Pages

Friday, March 4, 2016

ஜீவனின் சரித்திரம் - 10


ஜீவாவும் தர்மத்தை அறிந்தவளாக தன் கணவனையே தெய்வமாகக்கொண்டு பிற சுகங்களை துறந்து, கணவனுடனேயே பயணித்து, நிஷ்டையில் இருந்த கணவனுக்கு பொருத்தமான சேவைகளை செய்து வந்தாள். ஒரு நாள் அவரது கால்களில் சூட்டை உணர முடியாமல் போகவே தன் பதி உலகை விட்டுவிட்டதை அறிந்தாள்.
ஹே ராஜ ரிஷியே! எழுந்திரும்; என்னை இந்த நீர்சூழ் உலகில் கொடுங்கோல் அரசர்களிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் காப்பாற்றும்!” என்று பலவாறு அழுது புலம்பிய பின் ஒரு சிதை எழுப்பி அதில் தன் கணவனின் உடலை இட்டு தானும் தீக்குளிக்கத்தயாரானாள்.
அப்போது ஒரு அந்தணன் அவளருகில் தோன்றினான். “ நீ யார்? யாருடைய மனைவி? இங்கு கிடக்கும் இவனுக்காக வருத்தப்படுகிறாயே, யாரிவன்? நீயும் நானும் பலகாலம் ஒன்றாக உலவியிருக்கிறோமே! நினைவுக்கு வருகிறதா? இத்தனைக்காலமும் நான் உன்னுடந்தான் இருந்தேன். நீதான் என்னை ஏரெடுத்தும் பார்க்கவில்லை. இப்போதாவது என் நினைவு வருகிறதா? நீயும் நானும் சுதந்திரமாக மானஸஸரஸ்ஸில் உலவும் ஹம்ஸ பட்சிகள் போல் உலவினோமே. ஆனால் நீயோ கீழ்மைப்பட்ட விஷயங்களில் ஈடு பட்டாய். பூலோகத்துக்குச்சென்றாய். உடல் என்னும் நகரை அடைந்தாய். ஒலி, தொடுகை, உருவம், சுவை, நாற்றம் ஆகிய ஐந்து சோலைகளை கொண்ட நகரம் அது! ஒன்பது உடல் துவாரங்கள் அதன் வாயில்கள். நிலம் நீர் நெருப்பு என மூன்று ப்ராகாரங்கள்/கேட்டல், உணர்தல், பார்த்தல், சுவைத்தல், நுகர்தல், மனது என ஆறு குலங்கள். செயலிந்திரியங்களான வாய், கை, கால், இரு கீழ்துவாரங்கள் ஐந்து கடைவீதிகளாக விளங்கின. ஆகாயம், காற்று, அக்னி, மண், நீர் எனும் ஐம்பூதங்களும் உலோகங்கள். இவ்வைந்துக்கும் அதிபதியான ஜீவன் நீ. ஆனாலும் அங்கு சென்றதும் நீ உன்னை அறியவில்லை. எப்போது நீ முன் அறிந்ததையும் கேட்டதையும் மறந்து உன் புத்தி என்ற பெண் சொல்வதை கேட்க ஆரம்பித்தாயோ அப்போதே உன் அழிவு துவங்கிவிட்டது. நீ விதர்ப நாட்டரசன் மகளுமில்லை. இந்த வீரன் உன் பதியும் இல்லை, நீ ஒன்பது வாயில் கொண்ட நகரின் அரசனும் இல்லை.
நான் சிருட்டித்த மாயை இது. இதனால் நீ ஒரு பெண் என்றோ ஆணென்றோ எண்ணுகின்றாய். இது இரண்டும் இல்லாத உன் உண்மை சொரூபத்தை எண்ணிப்பார். நாமிருவரும் அன்னப்பறவைகள் போன்ற விவேகிகள். நம் பெருமையை நினைவுக்கு கொண்டு வா. நீயும் நானும் வேறல்ல, நீயே நான்; நானே நீ. இதை அறிந்து கொள். அறிவாளிகள் நம்மில் வேறுபாடு காண்பதில்லை. எப்படி கண்ணாடியிலோ, பிறர் கண்ணிலோ நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது இரண்டாகத் தோன்றுகிறதோ அப்படியே நம்மிருவருள்ளும் உள்ள வேறுபாடு.”
பரமாவால் தட்டி எழுப்பப்பட்ட ஜீவன், பரமாவை பிரிந்ததால் காணாமற்போன தன் ஞானத்தை மீண்டும் பெற்றான்

No comments: