Pages

Sunday, July 3, 2022

காஶி யாத்திரை - 23 காஶி - 6


அடுத்து நாங்கள் போனது சங்கட ஹரன் அனுமார் கோவில்.
இந்த இடம் வெகுவாகவே மாறிப்போய்விட்டது. முன்னே போனபோது அங்கே நிறைய மரங்கள் குரங்குகள் ஆகியன இருந்தன. கொஞ்சம் கூட்டமாக இருந்தாலும் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.
காசியிலேயே பொதுவாக பார்த்து ஒரு விஷயம். முக்கியமான கோவில்களுக்கு பலத்த ஆயுத போலீஸ்/ ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த கோவிலுக்கு அப்படித்தான். வண்டி கிட்டே போக முடியாது. தூரத்திலேயே நிறுத்திவிட்டார்கள். நடந்துகிட்டே போனால் செக் பாயிண்ட் இருக்கிறது. மெட்டல் டிடெக்டர் கீழாக போனால் நமது உடையையும் ஆயுதங்களுக்கான தட்டி பார்த்து உள்ளே அனுப்புகிறார்கள். இங்கே எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இந்த பாதுகாவலர்கள் கூட பெண்களை பரிசோதிக்க ஒரு பெண்மணி அங்கே இருந்தார். கூடவே ஒரு இரண்டு பெண்கள் இருந்தனர். இந்த பாதுகாவலர் யாரும் எந்த சீருடையும் அணிந்திருக்கவில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை. சற்று தூரத்தில் இருந்த ஒரு பாதுகாவலர் பெண்மணி என்னை பார்த்து சிரித்து கை கூப்பி வணக்கம் செலுத்தினார். யாரென்று என்ன கண்டேன்? இது எந்த ஜென்மத்து தொடர்பு தெரியவில்லை. ஏனென்றால் பார்த்தவுடன் இவர் நம்மவர் என்று மனதில் பட்டது. தலையசைத்து புன்சிரிப்பு ஒன்று உதிர்த்துவிட்டு மேலே சென்று கொண்டிருந்தேன். போகும் வழி முழுவதும் இரண்டு பக்கமும் பத்தடிக்கும் உயரமான இரும்புக் கம்பி வலை வேலியாக போட்டிருக்கிறார்கள். இது எதற்காக என்று புரியவில்லை. எதிர்பார்த்த குரங்குகள் ஒன்று கூட இங்கே காணவில்லை. கோவிலை நெருங்கிச் சென்றபோது… அது வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் சட்டங்கள் வைத்து க்யூ பிரிக்கப்பட்டிருக்கிறது. பஜனை கோஷ்டி இரண்டு பலத்த சத்தத்துடன் பஜனை செய்து கொண்டிருந்தார்கள். முன்பு போல் இப்போது அனுமார் கிட்டே போய் பார்க்க முடியவில்லை. தூரத்திலிருந்தே தரிசனம் செய்து கொள்ள வேண்டியதுதான். இதில் ஒரு ராமர் பாதம் வெள்ளியில் செய்து சித்திர பலகையில் வைத்திருக்கிறார்கள். பலரும் கொண்டுபோன பூவை இந்த பாதத்தை மீது போடுகிறார்கள். அங்கே இருக்கிற பாண்டா உள்ளே போட்டு இருந்த பூவை பிரசாதமாக கொடுக்கிறார். தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பினோம். ஆச்சரியமாக அங்கே கட்டண கழிவறை ஒன்று இருந்தது. அதை நிர்வகிக்க ஒரு ஆசாமி உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரிடம் போய் ஒரு குரங்கு கூட காணவில்லை என்று என்னுடைய ஆச்சரியத்தை சொன்னேன். அவர் ‘இங்கே வருபவர்கள் எல்லாம் குரங்குகளுக்கு தீனி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே நிறைய குரங்குகள் இருந்தன. இந்த கொரோனா வந்த பிறகு பக்தர்கள் வருவதை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். யாரும் தீனி போடுவதற்கு இல்லாமல் வெறுத்துப்போய் குரங்குகள் வேறு எங்கே போய்விட்டன’ என்றார். இது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அப்படியும் இருக்கலாம்.

No comments: