ஸ்ரீ ராம நவமி வந்தது. பானகம் செஞ்சாங்க. மத்த இனிப்புகளும் செஞ்சாங்க. அதுக்கு வெல்லம் பயன்படுத்தினாங்க. எல்லாமே இனிப்பா இருந்தது. அதை எல்லாத்தையும் இனிப்பா செஞ்சது வெல்லம்தான். இந்த வெல்லத்தை எப்படி இனிப்பாக்கிறதுன்னு கேட்டா நம்மை மேலே கீழே பாப்பாங்க இல்லையா? ¨என்ன பைத்தியம் பிடிச்சு இருக்கா? வெல்லமே இனிப்புதான் அதை ஏன் இனிப்பாக்க வேற என்ன வேணும்?" என்பாங்க.
அதுபோல ஆன்மாதானே எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது? அறிகிறது? அப்படி இருக்கிறப்ப தன்னைத்தானே அறிய அதுக்கு வேற ஏஜென்சி தேவை இல்லை.
இப்படிப்பட்ட ஆன்மாதான் த்வம் அல்லது அஹம் என்ற சொல்லுக்கு இலட்சிய அர்த்தமாகும்.
இந்திரியங்களால ஜடப்பொருளை யாரும் பார்க்கலாம். இப்படி பாக்கிற உடம்பையே நான் இல்லைனு அறிய கொஞ்சமாவது சூக்ஷ்ம அறிவு வேணும்.
அதுக்கும் மேலே இந்திரியங்கள் முதலா மத்ததையும் நான் இல்லைன்னு உணர நல்ல சூக்ஷ்ம அறிவே வேணும். அப்படிப்பட்ட அறிவாளி ஒரு வழியா அந்த முயற்சியில வெற்றி அடைஞ்சா - அதாவது மனசை ஒடுக்கியாச்சுன்னா எதிரே அவித்தை, காரண சரீரம் ஆவரணம் என்ற சூன்யத்தைதான் பார்க்கிறான். அதாவது ஒண்ணுமேயில்லை. தான் இருக்கிறபடியால் தன்னைத்தவிர வேறு ஒண்ணுமில்லைன்னு பாக்கிற தான்தான் ஆன்மா.
ஆனை தன்னைத்தானே தொட்டுகிறப்ப தொடுகிறதும், தொடப்படுறதும் ஒண்ணே என்கிறது போல, ஆன்மாவால அறியப்படுகிறது ஆன்மாவே அல்லாமல் வேறு இல்லை. முன்னாலே எதையும் அன்னியமா உணராமல் தன் நிஜ ரூபத்தை மட்டும் உணரணும். இந்த நிலையே தான். இதுவே ¨த்வம்¨ ன்னு சொல்லப்பட்டது. முன்னாலே ஒன்றை அறியும்வரை தன்னை அறிய முடியாது.
முன்னிலைச்சுட்டு ஒழிதி எனப் பலகாலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்
தன்னிலையைக் காட்டாதே என்னை ஒன்றாச் சூட்டாதே சரண் நான் போந்த
அந்நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்துந் தோன்றும்
நன்னிலை ஈதன்றி இலை சுகமென்றே சுகர் முதலோர் நாடினாரே. 8.
-தாயுமானவர்- 24. ஆசையெனும்
75.ஆத்மாவாகிய தான் ஞான சொரூபம் என்பதெப்படி:
மதுரமாங் கட்டி சுட்ட மாப்பணி யாரமெல்லாம்
மதுரமாக் கியவ தற்கு மதுரந்தான் சுபாவ மன்றோ
அதுவிது வெனுஞ் சடங்க ளறிவாக வறிவைத் தந்தே
அதுவிது விரண்டுமாகா வகம் பொருளறிவாய் நீயே.
மதுரமாம் (இனிப்பான) [வெல்ல] கட்டி [சேர்த்து] சுட்ட மாப் பணியாரம் (பலகாரம்) எல்லாம் மதுரம் ஆக்கியவதற்கு (தன் சுபாவமான இனிப்பாக ஆக்கிய வெல்லத்துக்கு) மதுரந்தான் சுபாவம் அன்றோ? அதுவிது எனும் சடங்கள் (தேகம் இந்திரியம் முதலானவை) அறிவாக (அறிவையுடையனவாக) அறிவை தந்தே (ஞானத்தை கொடுத்து) அதுவிது இரண்டுமாகா (தேகம் இந்திரியம் முதலானவற்றின் விகாரத்தை அடையாத [பிரத்யேக ஆத்மாவையே]) அகம் பொருள் (அகம் என்பதற்கு பொருளாக) அறிவாய் நீயே.
த்வம் என்கிறது என்னன்னு சொல்லிட்டார், இப்ப ´தத்´ உம் ´த்வம்´ உம் ஒண்ணா ஆகிறதை சொல்கிறார்.
சீடனே, மேலே சொன்னது போல ஸ்தூல, சூக்கும், காரண தேகங்களுக்கு அன்னியமாகவும்;
சாக்கிரத், சொப்பன, சுழுத்தி என்கிற 3 அவஸ்தைகளுக்கு சாக்ஷி மாத்திரமாகவும்;
அஞ்சு உறைகளில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிற கூடஸ்தனே ´த்வம்´ என்கிறதுக்கு இலட்சியார்த்தம்.
எப்பவும் பந்தமே இல்லாத பிரம்மமே ´தத்´ என்கிற சொல்லுக்கு இலட்சியார்த்தம்.
கூடஸ்தனும் பிரம்மமும் ஒரே மாதிரி. அதனால இவர்களுக்குள்ளே ஐக்கியம் ஏற்படும்.
சீவனும் ஈஸ்வரனுமே த்வம் தத் க்கு வாச்சியார்த்தம். (literal meaning) இவங்களுக்கு இடையே எக்கச்சக்க வேறுபாடு இருக்கிறதால அவர்களுக்குள்ளே அபேதம் என்கிற ஐக்கியம் ஏற்பட முடியாது. அவங்க எப்பவுமே தனித்தனிதான்.
76.
ஆரோபமான வாச்சியார்த்தங்களுக்கு ஐக்கியமின்றெனக்கூறல்.
இந்தநீ த்வம் பதத்தி னிலட்சியப் பொருளா மென்றும்
பந்தமில் பிரம மேதத் பதந்தனி லிலட்சியார்த்தம்
அந்தமாஞ் சீவ னீசனவர்களே வாச்சியார்த்தம்
சந்ததம் பேத மாவார் தமக்கயிக் கியங்கூடாதே
இந்த (ஞானமே சுபாவமான சொரூபமாக உள்ள) நீ த்வம் பதத்தின் இலட்சியப் பொருளாம். (இலட்சியார்த்தம் ஆகும்). என்றும் பந்தமில்[லாத] பிரமமே தத் பதந்தனில் இலட்சியார்த்தம். அந்தமாம் (தள்ளப்படுவதாகிய) சீவன் ஈசன் அவர்களே வாச்சியார்த்தம். சந்ததம் (எப்போதும்) பேதமாவார்தமக்கு (பேதமுடையவாராக உள்ள சீவ ஈஸ்வரர்களுக்கு) ஐக்கியம் (அபேதம்) கூடாதே (சித்திக்காது).
தாத்பர்யம்: மகா வாக்கியத்தின் இலட்சியார்த்தமான கூடஸ்த பிரமம் அபேதம். ஆதலால் அவர்கட்கு ஐக்கியம் கூடும்.
2 comments:
//சீவனும் ஈஸ்வரனுமே த்வம் தத் க்கு வாச்சியார்த்தம். (literal meaning) இவங்களுக்கு இடையே எக்கச்சக்க வேறுபாடு இருக்கிறதால அவர்களுக்குள்ளே அபேதம் என்கிற ஐக்கியம் ஏற்பட முடியாது. அவங்க எப்பவுமே தனித்தனிதான்.//
:((((( புரியலை இங்கே.
தாயுமானவர் வரை ஓகே. காலையிலே இன்னிக்கு பொதிகையிலும் தாயுமானவரே வந்தார். அதனாலேயோ??????
எளிமையா சொல்லனும்னா மனிதன் தெய்வம் ஆக முடியாது. எப்பவுமே.
அந்தக்கரணம் போய் பிரம்மத்தோட ஐக்கியம் ஆகலாம். அது வேற.
அது பிரம்ம நிலை. சிவன் விஷ்ணு போன்ற தெய்வ நிலை இல்லை.
Post a Comment