Pages

Monday, March 7, 2016

ஜீவனின் சரித்திரம் - 11


ப்ராசீன பர்ஹிஸ் கூறுவான்: ஹே நாரதரே! நீங்கள் சொல்லும் கதை அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்ட எனக்கு சற்றும் புரிவில்லை. சற்று விளக்கமாக சொல்லி அருள வேண்டும்!

முன்னே சொல்லி வந்த கதை ஸ்ரீமத் பாகவதத்தில் நான்காம் ஸ்கந்தத்தில் 25 ஆம் அத்தியாயம் துவங்கி 29 முடிய சொல்லப்படுவது. இதை புரஞ்ஜனோபாக்யானம் என்பர். மைத்ரேயர் விதுரரிடம் சொல்லுவதாக கதை அமைகிறது. ப்ராசீன பர்ஹிஸ் என்றொரு அரசன் இருந்தான். அவன் எப்போதும் கொடுமையான யாகங்களை செய்து வந்தான். அவனை நல்வழிப்படுத்துவதற்காக நாரதர் அவனிடம் “நீ எதை குறித்து இவற்றை செய்கிறாய்? உண்மையான ஶ்ரேயஸ் இதில் இல்லை.” என்கிறார். அரசன் தனக்கு உபதேசிக்க வேண்டவே ‘இந்த’ கதையை சொல்லுகிறார். அரசன் நம்மைப்போல! புரியவில்லை. தெளிவாக விளக்குங்கள் என்கிறான். நாரதரும் விளக்குகிறார்.
--
கதையில் வரும் ‘ஜீவனே’ புரஞ்ஜனன், (தனக்கொரு புரத்தை ஜனிக்கச்செய்வதால்) அவனது நண்பன் பரமாத்மா. இருவரும் உண்மையில் ஒன்றானாலும் ஜீவனுக்கு மாயையால் உண்டான அகங்காரம் என்கிற கட்டு இருக்கிறது. மாயை என்னும் ப்ரக்ருதியின் குணங்களாண சத்வம், ரஜஸ், தமஸ்- இல் ஜீவன் ஈடுபடும்போது ஒன்பது துவாரங்களும் இரண்டு கைகள் இரண்டு கால்கள் உள்ள உடலை பிறப்பிக்கிறான். அதையே மிகவும் சௌக்கியம் என்று நினைக்கிறான்.
புத்தி என்பதே ‘மதி’ என்ற பெண். (இங்கே புத்தி எனக்குறிப்பிடப்படுவது அந்தக்கரணம் எனப்படும் அடிப்படையான ‘நான்’ என்னும் எண்ணமே) அவளிடம்தான் ‘நான்’ எனது’ முதலிய அபிமானங்கள் உண்டாகின்றன, புத்தியின் பத்து நண்பர்கள் பத்து இந்திரியங்கள். அவற்றின் சலனங்களே பத்து தோழிகள். கோட்டைக்காவலனாகிய ஐந்து தலை நாகம் ப்ராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் என்னும் ஐந்து ப்ராணங்கள். பின்னால் பதினோராவதாக சொல்லப்பட்ட சேனாதிபதி மனசு.

பாஞ்சால தேசம் எனப்பட்டது ஐந்து ஞான இந்திரியங்களும் ஆளுவது. கண்கள், மூக்கு துவாரங்கள், வாய், காதுகள், கீழ் துவாரங்கள் ஒன்பது வாயில்கள். இவற்றுள் முதல் ஐந்து முன்னால் - கிழக்கில் உள்ளதாக சொல்லப்பட்டது. வடக்கும் தெற்கும் உள்ளவை காதுகள். கீழுள்ளவை பின் துவாரங்களாக சொல்லப்பட்டன

No comments: