ஆரம்பத்திலேயே போவது பித்ரு காரியங்களுக்காக. கோவில் போன்ற சமாசாரங்கள் இரண்டாம் பட்சம்தான் என்று தெளிவாக இருந்தேன்.
புதிய கட்டுமானம். |
வாராநதி சேருமிடம். |
வாரா காட் |
வாரா காட் பிள்ளையார் கோவில். |
புதிய கட்டுமானம். |
அதைப்போல எதையும் வாங்க வேண்டும் என்று உத்தேசித்து இருக்கவில்லை. இதனால் பல விஷயங்கள் சௌகரியமாக போய் விட்டது. இருந்த உடல்நிலைக்கு மேற்கொண்டு எந்த ஒரு வருத்தும் விஷயமும் இல்லாமல் போய்விட்டது.
அடுத்த நாள் விடிகாலையில் இரண்டரை மணிக்கு எழுந்து காசி விஸ்வநாதர் கோவிலில் மங்கள ஆரத்தி பார்க்க போக வேண்டும் என்று சொன்னார்கள். நான் தெளிவாக முடியாது என்று சொல்லிவிட்டேன். மெதுவாக நான் போய் அவரை தரிசித்து கொள்கிறேன்; இந்த இரண்டரை மணிக்கு கிளம்பி போவதெல்லாம் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். எனக்காக என் பையர் ‘சரி நான் அப்பாவை அப்புறமாக அழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று சொல்லி தங்கிவிட்டார். பெண்கள் இருவரும் அரவிந்தனை துணைக்கு அழைத்துக்கொண்டு இரண்டரை மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றால் இங்கே ஒன்றரை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கிளம்பிவிட்டார்கள். ஏற்கனவே வண்டிக்கு சொல்லி வைத்திருந்தார்கள். அங்கே நேரத்துக்கு போய் சேர்ந்து ஏகப்பட்ட கெடுபிடிகள்… ஆதார் கார்டு முதலியவற்றை காண்பித்து டிக்கெட்டை காண்பித்து உள்ளே போனார்கள் என்று தெரிந்தது. இவர்களுக்கு கர்ப்பகிரகத்தில் உள்ளே போய் தொடும்தூரத்தில் சிவலிங்கத்தை பார்த்து தரிசனம் செய்ய முடிந்தது என்று கேள்விப்பட்டேன்.
நான் வழக்கம்போல 4 மணிக்கு எழுந்து ப்ராணக்ரியா முடித்து குளித்து பையனுடன் கிளம்பி கோவிலுக்கு போனேன். நான்காம் நம்பர் கேட்டுக்கு போங்கள் என்று திருப்பி திருப்பி சொன்னார்கள். டிக்கெட் வாங்கிவிட்டு இருந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அதுவோ அந்த இரண்டரை மணி தரிசனத்துக்கு தான். எப்படியும் செல்போன் கொண்டு போகாதே, அதைக்கொண்டு போகாத, இதைக்கொண்டு போகாதே என்று சொன்னதால் பேசாமல் நான் வெறும் கையுடன் கிளம்பிவிட்டேன். பையர் பணத்துக்காக பவுச் மட்டும் வைத்துக் கொண்டிருந்தார். வண்டி ஓட்டுனர் நான்காம் நம்பர் கேட் முகப்பில் கொண்டு விட்டுவிட்டார். இறங்கி நாங்கள் பாட்டுக்கு நேரே போக ஆரம்பித்தோம். டிக்கெட் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று சொன்னோம். சரி போங்க என்று உள்ளே அனுப்பி விட்டார்கள். உள்ளே போய் நீண்ட நெடிய கியூவில் போய் நின்றோம். கொஞ்சம் சீக்கிரமாகவே நகர்ந்தது. கர்ப்பகிரகத்திற்கு முன்னால் மூன்றாக பிரித்து விட்டார்கள். ஒன்று நேராக போக, இரண்டாவது இடது பக்கம் மூன்றாவது வலது பக்கம் போயிற்று. நாங்கள் வலது பக்கம் போனோம். தவறு செய்து விட்டோம் என்று பின்னால் தெரிந்தது. மேலே நகர்ந்து போனால் சுவாமிக்கு நேராக திறப்பு இருக்கிறது. நன்றாக பார்க்க முடிகிறது. இங்கே ஒரு சூட் (chute)வைத்திருக்கிறார்கள். இதில் நாம் கொண்டுபோன கங்கைஜலம் பூ முதலியவற்றை போட்டு விடலாம். ஜலத்தை விட்டால் அது பூவையும் எடுத்துக்கொண்டுபோய் நேரே சுவாமியின் மேலே விழும்படி அமைத்திருக்கிறார்கள். இதனால் பலரும் சீக்கிரமாக தரிசனம் செய்துகொண்டு பூஜையும் செய்து கொண்டு போக முடிகிறது. அங்கே இருக்கிறதா பண்டா மாலை பூ முதலியன போட்டால் ஏற்கனவே போட்ட அவற்றை அதாவது நிர்மால்யத்தை எடுத்து கொடுக்கிறார். சட்டுப்புட்டென்று தரிசனம் முடிந்து விட்டதால் மேலே என்ன செய்வது என்று தெரியவில்லை. பிரச்சனை என்னவென்றால் நாங்கள் சன்னதிக்கு வலது பக்கம் இருக்கிறோம். இப்போது பிரதட்சணம் வர வேண்டுமென்றால் அது முடியவில்லை க்யூவை தாண்ட வழி இல்லை. ஆகவே சோமசூக்த பிரதட்சிணம் செய்வது போல இடது பக்கமாக போய் முக்கால்வாசி தூரம் போய் அங்கேயே உள்ளவற்றைப் பார்த்துக்கொண்டு அதே மாதிரி திரும்பினோம். அடுத்து ஞானவாபி எங்கே என்று தேடினோம். பார்த்தோம். கிணறை சலவைக்கல் போட்டு மூடிவிட்டார்கள். இந்த சன்னதியை ஒட்டிய வளாகம் மிகவும் பெரியதாக இருக்கிறது. நிறைய பேர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஜபம் தியானம் முதலியவற்றைச் செய்ய முடிகிறது; செய்தார்கள்; பார்த்தோம். ஓரிடத்தில் ஒரு பெரிய பேட்ச் பிராசசிங் நடந்துகொண்டிருந்தது. பல பேரை உட்காரவைத்து ஏதோ சங்கல்பம் செய்து பிராமணர் ருத்ர ஜபம் செய்து கொண்டிருந்தார். பிறகு வெளியே வந்தோம். அன்னபூரணியை தேடிக் கொண்டு போனோம். வழியில் பிள்ளையாரையும் பார்த்தோம். அன்னபூரணி கோவில் வெளியே தனியாக இருக்கிறது. இந்த இடம் இன்னும் கொஞ்சம் முன்னேறலாம். ஏதும் செய்யப்படாமலேயே இருக்கிறது. தெரு குறுகியது. கூட்டமும் அதிகம். கொஞ்சம் சிரமப்பட்டு க்யூவில் நின்று உள்ளே போனோம். தரிசனம் செய்தோம். வெளியே வந்தால் சிவப்பு தொப்பியை மாட்டிக் கொண்டு ஒரு ஐம்பது அறுபது பேர் இருந்தார்கள். குழு சுற்றுலாவாக வருபவர்களுக்கு இப்படி ஒரு ஏற்பாடு போலிருக்கிறது. கூட்டத்தில் தவறினால் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று தெரிகிறது. ஏறத்தாழ போன வழியே திரும்பிவந்து விசுவநாதர் கோயில் வாசலுக்கு வந்து அங்கிருந்த நாலாம் நம்பர் வீட்டுக்கு வந்து வெளியே வந்தோம். டுக் டுக் வண்டியோட்டி காத்துக்கொண்டிருந்தார். அதில் ஏறி திரும்பினோம். வரும் வழியில் ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தோம். இந்த டுக்டுக் வாங்க ஏறக்குறைய இரண்டரை லட்சம் செலவாகிறது. ஐம்பதாயிரம் போட்டால் மீதி கடனாகவும் மானியமாகவும் கிடைக்கிறது. இரண்டு வருஷத்துக்கு பின்னால் ஒரு 20000 செலவு செய்து பேட்டரியை பேட்டரி புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. ‘பரவாயில்லையே! அப்படியானால் ரன்னிங் காஸ்ட் என்ன?’ என்று கேட்டோம். ‘அது ஒன்னும் பிரச்சினை இல்லை 50 ரூபாய் செலவாகும் தினமும் அவ்வளவுதான்.’
‘அதை எங்கே சார்ஜ் செய்வீர்கள்?’
‘எந்த கடை பக்கத்திலும் நிறுத்தி சார்ஜ் போட்டு விட்டு வீட்டுக்கு போய்விடலாம்’ என்றார் அவர். பரவாயில்லை இது நிச்சயமாக ஒரு பெரிய முன்னேற்றம் தான் என்று நினைத்துக் கொண்டேன். சத்தம் இல்லை புகை இல்லை. சீக்கிரமாகவே போக வேண்டிய இடத்திற்கு போக முடிகிறது.
திரும்பி வந்த பிறகு சமாராதனைக்கு பெண்கள் எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன்னால் தம்பதி பூஜை கங்கா பூஜை முடித்து விட்டு வந்து விடலாம் என்று வாத்தியார் வீட்டுக்கு போனோம். வாத்தியார் அப்பாவை செய்து வைப்பார் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு வேறு வேலையாக போய்விட்டார். வாத்தியாரின் அப்பா வயோதிகர். அதாவது என்னைவிட வயது கம்மியாக இருந்தாலும் இயலாமை என்னைவிட அதிகமாக இருக்கிறது. இப்படி சிலரை பார்க்கும் போதுதான் நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம்; உடம்பு பரவா இல்லை என்பதெல்லாம் தெரிகிறது! வாத்தியாரின் அப்பா நிதானமாக சங்கல்பம் முதலியவற்றை செய்து வைத்து பூஜையை செய்து வைத்தார். அவருக்கும் அவரது தர்ம பத்னிக்கும் தம்பதி பூஜை. ப்ரயாக் இலிருந்து தமிட குடுவையில் கொண்டு வந்த கங்கை ஜலத்தில் கங்கா பூஜை. பூஜை மிக விஸ்தாரமாக இல்லாமல் அதேசமயம் மிகவும் சுருக்கமாக இல்லாமல் ஒரு அரை மணிநேரம் செய்து முடிக்கப்பட்டது. கொண்டு போயிருந்த வஸ்திரங்கள் முதலியவற்றை அவர்களுக்கு சமர்ப்பித்து விட்டு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதங்களை பெற்று ரூமுக்கு திரும்பினோம். ஒரு பதினோரு மணி போல சமாராதனைக்காக பிராமணர்கள் வந்துவிட்டார்கள். சங்கல்பம் செய்து அவர்களுக்கு சுருக்கமான பூஜை செய்து உணவளித்து உண்டபின் உபசாரங்களை செய்து புக்த தக்ஷிணை கொடுத்து நமஸ்காரங்கள் செய்து ஆசீர்வாதங்களை பெற்றோம். ஏறத்தாழ ஒரு மணிக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். மாலையில் வண்டி நாலு மணிக்கு. இதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது அரவிந்தன் கைபேசியை பார்த்துவிட்டு இந்த டூன் எக்ஸ்பிரஸ்… நேற்றைய வண்டி இன்னும் கல்கத்தா போய் சேரவில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதுவே காலை 7 மணிக்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். இன்னைய வண்டி? அரை மணி தாமதம். சரி சரி.
No comments:
Post a Comment