அகார்ப்பண்யம் ஏழாவது. 'அ' போட்டா எதிர்மறைன்னு இப்ப தெரிஞ்சிருக்கும். கரெக்ட். கார்ப்பண்யம் இல்லாம இருக்கறது அகார்பண்யம். அது சரி, இது என்னது?
கிருபணனின் குணம் கார்ப்பண்யம். அப்படி இல்லாமலிருப்பது அகார்ப்பண்யம். கிருபணன் என்றால் லோபி, கருமி. லோபித்தனம், கருமித்தனம் இல்லாமல் தான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம்.
ஏழ்மையில இருந்தாலும் சத்பாத்திரத்துக்கு சக்திக்கு ஏற்ற அளவில தானம் செய்யணும். ஒரு வேளை பகவான் நிறைய கொடுத்து இருந்தால் மனஸார வாரிக் கொடுக்கிற குணம் இருக்கணும்.
இந்த வார்த்தை பகவத் கீதையை படிச்சவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.
அர்ஜுனன் ரொம்பவும் மனம் தளர்ந்து போய் தேர்த்தட்டிலே உட்கார்ந்துகொண்டு, ‘சண்டை போட மாட்டேன் ’ ன்னு அழுதான். அப்ப அவனுக்கு ‘கார்ப்பண்ய தோஷம்’ ஏற்பட்டதா கீதையில் சொல்லியிருக்கு. அந்த இடத்தில் ‘தன்னையே ரொம்பவும் தாழ்த்திக் கொண்டு தீனமாகப் போய் விட்டவன்’ என்று அர்த்தம். தன் விஷயத்திலேயே தான் லோபியாகி விட்டான் என்று அர்த்தம். அகார்ப்பண்யம் என்றால் இப்படி தீனனாக, நோஞ்சானாக, கையாலாகாதவனாக இல்லாமல் தீரனாக, நல்ல உத்ஸாஹ புருஷனாக, மனஸ்வியாக இருப்பது. என்ன கஷ்டம் வந்தாலும் தைரியமா இருக்கறது.
அடுத்து ஆத்ம விசாரம் செய்யறதும் அகார்பண்யம்தான். ஆயிரம் விஷயங்கள் உலக நடப்புக்கு இழுக்கறப்ப தைரியமா செய்யற விஷயம் இல்லையா? கொடுக்கப்பட்ட ஜன்மாவை வீணாக்காமல் ஜீவனுக்கு பல வழிகளிலேயும் நன்மை தேடறதும் அகார்பண்யமே.
No comments:
Post a Comment