Pages

Wednesday, February 24, 2016

ஜீவனின் சரித்திரம் - 3


கோட்டையை சுற்றிப்பார்த்த ஜீவா அதன் முன் புற வாயில்கள் ஒளி பொருந்தியவையாக இருக்கக்கண்டான். கத்போதம் என்ற ஒன்றன் வழியாக ஒளி விட்டுவிட்டு மின்மினிப்பூச்சி போல் முனுமுனுத்தது, ஆவிர்முகம் என்ற மற்றதன் வழியாக ஒளி வெளியே பாய்ந்தது, இவற்றின் ஒளியாலேயே மக்கள் தம் வேலைகளை செய்கிறார்கள் எனக்கண்டான்.
நளினி. நாளினி என்ற இரண்டு வாயில்கள் வழியாக இனிய காற்று நகருள் புகுந்து வெளியேறியது. ஹா! இந்த வாயில் இன்னும் பெரியதாக இருக்கிறது. இதன் வழியேதான் கடைச்சரக்குகளும் பல வகை தானியங்களும் பால், பழரசங்கள் ஆகியவையும் கோட்டைக்குள் வருகின்றன, போகின்றன. ம்ம்ம் தெற்குப்பக்கம் இருப்பது என்ன? அதன் பெயர் பித்ருஹூ என்று எழுதி இருக்கிறது. இதன் வழியே போனால்? அது தெற்கு பாஞ்சால தேசத்துக்கு போவதாக தோன்றுகிறது. அப்போது வடக்கே உள்ளது வடக்கு பாஞ்சால தேசத்துக்கு வழியா? ஆமாம். அப்படித்தான். பின்பக்கம் இருந்த கோட்டை வாயில் வழியே பார்க்கலாம். ம்ம்ம் சில கிராமங்கள் தெரிகின்றன. ஓடைகளும் வாய்க்கால்களும் தெரிகின்றன. அதன் பக்கத்தில் நிர்ருதி என்று பெயரிட்ட வாயில்… க்க்க்… இது வழியே போகுமிடம் மஹா அசுத்தமாக இருக்கும் போலிருக்கிறதே!
இந்த நகரத்து நீதிபதிக்கு கண்பார்வை இல்லை. ஆனாலும் அவர் பாட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறார். போக வேண்டிய வழியை காட்டுகிறார். இங்குள்ள பொற்கொல்லனும் கண்பார்வை இழந்தவனே! இருந்தாலும் எப்படி அழகான நகைகளை உருவாக்குகிறான்!

நல்ல காலம்! நாம் ஆட்சி செய்ய மற்றவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் கண்பார்வை உடையவர்களே!

அந்தப்புரத்துக்கு போகையில் ஜீவா மதிமயக்கமுற்றான், மிகுந்த கிளர்ச்சியும் திருப்தியும் ஏற்பட்டன. நாளடைவில் தன் மனையாள் சொல்வதை மட்டுமே கேட்பவன் ஆகிவிட்டான். அவள் சுகித்தால் தானும் சுகித்து அவள் துக்கித்தால் தானும் துக்கித்து அவளுடம் மதுபானம் செய்து, புசித்து, பாடி, ஆடி, ஓடி, அமர்ந்து, படுத்து, கேட்டு, பார்த்து, நுகர்ந்து, தொட்டு என்று எல்லா வகையில் அவள் செய்வதையே தானும் செய்தான். அவளுக்கு அடிமையாகி தன் பெருமை அனைத்தும் இழந்து விருப்பமில்லாவிட்டாலும் அவளையே அண்டி பேடித்தனத்துடன் விளையாட்டு மான் போலத்திரிந்தான்.

No comments: