Pages

Monday, February 29, 2016

ஜீவனின் சரித்திரம் - 6


காலம் கழியக் கழிய ஜீவாவின் இளமை அவனறியாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டது. எப்போதும் மயக்கத்தில் இருந்தான். ம்ம்ம்….. இவர்கள் யார்? இவர்கள் என் பிள்ளைகள். பிள்ளைகள் ஆயிரத்து நூற்றுவர்…. என் பெண்கள் நூற்றிப்பத்து பேர்…. , அனைவருக்கும் விவாஹம் நடத்தியாயிற்றே! ஒவ்வொருவருக்கும் நூறு நூறு மக்கள் உண்டே! இதோ என் செல்லப்பேரன்…. பெயர்த்தி… எத்தனை பேர்கள் இருந்தாலும் இவர்களே என் செல்வமணிகள்…. இவர்கள் நலம் பேணும் பொருட்டு யாகங்கள் செய்வேன். ஹும்! எவ்வளவு கொடூரமான யாகங்களாக இருந்தாலும்தான் என்ன? அனைத்தையும் செய்து தேவர்கள், பித்ருக்கள், பூதகணங்களை திருப்தி செய்வேன். அதன் பின் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது!
உலகத்தைப்பற்றி ஒரு சிந்தனையும் இல்லாமல் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்த ஜீவா முதுமை வந்து சேர்ந்ததை அறியவில்லை.
சண்டவேகன் கந்தர்வ அரசன். அவனிடம் 360 கந்தர்வர்கள் கொண்ட சேனை ஒன்று இருந்தது. பகலவன் என்ற கந்தர்வர்களும் நிஷா என்னும் பெயர் கொண்ட கந்தர்வ ஸ்த்ரீக்களும் இருந்தனர். இவர்கள் கையசைக்க ஆசை ஆசையாய் நிர்மாணித்த பொருட்கள் அழிந்துபோகும். இவர்கள் ஜீவாவின் கோட்டையை முற்றுகையிட்டனர். எப்போதும் விழித்திருக்கும் கோட்டைக்காவலன் பஞ்சநாகன் இவர்களை தடுக்க முயன்றான். தன் எழுநூற்று இருபது ’நாடி’ என்னும் வீரர்களுடன் கோட்டையை காக்க முயன்றான். நூறு வருடங்கள் தாக்குப்பிடித்தனர், ஆயினும் கந்தர்வர்களின் பலம் மிகப்பெரிதாக இருந்தது,
ஜீவா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஜனங்கள் மீது வரி விதித்து தான் நன்றாக உண்பதிலும் தன் மனைவியால் பரவசப்படுத்தப்பட்டும் மயக்கத்தில் இருந்தான், காவலன் குறித்து சிந்தையே இல்லாதிருந்தான். தன் நாட்டிற்கோ, நகரத்துக்கோ உறவினர்களுக்கோ வந்த ஆபத்தைப்பற்றி நினைக்கவே இல்லை.

No comments: