Pages

Saturday, July 23, 2022

காஶி யாத்திரை - 29 காஶி - 12



நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய குடும்பமே பயணம் செய்து கொண்டிருந்தது. வயதானவர் ஒருவர். அவருடைய இரண்டு மகன்கள். இரண்டு நாட்டுப் பெண்கள். இரண்டு குழந்தைகள். ஒரு கை குழந்தை. இப்படி பெரிய குடும்பம். வாரணாசி கூட தாண்டாத நிலையில் ஏதோ ஒரு இடத்தில் வண்டி நின்றது. நாங்கள் நின்ற இடத்தில் பிளாட்பார்ம் கூட இல்லை. ஆனால் ஒரு முதியவர் கூட நாலைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் உதவியுடன் முதியவர் வண்டியில் ஏறினார். இந்த குடும்பம் உடனடியாக போய் அவர் காலை தொட்டு கும்பிட்டது. அவர் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டு கட்டாக எடுத்தார். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 40 ரூபாய் கொடுத்தார். எல்லோருக்கும் பரம சந்தோஷம். வாங்கி வந்திருந்த இரண்டு பக்கெட் ஐஸ்கிரீம் ஐ கொடுத்துவிட்டு எல்லோருக்கும் ஆசிர்வாதம் செய்து விட்டு இறங்கிப் போய்விட்டார். குழந்தைகள் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இந்த பயணங்களில் நான் கவனித்த இன்னொரு விஷயம் குழந்தைகள் பாட்டுக்கு மணி பத்து பதினொன்று என்று என்ன ஆனாலும் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். எட்டு மணி ஆனால் கண்கள் சுற்றும், தூங்கி விடுவோம் என்ற எங்கள் காலம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
ரயில் சோன் நதியை நெருங்கியது. முன்னே எங்கள் அப்பா அம்மாவுடன் வந்து திரும்பும் போது இதை பார்த்த நினைவு இருக்கிறது. பலத்தில் நுழைந்த பின் அது பாட்டுக்கு பாலத்தின் மீது போய் கொண்டேஏஏஏஏஏ இருந்தது. பக்கத்தில் இருந்தவரிடன் விசாரித்தேன். ‘இது ஸோன் நதி பாலம். இந்தியாவிலேயே மிக நீளமான பாலமாக்கும்! 99 தூண்கள் இருக்கிண்றன’ என்றார். இப்போது எதிரே சின்னப்பையன் ஒருவன் இருந்தான். இந்த பாலம் பற்றி தெரியுமா என்றேன். தெரியாது என்று தலை அசைத்தான். சொன்னேன். அது அப்போது மிக நீளமானது. இப்போது அசமில் போகிபீல் பாலம். இன்னும் பலதும் கூட வந்துவிட்டன.
முன்னே சொன்னது போல இது தாமதமாக போய்க்கொண்டிருக்கும் ரயில். ஆகவே சூப்பர் எக்ஸ்பிரஸ் முதல் நேரத்துக்கு போய்க் கொண்டிருக்கும் மிக மிக மெதுவான கூட்ஸ் வண்டி வரை எல்லாவற்றுக்கும் இது வழி கொடுத்து பிறகு கிளம்பி போய்க்கொண்டிருக்கிறது. ரபி கஞ்சில் பாதி சீட் காலி ஆகிவிட்டது. கீழே படுத்திருந்தவர்களுக்கு நிம்மதி. இந்த இடத்தில் அநியாயமாக ஐந்து வண்டிகள் தாண்டிப் போயின. ஸ்டேஷன்கள் இடையில் வண்டி மிக வேகமாக தான் போய்க் கொண்டிருந்தது. இந்த தாமதங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் ஏற்கனவே இருந்த இரண்டு மணி நேரத்தில் நிச்சயம் ஒரு மணியாவது சரிசெய்து இருக்கும். இப்போது எங்கே இருக்கிறோம் என்று பார்த்துக்கொண்டு கடைசியில் இரவு … இல்லை காலை 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம். அரவிந்தனும் அஷ்டாவக்கிரனும் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்கள். எங்கள் லக்கேஜை அவர்கள் வாங்கிக் கொண்டதால் பெரிய ரிலீப் கிடைத்தது. வண்டியில் சங்கரமடத்திற்கு போய் சேர்ந்தோம். அடுத்து அரைகுறையாக தூங்கினேன். காலை எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே நிறைய நேரம் படுத்திருந்தேன். என்ன செய்வது? ஒவ்வொரு சமயமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போகும்போது நடுராத்திரி போய் சேர்வதாக அமைந்துவிட்டது. நல்ல காலமாக கயை கடைசி இடம். இங்கிருந்து கல்கத்தா போகும் வண்டி காலையில் தான் போய் சேருகிறது தூங்கி எழுந்த பிறகு போய் சேரும். சௌக்கியம்.
காலையில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தர்மபத்னி சமையலுக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தும் ப்ரயாகை, காசியில் ஆள் கிடைக்கவில்லை. உதவி இல்லாமல் சிரம்பப்பட்டார்கள். இதை கேள்விப்பட்டுவிட்டு கொல்கொத்தா நண்பரின் மனைவி இரவு ரயிலில் கிளம்பி கயை வந்து சேர்ந்துவிட்டார்! ஆட்டோவில் வரும் வழியில் பால் கறப்பதை பார்த்தாராம். வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!

No comments: