Pages

Wednesday, July 20, 2022

காஶி யாத்திரை - 28 காஶி - 11




காஶி யாத்திரை - 28 காஶி - 11
அரவிந்தனும் அஷ்டாவக்கிரனும் 7 மணிக்கு கயாவுக்கு கிளம்பும் ஒரு வேனில் கிளம்புவதாக ஏற்பாடு. அவர்கள் 12 மணி போலத்தான் போய் சேர்வார்கள். நாங்கள் எட்டரைக்கு போய்விடுவோம்.
சற்று ஓய்வெடுத்துவிட்டு எல்லாவற்றையும் பேக் செய்ய ஆரம்பித்தோம். அடுப்படியை ஒழித்து எல்லாவற்றையும் சுத்தி செய்து ஒப்படைத்துவிட்டு மூன்று மணிக்கே கணக்கைத் தீர்த்து விட்டு கிளம்பினோம். ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தபோது மணி மூணரை. அங்கே வழியே லாபியில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். வழக்கம் போல் போதிய இருக்கைகள் இல்லை; ம்ம்ம்ம் இருக்கைகளுக்கு இடமுமில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். இந்த இடத்தில்தான் இதுவரை நான் பார்த்திராத அளவுக்கு பெரிய மின்விசிறியை பார்த்தேன். படம் எடுத்தேனா என்று நினைவில்லை. இல்லை போலிருக்கிறது. அறிவிப்பு பலகை வண்டி வரும் நேரம் 4-10 என்று காட்டிக்கொண்டிருந்தது. அது மெதுவாக நாலரை என்றாகிவிட்டது. நான்கு மணி போல நாங்கள் லாபியில் இருந்து கிளம்பி எட்டாவது பிளாட்பார்ம் போக வேண்டியிருந்தது. அங்கே போனோம். இந்த ரயில் நிலையத்தில் ஒவ்வோர் இடத்திலும் எஸ்கலேட்டர் இருக்கிறது. உடல்நிலை சரியில்லாத வயதான நடக்க சிரமப்படும் என்னைப் போன்றவர்களுக்கு எது பெரிய வரம். இன்னும் எஸ்கலேட்டரில் ஏற இறங்க தடுமாற்றம் வரவில்லை என்பது இன்னும் பெரிய வரம். எட்டாவது பிளாட்பாரத்துக்குப் போய் அங்கே கொஞ்சம் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். அரவிந்தன் கைபேசியை பார்த்து அரைமணி தூரத்தில்தான் இருக்கிறது என்று ஒரு மணி நேரமாக சொல்லிக்கொண்டிருந்தார். அது நகரவே இல்லை போலிருக்கிறது. இது ஒரு பிரச்சனை. எப்போதுமே தாமதமாகும் வண்டி மேலே மேலே தாமதமாகிக் கொண்டே போகும் என்பது எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இருக்கிறது. அது இன்னும் அப்படியேதான் இருக்கிறது போலிருக்கிறது. இது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். அறிவிப்பு பலகையில் நேரம் மாறிக் கொண்டே இருந்தது. இதற்குப் பின்னால் வருவதாக சொல்லப்பட்ட வண்டிகள் முன்னதாகவே வந்து கிளம்பி போய்க் கொண்டிருந்தன. ஒரு ஆறு மணி போல் இது அறிவிப்பு பலகையில் இருந்தே காணாமல் போய்விட்டது.
இந்த எட்டாம் பிளாட்பாரத்தில் இன்னும் கட்டுமான வேலைகள், கொஞ்சம் கூடுதல் வேலைகள் கொஞ்சம் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. சிறுநீர் கழிப்பதற்காக இடத்தை தேடி பிளாட்பார்மில் முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர் போய் பார்த்தாகிவிட்டது. ஒரு இடத்தையும் காணோம். இதற்கு நடுவில் அறிவிப்பு பலகையில் இருந்து போய்விட்ட இந்த வண்டி வந்துவிட்டதானால் என்ன செய்வது என்று ஒரு பிரச்சனை வேறு மனசில் இருந்தது. கடுப்பாகிப் போய் கடைசியில் கைபேசியில் தேடிப்பிடித்து டிவிட்டரில் ஒரு மெசேஜ் போட்டேன்.

Worst times. Send railways have not improved at all since Inc days. been waiting for Doon express in Varanasi since 3-30. Still no signs of train. Worst experience for a 69 year old with ill health.
@RailMinIndia
6:23 PM · Apr 22, 2022·
பதில் வந்தது.
Kindly share your PNR number and mobile no. via DM so that we may assist you. You may also raise your concern directly on http://railmadad.indianrailways.gov.in or dial 139 for speedy redressal. #OneRailOneHelpline139

உடனே அதுக்கு பதில் போட்டேன்.

PNR 2337829948 Cell.. 7*******26

6:31 PM · Apr 22, 2022·

அப்பறம் ஒண்ணும் நடக்கலை. ஆனா திடுதிப்புன்னு ரயில் வந்தாச்சு. வழக்கம் போல நான் என் பையை மட்டும் எடுத்துகொண்டு தனியிடம் ஓடினேன். பத்து கோச் தள்ளிதான் என்னோடது. எட்டரை மணிக்கு போய் சேர்வதாக டைம் டேபிள். அதனால் சீட் மட்டுமே வாங்கி இருந்தது. இப்போது எட்டரைக்கு எங்கே போய் சேர்வது? இரவு டிபனும் தண்ணீரும் பையர் கொண்டு வந்து கொடுத்தார்.
ரிசர்வ் கம்பார்ட்மெண்ட். ஆனா கூட்டமோ கூட்டம்! அங்கிங்கெனாதபடி எங்கும் மக்கள் நிறைந்திருந்தார்கள். என் சீட்டை கண்டுபிடித்தேன் ஜன்னலோரம் தனி இருக்கை. அங்கே பார்த்தால் ஒரு குண்டு பெண்மணி உட்கார்ந்திருந்தார். இது என் சீட் என்றேன். பிரச்சினை இல்லாமல் பக்கத்து சீட்டுக்கு போய்விட்டார்.
அதே போல எதிர் சீட்டுக்கு வந்தவர் அங்கே இருந்தவரை எழுப்பி விட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டார். டிடிஈ எல்லாம் கடைசி வரை வரவே இல்லை. டாய்லெட்டில் தண்ணீர் இல்லை! கோச்சே வழக்கமான கோச் போல இல்லை. ஏதோ ‘அஜீஸ்’ செய்தது மாதிரி இருந்தது.
ஒரு வழியாக செட்டில் ஆகிவிட்டு செல்லை திறந்தால் இப்படி ஒரு மெசேஜ்:

RailwaySeva
@RailwaySeva
Replying to
@drtvasudevan
Sir, We are still waiting for details (http://M.No. and PNR No.) so that we register your complaint and expedite resolution.

6:38 PM · Apr 22, 2022·OneDirect Suite - P

ராமான்னு நினைச்சுண்டு பதில் போட்டேன்.

I have sent it. At last train arrived and am seated. Wonder what you can do for me now thanks anyway.
6:51 PM · Apr 22, 2022·
ஒரு வழியா அந்த பஞ்சாயத்து முடிஞ்சது.
கொல்கத்தாவில் தங்கியிருந்தபோதே பயணத்துக்கு உகந்த உணவு பற்றி பேச்சு எழுந்தது. அப்போது நான் சொன்னேன் இதை பாருங்கள் நாம் வீட்டில் சாப்பிடுவது படி சாப்பிடுவோம் என்று எதிர்பார்க்கக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் மற்றவர்கள் இருப்பார்கள். டாய்லெட்டில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. கை சுத்தப்படுத்திக் கொள்ள முடியுமா முடியாதா என்பதெல்லாம் விஷயங்கள். அதனால் என்ன செய்யவேண்டும் என்றால் முடிந்தவரை பிரச்சனை இல்லாதபடிக்கு சாப்பிடும்படி செய்ய வேண்டும். உதாரணமாக பூரி செய்வதாக இருந்தால் சின்னச் சின்னதாக. ஒன்று எடுத்தால் அப்படியே வாயில் போட்டுக் கொள்ளும்படி செய்ய வேண்டும். பெரியதாக வழக்கம்போல் செய்துவிட்டு அதை உடைத்து கொண்டு என்று செய்வதே சரியாக வராது. எதானாலும் சின்ன சின்ன யூனிட்டாக ஒவ்வொன்றும் வாயில் கொள்ளும் அளவில் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போது தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்றார்கள். முடிந்தவரை ஈரம் இருக்கும் விஷயமாக வேண்டாம். காய்கறிகள் போட்டு ஏதாவது செய்தால் என்ன? அந்த பாத்திரத்தையும் கழுவ வேண்டி இருக்கும். அதை பொட்டலமாக்க முடியாது. ரொம்ப அருமையான ஐடியா சொல்லுகிறேன். வாயில் கொள்ளும்படியான சமோசா. யோசித்துப்பாருங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் அவசியமில்லை. எல்லாம் உள்ளே இருக்கிறது. ஒரு சின்ன பேப்பர் டவல் வைத்துவிட்டால் கையை கழுவிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் கூட இந்த பேப்பர் டவலால் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு முடித்துவிடலாம்.
 இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் இந்த நேரத்துக்கு இரவு உணவு சின்ன சின்ன பூரியாக கொடுத்திருந்தார்கள். டாய்லெட்டில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன் அல்லவா. இப்போது பிரச்சினையே இல்லை.
சில பேருக்கு பயணத்தில் மற்றவர்களை கவனிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. பொதுவாக இந்த பயணங்களில் நான் ஜெபத்தில் உட்கார்ந்து விடுவேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காததால் மனது ஒன்றவில்லை. ஆகவே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். கங்கையைத் தாண்டி ரயில் போவது, வழியில் வரும் ஸ்டேஷன்கள் அப்போது செல்பேசியில் நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்ப்பது என்று நேரம் போய்விட்டது.

ரயிலில் இருந்து வரனாசி 'காட்' கள்.

 
 

No comments: