேயே பேசுவார்!
ஒரு நாள் அவர் சொன்னார்:
நேரம் என்பது நம்மில் பலருக்கும் எப்போது நீண்டதாகவே காத்திருக்கும் போது தோன்றுகிறது; ஒரு விடுமுறைக்கு; பரிட்சைக்கு; அல்லது எதிர்காலத்தில் மிகவும் விரும்பியதோ பயந்ததோ நடக்க. ”

ஆனால் நடப்பதைப்பற்றி கவலையே இல்லாத; அது திருப்பி நிகழ வேண்டும் அல்லது நிகழவே கூடாது என்னும் எதிர்பார்ப்பு ஏதும் அற்ற; எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்வதற்கு பயின்ற ஒருவருக்கு காலம் என்பது முடிவில்லாத ஒளிமயமானதாக மாறிவிடுகிறது. ”

Friday, July 8, 2016

கிறுக்கல்கள்! - 141





 இதை கேட்ட சீடர்களுக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எதையும் தோல்வி மனப்பான்மை உடைய ஒருவர் மாஸ்டரிடம் சொன்னார்: “வாழ்கை எவ்வளவு மோசமாக இருக்கிறது தெரியுமா? பிறந்தே இருக்க வேண்டாம்! அதுவே நல்லா இருந்திருக்கும்!”
மாஸ்டர் கண் சிமிட்டிக்கொண்டு சொன்னார்: “ஆமாம்! ஆனா எவ்வளோ பேருக்கு அந்த மாதிரி அத்ருஷ்டம் இருக்கும்? பத்தாயிரத்தில் ஒண்ணு?”

Thursday, July 7, 2016

கிறுக்கல்கள்! - 140





அடுத்ததாக ஒரு கதை சொன்னார். அரசு புதிதாக நெடுஞ்சாலை அமைத்ததால் அது தன் வியாபாரத்தை பாதித்ததாக புகார் செய்த ஓட்டல்காரர் பற்றியது.
ஓட்டல்காரரின் நண்பர் சொன்னார்: “தோ பாரு! எனக்கு புரியவே இல்லே. தினமும் உன் ஓட்டல்ல ரூம் காலி இல்லைன்னு போர்ட் தொங்கறதை பார்க்கறேனே? ஏன் வியாபாரம் கெட்டுப்போச்சுன்னு சொல்லறே?”
ஓட்டல்காரர் சொன்னார்: “உனக்கு புரியவே இல்லே. இந்த ரோடு போடறதுக்கு முந்தி தினசரி அம்பது பேரையாவது இடம் இல்லேன்னு திருப்பி அனுப்புவேன். இப்ப இருபது முப்பது பேரைத்தான் திருப்பி அனுப்பறேன்!”
மாஸ்டர் மேலும் சொன்னார்: “நீ வருத்தப்படறதுன்னு முடிவு எடுத்துட்டா இல்லாத கஸ்டமர் கூட நிஜமாகிவிடுவார்!” 

Wednesday, July 6, 2016

கிறுக்கல்கள்! - 139





மனத்தளர்ச்சியுடன் ஒரு சீடன் சொன்னான்: “குருவே, என் ஊனங்களால் நான் வாழ்க்கையால் ஏமாற்றப்படுகிறேன்!”
ஏமாற்றப்படுவதா? உன் சுற்றிலும் பார். உணர்வுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உனக்கு அளவுக்கு அதிகமாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது!”

Tuesday, July 5, 2016

கிறுக்கல்கள்! - 138





ஞானத்தோடு இருப்பது என்றால் என்ன?”
சரியாக பார்ப்பது.”
எதை?”
வெற்றியின் வெறுமையை; சாதனைகளின் சூன்யம்; மனித முயற்சிகளின் அர்த்தமில்லாமையை.”
ஒரு சீடன் பயந்தே போய்விட்டான். “ஆனா இது தோல்வி மனப்பான்மை, மனத்தளர்ச்சி இல்லியா?”
இல்லை! ஆழமான கணவாய் மேலே பறக்கும் பருந்தின் கிளர்ச்சி! சுதந்திரம்!”


Monday, July 4, 2016

கிறுக்கல்கள்! - 137






வரலாற்று ஆராய்ச்சி என்றால் மாஸ்டருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதன் மாணவர்கள் அது தரும் முக்கிய படிப்பினைகளை உணர்வதில்லை என்று புகார் செய்வார்.
அப்படிப்பட்ட ஒரு சமயம் ஒரு மாணவன் “உதாரணமாக?” என்றான்.
உதாரணமாக ஒரு காலத்தில் மிகவும் முக்கிய பிரச்சினைகளாக இருந்தவை இப்போது வெறும் எழுத்துக்களாக உறைந்து போய்விட்டன. வரலாற்று நாடகத்தில் மகத்தான வீரர்களாக கருதப்பட்டவர்கள் வெறும் பொம்மலாட்டத்தின் பொம்மைகள்தான் என்று இப்போது நமக்குப்புரிவது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை!”

Saturday, July 2, 2016

கிறுக்கல்கள்! - 136


துக்கத்துக்கு முக்கிய காரணம் ஜனங்கள் துக்கப்படுவது என்று முடிவு செய்து விடுவதுதான்” என்றார் மாஸ்டர். “ அதனால்தான் ஒரே தருவாயில் ஒருவர் சந்தோஷமாகவும் ஒருவர் துக்கத்துடனும் வித்தியாசமாக இருக்கிறார்கள்.”
அவருடைய சிறு குழந்தை கோடை கேம்புக்கு போக விருப்பம் இல்லாமல் இருப்பதை கண்டவர் அவளை கொஞ்சம் உற்சாகப்படுத்த கொஞ்சம் போஸ்ட் கார்ட் வாங்கி தம் முகவரியையும் எழுதி அவளிடம் கொடுத்தார். “தினமும் ஒன்னுத்துல நான் நல்லா இருக்கேன்னு எழுதி போஸ்ட் பாக்ஸ்ல போட்டுடு, அவ்ளோதான்” என்றார்.

குழந்தை “ம்ம்ம்ம் அழுதுண்டு என்கிறதை எப்படி எழுதறது?” என்று கேட்டாள்.

Friday, July 1, 2016

கோளாறான எண்ணங்கள் - லேட்டஸ்ட்!


பாசத்தை விட்டுடு. நடக்கிறதை சினிமா போல பாரு. இந்த உலக நடப்புகள் மித்யா. திரையில் தெரியற சினிமா போல. உண்மைன்னு தோணினாலும் அது உண்மையான உண்மை இல்லை!
ஒரு சாட்சியா நடக்கறதை வேடிக்கை பாரு!

ஆன்மீக பயணத்துல இப்படி அப்பப்ப காதுல விழுந்திருக்கு. லோகத்தில நடக்கிற ஆயிரத்தெட்டு சமாசாரங்களைப்பத்தி கவலைப்படறதுன்னா இந்த ஜன்மம் போறாது. எல்லாம் கர்ம வினைப்படி நடக்கிறதுன்னு புரியற போது, முயற்சி செஞ்சு பாத்ததுல பெரும்பாலான நிகழ்வுகளை “ரைட் நடக்க வேண்டியது நடக்கிறது. இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே” ந்னு கடந்து போக முடியறது. இது கஷ்டமா தோணினாலும் சாதிக்கக்கூடியதுதான்னு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கு. சமூக வலைத்தளங்களில பலரும் பல விஷயங்களுக்கும் பொங்கறதைப்பாத்தா ஒரு பக்கம் சிரிப்புதான் வரது. சம்பந்தமில்லாத பலதுக்கும் பொங்கி, சண்டைப்போட்டு நட்புக்களை முறிச்சுக்கக்கூட தயாரா இருக்காங்க! இதையும் கர்ம வினைன்னு தாண்டலாம். ஆனா இது இப்ப புதுசா செய்யற கர்மா; கொஞ்சம் முயற்சி செஞ்சா விலக்கிக்கூடியது. போகட்டும்.

இப்ப என் பிரச்சினையே நடக்கிறதை சினிமா மாதிரி பார்க்க முடியலை; பார்க்கிறது நாடகம் மாதிரி இருக்கே!

என்ன வித்தியாசம் என்கிறீங்களா? சினிமாவில விலகி இருக்கறது சுலபம். எப்ப வேணும்ன்னாலும் இது சினிமா; எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு நினைவு படுத்திக்கொண்டு அதோட தாக்கத்திலேந்து மீளறது சுலபம். எந்த கதாநாயகன் யார்கிட்ட அடி வாங்கினா எனக்கென்ன? :-) சினிமாவில நாம் வெறும் பார்வையாளர்தான்!

நாடகம் அப்படி இல்லை. அதுல நாமும் ஒரு பாத்திரம். என்னத்தான் கடவுள் என்கிற டைரக்டர் இயக்கறா மாதிரி இயங்கறோம்ன்னாலும் அது நமக்கு புரியறதில்லையே. விலகி இருக்கறது கஷ்டமா இருக்கு. சும்மா இருக்கவும் முடியலை. நாடகத்தில நாமும் ஏதோ செய்ய வேண்டி இருக்கு; வசனம் பேச வேண்டி இருக்கு. இதுக்கான ஸ்க்ரிப்டையும் நம்மகிட்ட கொடுக்கலை! இதுல நாமா செய்யக்கூடியது, பேசக்கூடியது ஏதேனும் இருக்கா என்கிறது அப்பப்ப வந்து போகிற கேள்வி. சந்தர்பத்துக்கு தகுந்தாப்போல (?) எதையாவது உளறிட்டு இருக்கோம்! அது சரியா தப்பான்னு ஒண்ணும் புரியறதில்லே. இதையும் நாமா செய்யலே, நாம் சொல்லறதையும் செய்கிறதையும் அவனே நிர்ணயிச்சு இருக்கான், அவனின்றி அணுவும் அசையாதுன்னு சிலர் சொல்லறது புத்திக்கு தெரிஞ்சாலும் அனுபவத்துக்கு வர மாட்டேன் என்கிறது! ஐயோ இப்படி சொல்லிட்டோமே, செஞ்சுட்டோமேன்னு பச்சாதாபப்படுகிறோம்! இந்த தாக்கத்திலேந்து மீளறது சுலபமா இல்லே! நம்மைவிட விட்றா சூனா பானா ந்னு போறவங்க பரவாயில்லேன்னு தோணறது!

ரமணர் தெளிவா சொல்லிட்டார்! ‘அவரவரது பிராப்த பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது. நடப்பதை என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மவுனமாய் இருத்தல் நன்று’

ம்ம்ம் என்ன செய்யலாம்? மௌனமா ஒரு போஸ்ட் எழுதி போட்டுடலாம். அதையாவது தேத்திப்போம். மத்தபடிக்கு இதுல – இந்த பொலம்பல்ல- என்ன ப்ரயோஜனம்ன்னு புரியலை!