Pages

Thursday, February 25, 2016

ஜீவனின் சரித்திரம் - 4


அன்று காலை ஜீவா சீக்கிரமே எழுந்துவிட்டான். முழிப்புத் தட்டி விட்டது. மனைவியுடன் கேளிக்கைக்குப்பின் எப்போது தூங்கினான்? தெரியவில்லை. அவள் இன்னும் தூங்குகிறாள். கொஞ்சம் வெளியே போய் வரலாம். அரண்மனையை விட்டு வெளியே வர அவன் நினைத்த மாத்திரத்தில் ஒரு தேர் வந்து நின்றது. இரண்டு சக்கரங்கள் ஒரு அச்சும் கொண்டு லேசான கட்டுமானம்; வேகமாக செல்லக்கூடியது. சாரதி ஐந்து குதிரைகளை ஐந்து கடிவாளங்களால் ஆண்டான். ஒரு ஆசனம் மட்டுமே இருந்தது. இரு மாற்றுக்குதிரைகளை கட்ட வசதி இருந்தது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை என மூன்று கொடிகள் மேலே பறந்தன. ஐந்து வித ஆயுதங்கள் இருந்தன. ஏழு கவசங்கள் ஏற்றப்பட்டு இருந்தன. வினோதமான அது நாற்புறமும், தேவையானால் மேற்புறமும் கூட நகரும் போல் தோன்றியது. ஜீவா தங்க கவசம் பூண்டிருந்தான். குறைவுறா அம்பறாதூணியை சரி செய்து கொண்டான். பத்து சேவகர்களும் பதினோராவதாக சேனாதிபதியும் உடன் வர ஐந்து மலைச்சரிவுகள் கொண்ட காட்டை நோக்கி தேர் நகர்ந்தது.

வேட்டை வெகு உக்கிரமாக நடந்தது. அசுரர்கள் போல கருணையில்லாமல் வேட்டையாடினான். கூரிய அம்புகளால் கண்டதனைத்தையும் கொன்றான்.
வனத்தில் மிருகங்கள் பல்கிப்பெருகிவிட்டாலும், குடி மக்கள் மிருகங்களால் தொந்திரவு அதிகமாகிவிட்டது என்று புகார் செய்தாலும், உணவுக்கு எனில் தேவையான அளவு மட்டும் வேட்டைகளில் அரசர்கள் ஈடுபடுவது தர்மமே என்றாலும் அதே தர்மம் எந்த மிருகங்களை கொல்லலாம் எதைக்கொல்லக்கூடாது என்று விதிக்கிறது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ’அதோ சாதுவாக விளையாடுகிற முயல். எவ்வளவு அழகாக பார்த்து சிரிக்கிறது. கொல்லு! அடடா! இந்த காட்டுப்பன்றிகள் எவ்வளவு ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது! கொல்லு! சோம்பலே உருவான எருமைகள்… கொல்லு!’ என்று எல்லாம் அவன் அம்புகளுக்கு இரை ஆகின. கொன்று கொன்று நாள் முடிவில் உடல் சோர்வு அடைந்தான். பசியும் தாகமும் பீடிக்க ஜீவா அரண்மனை திரும்பினான். சோர்வு நீங்க வென்னீரில் குளித்து உணவுண்ட பின் தன் ராணியின் நினைவு வந்தது. வேட்டை கிளப்பி விட்டிருந்த உத்ஸாஹமும் திருப்தியும் அடுத்து அவனை காமத்தை வேட்க வைத்தன. ராணியை தேடி காணமல் நொந்து அவளது சேடிகளை கேட்டான். “இனியவர்களே, நீங்களும் உங்கள் எஜமானியும் உடல் நலமாகத்தானே இருக்கிறீர்கள்? யாருக்கும் ஏதேனும் சுகவீனமா? என் பத்னி எங்கே? தாயோ பதிவிரதையான மனைவியோ இல்லாத வீட்டில் யார் சுகமாக இருக்க இயலும்? ஒடிந்த ரதத்தில் உக்காருவது போலிருக்கிறது. என் துக்கத்தை எப்போதும் நீக்கி உத்ஸாஹத்தை அளிக்கும் என்னவள் எங்கே?”

No comments: