அடுத்த நாள் விஷ்ணுபாத ஶ்ராத்தம்.
நாங்கள் கயையில் 3 ஶ்ராத்தங்கள் செய்தோம். மொத்தம் 126 ஓ என்னவோ ஶ்ராத்தங்கள் கயையில் செய்ய இருக்கின்றனவாம். அனைத்து இடங்களும் இந்த விஷ்ணு பாத கோவிலை மையமாகக்கொண்டு சுற்றி அமைந்துள்ளன. கயை நகரமே
மங்கள-கௌரி, ஶ்ரீசிங்கஸ்தான், ராம்-சிலா, பிரம்மஹோனி என்ற குன்றுகள் மற்றும் கிழக்கில் பல்குனி நதியும் சூழ அமைந்துள்ளது. நதிக்கு அந்தப்பக்கமும் குன்றுகளை பார்த்தேன். இந்த ஶ்ராத்த இடங்கள் அனைத்தும் இந்த குன்றுகளிலும் கூட இருக்கின்றன. அவற்றுக்கு கஷ்டப்பட்டே ஏறிப்போக வேண்டும். அனைத்து சாமான்களையும் கூடவே தூக்கிகொண்டு போக வேண்டும். இந்த காலத்தில் எவ்வளவு சிரம சாத்தியம்!
இன்று மாத்ரு ஷோடசி சொல்லி பிண்டங்களை வைக்க வேண்டும். அதனால் கூடுதல் பிண்டங்கள் வேண்டும் என்று வாத்தியார் சொன்னார்.
இன்றும் காலையில் பையரும் நானும் கிளம்பிப்போய் தீர்த்தம் கொண்டு வந்தோம். நேற்று நடந்த ஶ்ராத்தத்துக்கும் இன்றைய ஶ்ராதத்துக்கும் கூடுதல் பிண்டங்களே வித்தியாசம். ஏறக்குறையே அதே நபர்கள்தான் இன்றைக்கும் வந்திருந்தனர். சாப்பிடும் நேரத்துக்கு குழாய் ரிப்பேர்காரர் வர கதவுகளை சார்த்திப்பார்த்து சரிப்பட்டு வராமல் அவரை அப்புறம் வரச்சொன்னோம்.
ஶ்ராத்தம் ஒன்றரை மணிக்கு முன்பு முடிந்துவிட்டது. மந்திரங்கள், நடைமுறை எல்லாம் இப்போது வெகுவாகவே பழக்கம் ஆகிவிட்டு இருந்ததே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த பிண்டங்களை விஷ்ணு பாத கோவிலில் வைக்க வேண்டும் என்று கிளம்பிப்போனோம். வந்திருந்த ப்ராம்ஹணர்களில் ஒருவர் நான் உதவி செய்ய வருகிறேன் என்றார். சரி என்று அழைத்துக்கொண்டோம். ஏகப்பட்ட செக்யூரிட்டி! செல்போன் போன்ற எதையும் அனுமதிக்கவில்லை. உள்ளே நடை சார்த்தி இருந்தது! இதோ திறந்து விடுவார்கள் என்றார்கள். அந்த இதோ இரண்டரை வரை ஆயிற்று!
என்னடா என்று பார்த்தால் பின்னல் தினமுமே ஒன்று முதல் இரண்டரை வரை நடை சார்த்தி சுத்தம் செய்து விஷ்ணு பூஜை செய்கிறார்கள் என்று தெரிய வந்தது. இவ்வளவு முறை இங்கே வரும் வாத்தியாருக்கும் இது தெரியவில்லை. போகிறது அந்த உள்ளூர் ப்ராம்ஹணராவது சொல்ல வேண்டாமோ? கொஞ்சம் சுருக்க வந்திருந்தால் முடித்திருக்கலாம் போல தோன்றியது.
நாங்கள் போன போது ஓரிருவரே இருந்தனர். இதோ என்று சொன்னதால் முன்னால் க்யூவில் நின்றோம். அந்த இதோ இப்போதில்லை என்று தோன்றிய போது நல்ல கூட்டம் கூடிவிட்டது. திருப்பதி மாதிரியான மக்கள். நானும் பையரும் கிளம்பிவிட்டோம்.
ஶ்ராத்தம் குறித்த தொடரில்
/ ஶ்ராத்தத்தின் போது உபவீதியாக ‘ஈசான விஷ்ணு’ என்ற ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதில் ஈசானன், விஷ்ணு, பிரம்மா, குகன், ஆஹவனீயம் தக்ஷிணாக்கினி என்று மூன்று அக்னிகள், சூரியன், சந்திரன், பிள்ளையார், க்ரௌஞ்ச மலை, தேவ இந்திரன், அகஸ்தியர், கச்சியப்பர் இவர்களுடைய பாதங்களை பித்ருக்கள் முக்தி பெறுவதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். (இந்த பாதங்கள் கயையில் சிலா ரூபமாக உள்ளன.) /
என்று எழுதி இருந்தேன் நினைவிருக்கிறதா? இவற்றை போய் பார்த்தோம். பெரிய்ய்ய்ய கல் மண்டபத்தில் இவை எல்லாம் கல் தூண்கள் ரூபத்தில் உள்ளன. பாதி தூண்களில் பெயர் எழுதி இருக்கிறது. மீதியில் இல்லை. எப்படியும் அவற்றை வேறு படுத்திப்பார்க்க ஒரு அடையாளமும் காணோம். தரை மேடு பள்ளமாக இருக்கும். அண்ணாந்து பார்த்துக்கொண்டு நகர்வது உசிதம் அல்ல. சுற்று முற்றும் பார்த்துவிட்டு பின் வேறு இடம் போய் நின்றுக்கொண்டு பார்ப்பதே உசிதம்.
விஷ்ணுபாத கோவில் குறித்து பார்க்கலாம். சுருங்கச்சொல்ல… அழகு!
விஷ்ணுபாத் என்ற குன்றின் மீது விஷ்ணுவின் பாதம் உள்ளது. கயாசுரனைக் கொல்லும் போது, ஒரு காலை இக்குன்றின் மீதும், அடுத்த காலை அசுரனின் மார்பின் மீது வைத்ததால், அப்பாதம் உருவானது என்று ஐதீகம். இப்பொழுதுள்ள விஷ்ணு பாத கோவில் அஹல்யாபாய் ஹோல்கர் என்ற இந்தூர் மஹாராணியால் 1780ல் கருங்கற்களினால் கட்டப்பட்டதாகும். ஆமாம். காசி விஸ்வநாத ஆலயத்தை கட்டிய அதே அஹல்யாபாய் ஹோல்கர்தான்.
அஷ்டகோண வடிவில் 100 உயரத்தில் உள்ள பிரகாரத்தின் நடுவில் இப்பாதம் கருங்கல்லில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 16 இன்க் இருக்கலாம். கூரை வெள்ளியால் வேயப்பட்டுள்ளது. அழகாகச் செதுக்கப்பட்ட பல தூண்களால், இரண்டு அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் பிரகாரங்கள், சன்னதிகள் உள்ளன. பூஜையின் போது, வெள்ளியினால் செய்யப்பட்ட அஷ்டகோணத்தில் உள்ள பீடத்தைச் சுற்றிலும் இருக்கும்படி வைத்து அபிஷேகம், ஆராதனை செய்து அலங்காரம் செய்கிறார்கள்.
இங்கே இன்னொரு விசேஷமான கோவில் மங்கள–கௌரி கோவில். சக்தி பீடம்: சதியின் உடல் பாகங்களில் இரு மார்பகங்கள் இங்கு விழுந்ததால் புனிதமாகக் கருதப்படுகிறது. உண்மையில் இரு உருண்டையான கற்கள் கோவிலில் காணப்படுகின்றன என்கிறார்கள்.. இக்கோவில் சுற்றும் இடிந்த பகுதிகள் காணப்படுகின்றன. கோவில் அக்ஷய்ய வடம் போகும் வழியில் சற்றே விலகி இருக்கிறது என்றூ பின்னால் தெரிய வந்தது. முன்னால் தெரிந்திருந்தால் போயிருக்கலாமோ என்னவோ. முன்னே சொன்னது போல கோவில்கள் பற்றி சிந்தனையே இல்லை.
சரி சரி… அதோ கொஞ்சம் பரபரப்பு. நடை திறக்கிறார்கள் போலும். நானும் பையரும் போய் க்யூவில் சேர்ந்து கொண்டோம். அடித்துப்பிடித்து மக்கள் முன்னே போனார்கள். இதற்கு அங்கே உள்ளே இருந்தவர் ஒருவரிடம் அழைத்து வந்த ப்ராம்ஹணர் ஏதோ ஜாடை காட்டிவிட்டார். அவரும் கூப்பிட்டு இங்கே உக்காருங்கள் என்று உட்கார்த்தி வைத்துவிட்டார். கிழக்கே பார்த்து உட்கார்ந்து கர்மாவை ஆரம்பித்துவிட்டோம். நேரடியாக விஷ்ணு பாதத்தில் சமர்ப்பணம் என்பதால் தர்ப்பை போடுவது ஆவாஹனம் என்பது இல்லை. அதே போல வரிசை இல்லை. அந்த அஷ்ட கோண தொட்டியில் போட்டால் போதுமானது என்றாலும் முடிந்த வரை விஷ்ணு பாதத்திலெயே போட முயற்சி செய்தேன். 10 நிமிடங்களில் மொத்த கூட்டமும் காலி! அப்புறம் நாங்கள் மட்டுமே இருந்தோம். எல்லாரும் அவரவர் கொண்டு வந்த பிண்டங்களை மூட்டையில் இருந்து கொட்டிவிட்டு தக்ஷிணை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். நிதானமாக செய்து முடித்து பண்டாவுக்கும் கூட்டி வந்த ப்ராம்ஹணருக்கும் தக்ஷிணை கொடுத்து மீண்டோம். மூன்றே கால் போல சாப்பிட்டோம்.
அடுத்த நாள் அஷய்ய வட ஶ்ராத்தம்.
No comments:
Post a Comment