Pages

Tuesday, February 23, 2016

ஜீவனின் சரித்திரம் - 2


அவள் பின்னே சற்று விலகி நின்றனர் சேவகர் பதின்மர். செயலுக்கு துடிப்பவர் ஐவர். உள்ளதை உள் வாங்கும் உணர்வோடு நிற்பவர் ஐவர். ஒவ்வொருவரும் ஒரு விதம். பார்க்கையில் ஒவ்வொருவரின் பின்னும் நூற்றுக்கணக்கான வேலையாட்களும் சேடிகளும் இருந்ததாக தோன்றியது. முன்னாலோ ஐந்து பெரிய நாகங்கள் இடையறாது உலவின. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருந்தாலும் அவற்றின் உலாவல் ஒரு பெரிய ஐந்து தலை நாகமோ என்று மயக்கத்தை கொடுத்தது.

நாணம் கலந்த புன்சிரிப்புடன் கூடிய அவளது பார்வையில் வீழ்ந்த ஜீவா மென்று விழுங்கி பேசலானான். “ கமலக்கண்ணி நீ யார்? நற்குணங்கள் படைத்தவள் போலிருக்கிறாய். நீ யாரைச்சேர்ந்தவள்? எங்கிருந்து வந்தாய்? இந்த நகரில் உனக்கு என்ன வேலை? உன்னுடைய இந்த சேவகர்கள் யார்? இந்த சேடிகள் யார்?
இந்த ஐந்து தலை நாகம் எப்படிப்பட்டது? அது ஏன் உன் முன் உலவுகிறது?
நீ ரமா தேவியா? பூமி தேவியா? சரஸ்வதியா? உமையா? இருக்காது, உன் கால்கள் பூமி மேல் படுகின்றன. முனிவர்போல இந்த வனத்தில் சஞ்சரிக்கிறாயே? உன் கணவனைத்தேடுகிறாயா?”
கேட்கத்தயங்கின கேள்வி திடுதிப்பென்று வெளியே வந்து விட்டது, “என்னை திருமணம் செய்துகொள்ளுகிறாயா?”

கம்பீரத்தை இழந்து யாசிக்கின்ற அந்த வீரனை பார்த்து அந்த பெண் தானும் காமமுற்று பேசலானாள். என் பெயர் மதி. நான் இங்கே இருக்கிறேன். அது மட்டுமே எனக்குத்தெரியும். எனக்கு தாய் தந்தை உண்டா, யாரவர்கள் என்பதெல்லாம் தெரியவே தெரியாது. இந்த ஆடவர்கள் பெண்கள் எல்லாரும் என் தோழர்கள். இந்த நகரத்தை யார் நிர்மாணித்தார்கள்? தெரியாது. இந்த நாகம் இந்த நகரின் பாதுகாவலன் போலிருக்கிறது, நான் உறங்கும்போது கூட இது இந்த நகரத்தை காத்து வருகிறது.
என்ன செய்வது என்று புரியாது இருக்கும் வேளையில் தெய்வமே அனுப்பியது போல தாங்கள் வந்து இருக்கிறீர்கள், உலக சுகங்களை விரும்புகிறீர்கள். நீர் நல்ல ரசிகனாக தெரிகிறீர். அறிஞரும் கூட. உமக்கல்லாது யாருக்கு நாங்கள் சுகத்தை கொடுப்போம்? நீரே இந்த நகரை ஆளும். நூறு வருடங்களுக்கு உங்களுக்கு நாங்கள் சுகங்களை அளிப்போம்.

நாம் மணந்து கொண்டு புத்திர புத்திரிகளை பெறுவோம். சுற்றம் இல்லாதவர்களுக்கு என்னத்தான் கிடைக்கும்? அறம், பொருள், இன்பம், மக்கட்பேறு, அம்ருதத்தை போன்ற சுக்லம், புகழ், சோகமும் மாசும் இல்லாத அனுபவங்களை வேறு யார் பெறக்கூடும்? முன்னோர்களுக்கோ தேவர்களுக்கோ முனிவர், மற்ற மனிதர்கள், விலங்குகள் எல்லாவற்றுக்கும் நன்மை செய்து தனக்கும் நன்மை செய்துக்கொள்ளக்கூடியவன் இல்லறத்தை அனுசரிப்பவன்தான். உங்கள் தோள்களைப்பார்த்தால் நாகம் படமெடுத்தது போலிருக்கிறது. இந்த வலிய தோள்களின் வலிமைக்கு யார் மயங்க மாட்டார்கள்?”
இப்படி பரஸ்பரம் மனமொப்பியே தாங்கள் மணந்து கொண்டதாகி பாணர்கள் பாட நகருள் புகுந்தனர்.

No comments: