Pages

Wednesday, July 27, 2022

காஶி யாத்திரை - 30 கயா - 1





காஶி யாத்திரை - 30 கயா - 1
கயாவில் முதல் நாள் கர்மா ஆரம்பித்தது. இப்போது ஒரு சௌகரியம். வாத்தியார் பக்கத்து ரூமில் தான் இருந்தார். கயை தவிர வேறு எங்கும் காரியத்தை இப்போது ஏற்றுக் கொண்டு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட முடியாது. தங்கியிருந்த இடம் சங்கர மடம். வழக்கம்போல ப வடிவில் கட்டிடம். தங்கும் அறைகள் பரவாயில்லை. எக்கச்சக்க ஈக்கள். ஏதோ பிரச்சனை. அடிக்கடி தண்ணீர் வரவில்லை மோட்டார் போடுங்கள் என்று சொல்லி போட்டுக் கொள்ள வேண்டி இருந்தது. அங்கே நிர்வாகி பிரம்மச்சாரி இளைஞர். பாவம் அனுபவமில்லை. என்ன பிரச்சனை என்று புரியவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சப்ளை சீக்கிரம் நின்று விடுகிறது என்றால் சப்ளை லைனில் எங்கோ லீக் இருக்கிறது. கவனியுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். ஆள் கிடைக்காமல் அடுத்த நாள் குழாய் ரிப்பேர் செய்பவர் வந்து லீக் பார்த்து சரி செய்தார். அதேபோல மின்சார சப்ளை ஏதோ பிரச்சனை. அடிக்கடி போய்க்கொண்டிருந்தது. பக்கத்து ட்ரான்ஸ்பார்மர் பிரச்சினை என்றார்கள்.
வாத்தியார் 9 மணி போல ஆரம்பிக்கலாம் என்று சொல்லி நிஜமாகவே ஒன்பது மணிக்கு ஆரம்பித்துவிட்டார். மடத்திலிருந்து கோவில் ஐந்து நிமிட நடைதான். ஆனால் நிஜமாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆட்டோ பிடித்து போய் விடலாம் என்றார்கள். நான்தான் கிறுக்கு ஆயிற்றே. நீங்கள் ஆட்டோவில் வாருங்கள் நான் முன்னால் போகிறேன் என்று நடக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு 50 மீட்டர் போவதற்குள் போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு ஸ்கூல் பஸ் எதிரே வான் முதலியவை, ஒன்றையொன்று தாண்ட முடியாமல் பிரச்சனைகள் இருந்தது. அதனால் மற்றவர்களும் ஆட்டோவிலிருந்து இறங்கி என் பின்னாலேயே நடந்து வந்து விட்டார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிரமப்பட்டு அந்த நெரிசலான இடத்தை கடந்து விட்டோம்.
எங்கள் செருப்புகளை எல்லாம் போகும் வழியில் ஒரு கடையில் விட்டுவிட்டோம். அந்த கடையில் விஷ்ணு பாதம் முதலான சில விஷயங்களை மக்கள் வாங்கினார்கள்.
 
வறண்ட பல்குனி நதி

பல்குனி நதி வறண்டு கிடந்தது. படத்தை பாருங்கள். போன வாரம் போன போதும் கூட அப்படியேதான் இருந்தது. ஆனால் ஒரு இரண்டடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டால் நாமே தூண்டி தண்ணீரை எடுத்துக் கொள்ள முடிந்தது. இங்கே ஒரு அடி பம்ப் போட்டிருக்கிறார்கள். இது பல்குனி நதி தண்ணீர் தானே; இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். ஏனோ எங்களுக்கு திருப்தி ஆகவில்லை. ஒரு 100 தப்படி தூரத்தில் ஒரு பண்டா ஷமியானா போட்டிருந்தார். கிணறு தோண்டி வைத்திருக்கிறார் என்று தெரிந்தது. நானும் பையரும் அங்கே போய் கை கால் சுத்தி செய்து கொண்டு கொஞ்சம் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு ஒரு தாமிர பாட்டிலில் அனுஷ்டானத்துக்கு தண்ணீரைக் கொண்டு வருவதற்காக தயாரானோம். கை பம்பில் தண்ணீர் அடித்து கைகால்களை கழுவிக்கொண்டு உடனே கூடியவரை ஓடிப்போய் போய்விட வேண்டும்; மீதி தூரத்தை சூட்டை பொறுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று முடிவு செய்தோம். அதுபோலவே நான் முதலில் ஓடிப் போய் விட்டேன் பையனும் பின்னாலேயே ஓடி வந்துவிட்டார். இரண்டு பேரும் ஷமியானா நிழலுக்கு போய் சேர்ந்து அப்பாடா என்று மூச்சு விட்டோம். ஏறத்தாழ 75 பர்சன்ட் தூரத்தை பிரச்சினையில்லாமல் கடந்துவிட்டோம். மீதி தூரம் சூடான மணல் ஒரு கை பார்த்து விட்டது.
எங்களைப் பார்த்தவுடன் அந்த பண்டா வரவேற்றார். அவர் அனுமதியுடன் முதலில் பையர் கீழே இறங்கினார். சுமார் 15 அடி ஆழம் ஆறு அடி விட்டத்திற்கு குழி. அதில் நடுவில் ஒரு இரண்டரை அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. நீரை முகர்ந்து கொண்டு குழியின் ஓரத்துக்கு தள்ளி வந்து கைகால்களை சுத்தம் செய்துகொண்டு பின்னால் பாட்டிலை நிரப்பிக்கொண்டு தலையையும் ப்ரோக்‌ஷணம் பண்ணிக்கொண்டு மேலே வந்து சேர்ந்தார். என்ன கொடுக்கட்டும் இவருக்கு என்று கேட்டார். ஒரு ஐம்பது ரூபாய் கொடுக்கலாம் என்று சொன்னேன். அவர் திருப்தியுடன் வாங்கிக்கொண்டு விட்டார். நானும் கீழே இறங்கி ப்ரோக்‌ஷணம் செய்துகொண்டு கைகால்களை சுத்தி செய்து கொண்டு மேலே வந்து விட்டேன். இப்போது கால்கள் ஈரமாக இருந்ததால் மீண்டும் ஓட்டமாக ஓடி பாதி தூரத்தை கடந்து, பின்னால் சூடான மணலில் மீதி தூரத்தை கடந்தோம். நேராகப் போய் கை பம்பி தண்ணீர் அடித்து கால்களை குளிர்வித்து கொண்டோம்.

ஆனால் வரும் காலத்தில் இது பிரச்சினையாக இருக்காது என்று தோன்றுகிறது. ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் செக் டேம் ஒன்றை கட்டுக்கொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்டவர் வாழிய!
இந்த ஆற்றங்கரையில் இருந்து பார்த்தால் நிறைய படிகள் இருக்கின்றன. வெறுமனே அடுத்த படி பார்த்துக்கொண்டு மேலே ஏறுவது உசிதம். அந்த காலத்து மக்கள் பத்தடி உயரம் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு தோதாக ஒன்னரை அடி உயரம் படிகள் இருந்தன. சிரமப்பட்டுதான் ஏற வேண்டியிருந்தது. இந்த இடம் கொஞ்சம் மாறிப் போய் விட்டாலும் பெரும்பாலும் அப்படியே இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இந்தப் படிகளுக்கு இடையே கொஞ்சம் தட்டையான பூமி வரும். இங்கேதான் போனமுறை வந்தபோது கூட வந்த உதவியாளர் ஒன்பதே ஒன்பது விராட்டிகளை வைத்துக்கொண்டு எப்படி சரு தயார் செய்வது என்பதை காட்டினார். மூன்று லேயராக முக்கோணமாக 3 விரட்டிகளை வைத்து கீழே கொளுத்திப்போட்டுவிட்டு மேலே உங்கள் பாத்திரத்தை வைத்து அரிசியை களைந்து போடுங்கள் என்றார். பல்குனி நதியில் இருந்து வந்து கொண்டிருக்கும் இதமான காற்று அதை எரிய வைத்துக் கொண்டே இருந்தது. வெகு சீக்கிரத்தில் சரு தயாராகிவிட்டது.
இப்போது தீர்த்த சிராத்தத்தை பார்வண விதமாக செய்வதாக இருந்ததால் இங்கே வெறும் சங்கல்பம் மட்டும். படிகளின் முடிவில் ஒரு கோவில் இருக்கிறது. அதன் முன் மண்டபத்திற்கு போய் சேர்ந்தோம். இதன் எதிரே இருந்த இடத்தில் ஆறுக்கு ஆறு வரிசையில் ஒரு பேட்ச் ஹோமம் செய்து விட்டு போயிருந்தார்கள். அதைப் போலப் பிண்டங்களையும் வைத்து விட்டு போயிருந்தார்கள். கோவில் பண்டா பெண் போல் இருக்கிறது; ஒருவர் எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்தார். நாங்கள் உட்கார்ந்து கயா யாத்திரை சங்கல்பம் செய்தோம். பிறகு அன்றைய பல்குனி நதி ஶ்ராத்த சங்கல்பத்தை செய்தோம். முடித்துவிட்டு அங்கேயே தர்ப்பணம் செய்தோம். கோவில் பண்டாவிடம் கேட்டு தர்ப்பணத்துக்கு சில தட்டுகளை வாங்கிக் கொண்டோம். இதெல்லாம் முடிந்த பிறகு அவருக்கு தட்சிணையை கொடுத்துவிட்டு தங்கும் இடத்துக்கு வந்து விட்டோம். பெண்கள் சமையல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
 

 

No comments: