Pages

Monday, July 4, 2022

காஶி யாத்திரை - 24 காஶி - 7




 
தரிசனம் முடித்துக்கொண்டு திரும்பினோம். மாத்யான்ஹிக ஸ்நானம் செய்யலாமா என்று பார்த்தேன். அவர்கள் எந்த ‘காட்’ டுக்கு போய் நாம் ஶ்ராத்தம் செய்கிறோமோ அந்த இடத்தில் எப்படியும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். சரி சேர்த்தே செய்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ரவை கஞ்சி கொடுத்தார்கள். எதுவும் வயிற்றில் நிற்கவில்லை என்பதால் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டாமென்று கரிசனம். முந்தின நாளே காலையில் காப்பி குடித்துவிட்டு கங்கைக்கு போய் ஸ்நானம் பண்ணி திருப்பி வரும் முன்னே வயிறு கலங்கி டாய்லெட்டுக்கு ஓட வைத்தது. அதில் கொஞ்சம் கஷ்டப்பட்டு விட்டேன். இந்த பால் தான் ஒத்துக் கொள்ள வில்லையோ என்று நினைத்துக் கொண்டேன். அதனால் கஞ்சியில் பால் போடாமல் கொடுக்கச் சொல்லி இருந்தேன். அரை மணியில் அதுவும் வெளியே போய்விட நிம்மதியாக கிளம்பினேன்.
படகில் துணியால் கூரை கட்டி இருந்தார்கள். இல்லையானால் கங்கையிலேயே இருந்தாலும் வெயில் தாங்குவது கடினம், 

 

படகில் முதலில் அஸி ‘காட்’ டுக்கு போனோம். இங்கே தீர்த்தம் ஹரித்வார் தீர்த்தம். அதில் இறங்கி மும்முறை ஹிரண்யஶ்ருங்கம் சொல்லி முங்கி குளியல் போட்டு துணியை அப்படியே பிழிந்துகொண்டு மாத்யான்ஹிகம் செய்து, பிறகு தீர்த்த ஶ்ராத்தம் ஆனதால் அந்த கட்டத்துக்கான ஸ்னானம் செய்து விட்டேன். மேலே ஏறினேன். வஸ்திரங்களை அப்படியே பிழிந்துவிட்டு உட்கார்ந்து கொண்டு விட்டேன். அடிக்கிற வெயிலில் இது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இல்லை. இல்லாவிட்டால் மழை குளிர்ந்த வானிலை எல்லாம் இருந்தால் இந்த விஷயங்கள் கஷ்டம்தான். உடை மாற்ற வேண்டியிருக்கும்.

கும்முட்டி அடுப்பு ஒன்றை தயார் செய்திருந்தார்கள். அதை கரியை போட்டு அக்னியை கிளப்புவதற்குத்தான் சற்று பிரச்சனை இருந்தது. ஒருவழியாக பற்றிக்கொண்ட பிறகு பிரச்சனை இல்லை. கங்கையில் இருக்கிறோம் என்பதால் காற்று பாட்டுக்கு அடித்துக் கொண்டே இருக்கிறது. கரி போட போட அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நான் குளியலுக்கு இறங்கும்போது ஒரு வழியாக கரி பற்றிக்கொண்டு இருந்தது. ஆனால் நான் குளித்து முடித்து, மாத்யான்ஹிகம் முடித்து மீண்டும் குளித்து மேலே வருவதற்குள் சரு தயாராகிவிட்டது. இந்த கட்டங்கள் எல்லாவற்றிலும் செய்வது ஹிரண்ய சிராத்தம். ஆகவே ஆறு ப்ராம்ஹணர்களையும் முதலில் வரணம் செய்து அவர்களுக்கு யத் கிஞ்சித் ஹிரண்யம் என்று சொல்லி தக்‌ஷிணை கொடுத்தேன். பிறகு பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். அதன்பின்னர் தர்ப்பணம். அப்படியே செய்தேன். 
 

 

அடுத்த இடத்துக்கு கிளம்பினோம். தஶ அஶ்வமேத காட். இங்கே தீர்த்தம் ருத்ர ஸரோவர் தீர்த்தம்.
வாத்தியார் நான் அனுமன் காட்டில் இறங்கி கொள்கிறேன்; வேறு அவசர வேலை வந்து விட்டது; இவன் செய்து விடுவான் என்று இன்னொருவரை காட்டிவிட்டு ‘ஜூட் விட்டுவிட்டு’ ஆள் காணாமல் போய்விட்டார். ஆனால் இதில் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. கொஞ்சம் பழக்கம் ஆனால் போதும் சுலபமாக செய்து வைத்துவிடலாம். இந்த யாத்திரை முடிவதற்குள் எனக்கே இதெல்லாம் பழகி விட்டது. அதுவும் இந்த வயதில்.
அசி காட்’ டிலிருந்து வருவதற்குள் அடுத்த ஈடு சரு தயாராகிவிட்டது. அங்கே பிண்டத்திற்கு சரு எடுத்துக் கொடுத்து விட்டு உடனேயே பாத்திரத்தை அலம்பி திருப்பி அடுத்ததை வைத்து விட்டார்கள். ஆகவே கொஞ்சம் சுலபமாக போயிற்று. பிராமணர்கள் அனைவரும் அவருடைய அவர்களுடைய காரியம் முடிந்தவுடன் கிளம்பிவிட்டார்கள். பிண்ட பிரதானம் தர்ப்பணம் போன்றவற்றிற்கு அவர்கள் இல்லை. தேவையும் இல்லை. செய்துவைத்த வாத்தியார் மட்டும் இருந்தார். இவர்களுக்கு இன்று ஏதோ போட்டோ எடுக்க வேண்டும் … வாத்தியார்கள் சிஷ்யர்கள் என்று எல்லாரும்… அப்படி ஏதோ ப்ரோக்ராம் இங்கே. என்ன என்று தெரியவில்லை. ஆனால் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லாரும் கிளம்பி விட்டார்கள். நாளை மீதி மூன்றையும் முடித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். சரி நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும் என்று விட்டு விட்டோம்.

செய்து வைத்த வாத்தியார் மராட்டியர். அதனால் உச்சரிப்பு எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது இவ்வழியே மந்திரங்கள் எல்லாம் அதேதான். பழகிவிட்ட மந்திரங்கள் என்பதால் ஒன்றும் பிரச்சனை இல்லாமல் முடிந்தது. புரோகிராமை பாதியில் வெட்டிவிட்டதால் பதினொன்றரை மணிக்கு எல்லா வேலையும் முடிந்து விட்டது. ரூமுக்கு வந்து சாப்பிட்டு படுத்தேன். அன்றைக்கு வேறு எதுவும் ப்ரோக்ராம் இல்லை. அடுத்தநாள் மீதி மூன்று கட்ட ஶ்ராத்தங்களை முடிக்கவேண்டும். சமாராதனை செய்ய வேண்டும். தம்பதி பூஜை, கங்கா பூஜை செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்து முடிக்க நேரம் நிறைய ஆகிவிடும் என்று தெரியும். எப்படி நடக்கப்போகிறதோ என்று நினைத்துக்கொண்டே படுத்தேன்.
 

No comments: