Pages

Monday, July 11, 2022

காஶி யாத்திரை - 25 காஶி - 8




அடுத்தநாள் காலை ஏழரை மணிக்கு கிளம்புவதாக திட்டம். இதனால் கோவில் விஷயம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஏழரை மணிக்கு பையர் வாத்தியாருக்கு போன் செய்தார். வாத்தியார் ‘ஆச்சு, நானும் கிளம்பிவிட்டேன்; நீங்கள் முன்னே போங்க’ என்றார். இந்த படித்துறை போக சுலபமான வழி இருக்கிறது. முதல் நாள் தெரியாமல் வெய்யிலில் வெந்தேன். யாரும் சரியான குறிப்பு கொடுக்கவில்லை. அன்று இல்லத்தரசி திரும்பி வந்தபோது அஷ்டவக்ரன் (அரவிந்தனின் நண்பன்) நிழலிலேயே திருப்பி அழைத்து வந்துவிட்டான். பிரச்சினையே இல்லை என்றார். சரி என்று அடுத்த முறை அதில் போய் கற்றுக்கொண்டேன்ஆற்றுக்கு இணையாகவே தெருக்கள் எல்லாம் இருக்கின்றன. முதல் நாள் போன வழி கொஞ்சம் இடது திரும்பி பின் வலது என்று சொன்னேன் அல்லவா? அப்படி இல்லாமல் வலது பக்கமே திரும்பினால் ஆயிற்று. குறுகலான வீதி. அவ்வப்போது இரு சக்கர வண்டியும் பசு மாடும் கடந்து போகும். ஏறத்தாழ முழுக்க நிழலே. கடைசியில் இது சிவாலயா காட்டுக்கு கொண்டு விடுகிறது. அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. பெரிய வெற்று வெளியும். இடது பக்கமாக கீழே இறங்கினால் படித்துறை. நேராகவும் போகலாம். அடுத்த காட்டுக்கு போகும். இதே வழியில் தொடர்ந்து போனதில் வழியில் உள்ள உணவக காவலாளி, பசுமாடுகள் நாய்கள் எல்லாம் பழக்கமாகிவிட்டன. நாங்களும் படித்துறைக்கு போய் சேர்ந்து விட்டோம்.

 இன்றைக்கு காலையில் கொஞ்சம் தூறல் இருந்தது. இப்போது நல்ல காத்து. ஆனால் சூடு ஏற ஆரம்பித்து விட்டது. நேற்று பார்த்த படகைக் காணோம். சரி என்று படிகளில் உட்கார்ந்து இருந்தோம். ஒரு கால்மணி நேரத்தில் நேற்று பார்த்த ஒரு பிராமணர் வந்து சேர்ந்தார். அவர் ஒரு இடத்தில் போய் நின்றுகொண்டு போனில் பேசிக்கொண்டே இருந்தார். மற்றவர்களை கூப்பிடவா இல்லை வேறு விஷயமா தெரியாது. மெதுவாக இன்னும் 2-3 பேர் வந்து சேர்ந்து கொண்டார்கள். வாத்தியார்? அவரைத்தான் காணவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது. தொடரும் வயிற்றுப் போக்கில் மிகவும் தளர்ந்து போய் இருந்தேன். அங்கேயே படுத்துக் கொண்டு விடலாமா என்று தோன்றியது. ஆனால் தரையோ சூடாக இருந்தது. படகு வந்து விட்டாலாவது அதில் போய் உட்கார்ந்து செட்டிலாகி விடலாம் என்று பார்த்தால் அதையும் காணோம். ஒருவழியாக எட்டரை மணிக்கு பொறுமை இழந்து நான் ரூமுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். படிகளில் ஏற ஆரம்பித்தேன். அதன் கடைசியில் இருந்த ஆல மரத்தின் பின்னால் இருந்து வெளியே வருகிறார். கையில் போன். நான் கிளம்பிட்டேன் என்று யாரோ சொல்லி விட்டார்களா இல்லை தற்செயலா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் நான் நின்று விட்டேன். வாத்தியார் கிட்ட வந்து என்ன ஆச்சு என்று கேட்டார். நான் சொன்னேன்: ‘எனக்கு பொறுமை போய்விட்டது வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. என்னும் ஆரம்பிக்கிற அறிகுறியே காணமே’ என்றேன். ‘என்னண்ணா செய்வது, பிராமணர்கள் வரணும் என்றார். அவர்கள் வந்து அரைமணி நேரம் ஆயிற்று என்றேன். பிறகு ‘என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் வேண்டுமானால் ரூமுக்கு போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாருங்கள்’ என்றார். ஆசுவாசம் எல்லாம் ஆக மாட்டேன். எவ்வளவு நேரம் ஆனாலும்  இதற்கு மேல் உடம்பு தேறப்போவதில்லை. கடுப்பாகி விட்டது என்பதால் கிளம்பினேன்’ என்று சொன்னேன். அவர் ‘சரி, நீங்கள் இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டார். இதோ பார் இவர்கள் எல்லாம் ஏற்கனவே இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இவர்களை மேலும் காக்க வைக்க மாட்டேன். உடனடியாக ஆரம்பிப்பது என்றால் வருகிறேன்; இல்லையானால் ரூமுக்கு போகிறேன் என்றேன். இல்லை இல்லை, உடனே ஆரம்பித்து விடலாம்’ என்றார். படகை காணமே என்றேன். இல்லை படகு இங்கே தான் இருக்கிறது என்றார். சரி என்று கீழே போனோம்.

 

 இப்படி வருகிறவர்களை அலைக்கழிப்பது சரிப்படவே இல்லை. ஆனால் இந்த மாதிரி இடங்களில் எல்லாம் அனேகமாக இப்படித்தான் இருப்பதாக படுகிறது. ஒரு டீமாக வேலை செய்யும்போது ஒரு சரியான புரிதல் வேண்டாமா? மற்றவர் மீது பழி போடுவது மிகச்சுலபமாக இருக்கிறது. நேரம் தவறாமை பற்றித்தான் கவலையே இல்லை சரி, கால் மணி தாமதமாகலாம். இல்லை தவிர்க்க முடியாவிட்டால் அரை மணி. தாமதமாகும் என்றால் ஒரு சின்ன தகவல் தெரிவிப்பதுகொஞ்சமாவது அக்கறை? ஊஹும்! இந்த அழகுக்கு ‘என் ஆரோக்கியத்தின் ரகசியம் எதைப்பத்தியும் கவலைப்படாமல் இருப்பது’ என்கிறார்கள். ஒரு வேலையை செய்து கொடுப்பதாக கமிட் செய்து விட்டு அதை செய்யாமல் காலம் தாழ்த்தி விட்டு ‘எதைப்பற்றியும் கவலை இல்லை’ என்றால் என்ன சொல்லுவது?

கல்கத்தா நண்பர் முன்னேயே ‘ஊரில் இருந்தே வாத்தியார் அழைத்து வந்துவிடுங்கள். உள்ளூர் வாத்தியாருக்கு எப்போதுமே ஒரு நிர்பந்தம் இருக்கும்.’ என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். 15 நாள் ஆயிற்றே என்று யோசித்தோம். இருந்தாலும் அது போலவே செய்ய நினைத்து பேசிய வாத்தியாருக்கு கடைசியில் மாமனார் உடல்நிலை மோசமாகி கிளம்ப முடியாமல் போனது. துரத்ருஷ்டம்!



No comments: