Pages

Friday, May 30, 2008

சாந்த பாவம்
மகாபாரத யுத்தம் நடந்தப்ப முதல்ல அர்சுனன் சண்டை போட தயங்கினதும் அப்புறமா கண்ணன் பகவத் கீதை உபதேசம் செய்ததும் அதற்கு அப்புறமா அர்சுனன் தன்னோட கடமையை உணர்ந்து சண்டை ஆரம்பிச்சதும் நமக்கு தெரியும்.

இப்படி சண்டை நடந்தபோது இரண்டாம் நாள் சண்டையில பாண்டவர்கள் பக்கம் கொஞ்சம் வெற்றியும் அதனால உற்சாகமும் உண்டாச்சு. துரியோதனனுக்கு செம கடுப்பு.
அடுத்த நாள் சண்டைலேயும் அதே மாதிரி தொடர அவன் பீஷ்மரை போய் பாத்து "நீங்க, கிருபர், துரோணர் ன்னு மூணு பெரிய வீரர்கள் என் பக்கம் சண்டை போடறீங்க. ஆனா நம்ம படைகள் தோத்து ஓடுது. இது எப்படி சாத்தியம்? பாண்டவர்கள் மேல இருக்கிற அன்பாலதான் சும்மா விடறீங்க. அவங்கள எல்லாம் எதிர்க்க உங்களுக்கு விருப்பம் இல்லைனா முன்னாலேயே சொல்லி இருக்கலாமே? நான் வேற வழியை பாத்து இருப்பேன்”, அப்படின்னு கண்டபடி பேச பீஷ்மர் கடுப்பாயிட்டார். “நான் முடிஞ்ச வரை உக்கிரமாதான் சண்டை போடறேன். நான் உனக்கு முன்னேயே சொன்னேனே. கிருஷ்ணன் பக்கம்தான் எப்படியும் வெற்றி கிடைகும்ன்னு. அவன் உதவி கிடைக்கிறவரை பாண்டவர்கள இந்திரனால கூட ஜெயிக்க முடியாது. இருந்தாலும் நீ சொல்லறதனால இந்த கிழவன் இன்னும் உக்கிரமா சண்டை போடுவான்" அப்படின்னார்.
அப்புறமா பீஷ்மர் சண்டை போடற விதமே மாறி போச்சு.

அவர் மாயா ஜாலம் செய்யறாரோன்னு கூட சந்தேகப்படற மாதிரி ஆயிடுத்து. எங்கே பாத்தாலும் அவரே சண்டை போடற மாதிரி தோணிச்சு. ஒரு நெருப்பு வட்டம் மாதிரி எதிர்த்த எல்லாரையும் அழிச்சார்.

கிருஷ்ணன் அர்சுனன பாத்து " டேய், இப்படியே விட்டா இன்னிக்கி யுத்தம் முடிஞ்சுடும். பீஷ்மர் துரோணர் எல்லாரையும் கொல்லுவேன் ன்னு சத்தியம் பண்ணி இருக்க இல்ல? அத ஞாபகம் வச்சிகிட்டு சண்டை போட்டு இந்த பீஷ்மரை அடக்கு" ன்னான்.
சரின்னு அர்சுனன் சொல்ல கண்ணன் தேரை நேரா பீஷ்மர் பக்கம் செலுத்தினான். அர்சுனனும் சண்டை போட ஆரம்பிச்சான். நல்லாதான் சண்டை போட்டான். ஆனாலும் அரைகுறை மனசோடதான் சண்டை போட்டான். பீஷ்மரோ அர்சுனன் சாமர்த்தியத்த பாராட்டிகிட்டே கொஞ்சமும் உக்கிரம் குறையாம சண்டை போட்டார். கண்ணன் பாத்தான். இதெல்லாம் வேலைக்கு ஆவாது. இந்த அர்சுனன் பயல கொஞ்சம் உசுப்பு ஏத்தி விடணும்ன்னு முடிவு பண்ணான்.

அப்ப பல அரசர்கள் யுத்த களத்த விட்டு ஓட ஆரம்பிச்சு இருந்தாங்க. கண்ணன் "போகட்டும், போகட்டும். இன்னும் யார் ஓடாம இருக்காங்களோ அவங்களும் போகட்டும். நானே நேரா இறங்கி பீஷ்மரையும் துரோணரையும் கொல்லுவேன். பாண்டவர்களூக்கு ராஜ்யத்த மீட்டு கொடுப்பேன்" அப்படின்னு சொல்லி தேரை விட்டு இறங்கினார். சக்கிராயுதத்தை மனசால நினச்சார். அதுவும் உடனே வந்து சேர்ந்தது. அத எடுத்துகிட்டு பூமி அதிர பீஷ்மரை நோக்கி நடந்தார்.

என்னடா பக்திய பத்தி பேச வந்துட்டு சண்டை பத்தி பேசறானேன்னு நினைக்கிறீங்க இல்லை? முக்கியமான விஷயம் இப்பதான் வருது.

பீஷ்மர் என்ன பண்ணார்? ரொம்ப சந்தோஷப்பட்டு போனார். "கிருஷ்ணரே வாரும். இப்ப உங்களால கொல்லப்பட்டாலும் எனக்கு இந்த பிறவியிலேயும் பின்னாலேயும் நன்மைதான் கிடைக்கும். நீங்களே என்ன எதிர்க்கிறதால நான் கௌரவ படுத்தப்படறேன்" அப்படின்னு சாந்தமா சொன்னார்.

போர் பூமில இப்படி ஒரு சாந்தம்!

அப்புறமென்ன? அர்சுனன் ஓடி வந்து " கிருஷ்ணா, ஆயுதம் எடுக்க மாட்டேன்னு நீ செய்த சபதத்தை நீயே மீற வேண்டாம். நான் கொஞ்சமும் தயக்கம் இல்லாம சண்டை போடறேன்" அப்படின்னு சமாதானப்படுத்த போர் தொடர்ந்தது.

பீஷ்மர் போன்ற ஞானிகள் பகவானோட எப்பவுமே சாந்த பாவத்தில உறவு வைத்தவங்க.Post a Comment