Pages

Friday, July 1, 2022

காஶி யாத்திரை - 22 காஶி - 5


நாள் 4:
உடம்பு முடியலைதான். இருந்தாலும் ஶ்ராத்தம் கொஞ்சம் லேட்டா தான் ஆரம்பிக்கும் என்கிறதாலகையோடு கையாக காலையில காசியா த்திரை அங்கமாக அவசியமாக பார்க்கவேண்டிய கோவில்களை பார்த்து விடனும் அப்படின்னு முடிவு பண்ணி இருந்தது. விஶ்வேஸம், மாதவம், டுண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தே
காசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம் என்பது ஸ்லோகம்.
 
பையர் காலையில கால பைரவர் கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம் அப்படின்னு முடிவு பண்ணினார். அப்படியே ஒரு சில கோவில்கள் பக்கத்திலேயே பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று உத்தேசம். இங்கே வெளியில் போய்விட்டு திரும்பி வந்தால் மடிக்காக குளிக்க வேண்டும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்கிறார்கள். காசி மஹா ஸ்மசானம் - பெரிய சுடுகாடு. இங்கே இதெல்லாம் கிடையாது யார் மேல ஏற்பட்டாலும் ஒரு விஷயமே இல்லை என்று சொல்கிறார் இங்கே இருப்பவர்கள். ஆனால் நமக்கோ ஒரு மாதிரி வாழ்க்கை முறையை பழகிவிட்டது. அதனால் அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இங்கே போகிற இடங்களில் பண்டா கடை வைத்திருந்தால் சர்வசாதாரணமாக தோளில் தட்டி இங்கே வாருங்கள் என்கிறார்கள். நமக்கு எது சுர்ரென்று கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஓரளவு இதையெல்லாம் கட்டில் பிடித்து விட்டதால் நாம் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.
இரண்டு டுக் டுக் எடுத்துக்கொண்டு கால பைரவர் கோயிலுக்கு 6 பேரும் போனோம். வண்டி கிட்டே போக முடியவில்லை. முன்னேயே நிறுத்திவிடுகிறார்கள். போகிற வழியில் கடைகள். இதை வாங்கிக் கொண்டு போ அதை வாங்கிக் கொண்டு போ என்று வழக்கமான கூக்குரல் இருக்கிறது. பைரவர்கிட்டே போனோம். வாங்கி வந்திருந்தவற்றை சமர்ப்பித்தோம். பல பேர் எங்களிடம் காசிக்கயிறு வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி இருந்தார்கள். அவர்களுக்காக வெளியே அவற்றை வாங்கினோம். எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக கட்டி பண்டாவிடம் கொடுக்க அவர் அதை வாங்கிக் கொண்டு சும்மா நின்றார். சரி என்ன விஷயம் என்று புரிந்துவிட்டது எவ்வளவு வேண்டும் என்று கேட்டு அவர் எதோ சொல்ல நாம் எதையோ கொடுக்க அதை வாங்கிக்கொண்டு காசிக்கயிறுகளை கால பைரவர் பாதத்தில் வைத்து இல்லை தண்டத்தில் வைத்தாரா என்று தெரியவில்லை, நினைவில்லை அதைக் கொடுத்தார். நாங்களும் வாங்கிக்கொண்டு நகர்ந்தோம். 
 
பொதுவாகவே வட இந்தியாவில் மக்களின் பக்தி என்கிற லெவல் அதிகம். நமக்கு இங்கே தமிழ்நாட்டில் பல கோயில்களில் அழகழகாக சிற்பங்களை எல்லாம் பார்த்து பழகி இருக்கிறோம். அதுபோல அழகாக இல்லை என்றால் நமக்கு பக்தி வருவதற்கு கொஞ்சம் மறுக்கிறது; இடக்கு செய்கிறது. ஆனால் அங்கே இருப்பவர்கள் அங்கே சுவாமி மூர்த்தத்தை பார்த்து அவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்படுகிறார்கள்; பக்தி பரவசம் ஆகிறார்கள். நமக்கு இதில் உரைப்போட கூட காணாது என்றுதான் சொல்லவேண்டும். 
 

போன முறை நாங்கள் போன போது இந்த பிரதான சந்நிதியும் பண்டாவும் மட்டும்தான் இருந்தார்கள். அப்படித்தான் நினைவு. வண்டியும் கோவில் வரை போக முடிந்தது. பெரிய கூட்டம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் சர்வசாதாரணமாக தரிசனம் செய்துவிட்டு காசிக்கயிறு வாங்கிக்கொண்டு தட்சிணை கொடுத்து விட்டு வந்திருக்கிறோம். இப்போது இந்த பிரதான சன்னதியை சுற்றி பத்து கடைகள் … அப்படித்தான் சொல்ல வேண்டும், கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு பூசாரி இருக்கிறார். நாம் யாரையாவது தேர்ந்தெடுத்து அவரிடம் போனால் என்ன வேண்டும் என்று கேட்டு விசாரித்து அதைக் கொடுத்து; காசிக்கயிறு ஆனால் பிராமணனுக்கு சாப்பாட்டுக்கு கொடு என்று பணம் கேட்டு வாங்கி பிறகு சுலோகம் சொல்லி தம்பதியாக இருந்தால் இருவரையும் பக்கத்து பக்கத்தில் நிறுத்தி வைத்து மண்டையை மோதி, எல்லார் மீதும் கை சின்ன கைத்தடியால் தட்டி கயிறை கட்டி விடுகிறார். மாலை போட்டு இதுவரை நீங்கள் செய்த பாவம் எல்லாம் போய்விட்டது என்று சொல்கிறார். நாங்களும் வாங்கி கட்டிக்கொண்டு நகர்ந்தோம்.
 
அங்கேயே பக்கத்தில் கொஞ்ச தூரம் போனால் தண்டபாணி காலபைரவர் என்று ஒருவர் இருக்கிறார். பல பேரும் இவர் இருப்பது தெரியாமல் விட்டு விடுகிறார்கள். அங்கேயே கொஞ்சம் விசாரித்தால் வழிகாட்டுகிறார்கள். அதே வழியில் திரும்பி வந்து காலபைரவர் கோவில் வழியாகவே வெளியே போகவேண்டும். அவரையும் தரிசனம் செய்து மீண்டோம். முதலில் இந்த இரண்டு கோவில்களை முடித்துக்கொண்டு கர்மாவுக்காக திரும்புவதாக எண்ணம். ஏழு மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று வாத்தியார் சொல்லியிருந்தார். அப்போதுதான் வெயில் மிகவும் ஏறும் முன்னே 5 கட்ட ஶ்ராத்தத்தையும் முடித்துவிட்டு வரமுடியும் என்று திட்டம். ஆனால் இவர்கள் சொன்ன நேரத்துக்கு வருவதில்லை என்று முடிவு கட்டி விட்டிருந்ததால் சரி என்ன நடக்கிறதோ என்று நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதேபோல நல்லவேளையாக பையர் போன் பண்ணி விசாரித்ததில் கொஞ்சம் லேட் ஆகும் என்று சொன்னார். அதனால் சரி, அடுத்த கோவிலைப் பார்த்து விடலாம் என்று போனோம்.
அரைக்காசு/ சோழி அம்மன் கோவிலை பார்க்க போனோம். முனனே பார்த்தது நம் சென்னையில் நகரங்களில் பிளாட்பாரத்தில் இரண்டுக்கு இரண்டு அடி அளவு மட்டும் உள்ள சன்னதி கொண்ட அம்மன் கோவில்/ பிள்ளையார் கோவில் போல இருந்ததாக நினைவு. நாங்கள் அங்கே போன போது எங்களைப் பார்த்து விட்டு ஒரு சின்ன பெண் வந்து சோழியை கொடுத்துவிட்டு இவள் காலடியில் வையுங்கள்; நான் சொல்வதை சொல்லுங்கள் என்று ஹிந்தியில் ஏதோ சொல்லி அரைக்காசு உனக்கு சோழி எனக்கு (அப்படி நினைவு) சொல்லி காசை வைத்து விட்டு சோழியை எடுத்துக்கொள்ள சொன்னார் தோழியை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் இப்போதோ இடமே கண்டுபிடிக்க முடியவில்லை அவ்வளவு தூரம் எல்லாம் மாறிவிட்டது. அம்மன் சன்னதியை தூக்கி கட்டி இருக்கிறார்கள். இப்போது படியேறி போக வேண்டி இருக்கிறது. பத்துக்குப் பத்து சன்னதி. அதை சுற்றிலும் ஓரிரு கடைகள். அங்கேதான் சோழி வாங்க வேண்டும் என்றும் பூஜை சாமான் போல எதையோ கொடுக்கிறார்கள். இந்த கடை இருக்கும் இடம் அதை சுற்றி எல்லாம் தரையில் கல் பதித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒரு பாண்டா இருக்கிறார். ரொம்ப ஒன்றும் வயதானதாக தெரியவில்லை. அவர் அந்த சின்ன பூஜையை செய்து வைத்தார் இப்போது கிட்டே போகமுடியாமல் தூரத்திலிருந்தே இதை எல்லாம் உள்ளே தூக்கி போடுவதாக இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு திரும்பி வெளியே வந்தோம். அடுத்து நாங்கள் போனது சங்கட ஹரன் அனுமார் கோவில்.

No comments: