Pages

Friday, April 10, 2009

தத்வமஸி - ஐக்கியம் எதில்?



நமக்கு இங்கே முக்கியமா வேண்டியது சஹ அயம் தேவதத்தன்தான்.
அது எப்படி வாச்சியார்த்தமான வேற நாடு, காலம் எல்லாத்தையும் தாண்டி ஆனால் ஒரு பெயரை உடைய உடம்பை காட்டித்தோ அது போல...

80.
மூவித இலக்கணையில் இங்கு தேவையான விட்டுவிட்டாத இலக்கணைபடி திருஷ்டாந்தத்துக்கு பொருள் கொள்வதை கூறல்:

பன்னிய சோயமென்னும் பதங்களின் வாச்சியார்த்தம்
அன்னிய தேசங்கால மவனிவ னென்ப வெல்லாம்
சொன்னவிவ் விரோதம்விட்டுத் தொடரிலக் கியம்விடாமல்
உன்னிடிற் றேவதத்த னொருவனை வெளியாக் காட்டும்.

பன்னிய (முன் கூறிய) சோ அயம் என்னும் பதங்களின் வாச்சியார்த்தம் அன்னிய தேசம் காலம் (தூர தேசம், சமீப தேசம், கடந்த காலம், நிகழ்காலம் ஆகிய) அவன் இவன் என்பன எல்லாம் (அந்த தேவதத்தன் இந்த தேவதத்தன் என்பன எல்லாம்) சொன்ன இவ்விரோதம் (விரோதமான வாச்சியார்த்தத்தை) விட்டுத் தொடர் இலக்கியம் (அவற்றை அநுசரித்த இலட்சிய அர்த்தமான தேகம் என்பதை) விடாமல், உன்னிடில் (ஆலோசிக்கில்) தேவதத்தன் ஒருவனை (என்ற புருஷனை) வெளியாக் காட்டும். (தெளிவாக காட்டும்).

81.
தத்துவ மெனும் பதங்கள் பிரமமாய்ச் சாட்சியான
வத்துவை விடாமற் பேத வாச்சியார்த் தத்தை விட்டு
நித்தமு மதுநீ யாகு நீயது வாகு மென்னும்
அர்த்தமும கண்டமென்றேயசி பதவைக்கியங் காட்டும்.

தத், துவம் எனும் (ஸாம வேத மகா வாக்கியத்தில் உள்ள அது, நீ) பதங்கள் பிரமமாய் சாட்சியான வத்துவை விடாமல் பேத வாச்சியார்த்தத்தை (பேத தர்மங்களை உடைய வாச்சிய பாகங்களை) விட்டு நித்தமும் (எக்காலமும்) அது நீ ஆகும் (பிரமமே நீயாம்), நீ அதுவாகும் (நீயே பிரமமாம்) என்னும் (என்று சொல்லும்). அசி பத அர்த்தமும் அகண்டம் (கண்டம்= துண்டு அகண்டம் துண்டாகாதது, ஒன்று) என்றே ஐக்கியங்காட்டும். (ஐக்கியத்தைப் போதிக்கும்).

மாயை, மாயையில் பிரதிபலித்த ஆபாசம், மாயைக்கு இயங்குதளம் ஆகிய மூணும் கூடி ஈஸ்வரன் ஆச்சு. ஈஸ்வரனோட சர்வ சக்தி முதலிய குணங்கள் மாயா காரியமாகும். இந்த ஈஸ்வரனையே தத் பதத்தின் வாச்சியார்த்தமாய் கொள்ளணும்.

வியட்டி அவஸ்தை, அதில பிரதிபலித்த ஆபாசம், அதன் இயங்குதளம் மூன்றும் சேர்ந்து சீவனாகும். இதற்குள்ள அற்ப சக்தி முதலிய குணங்கள் அவித்யா காரியம். இந்த சீவனை த்வம் பதத்தின் பொருளாய் கொள்ளணும்.

ஆனால் இந்த இருவருக்கும் ஏகத்துவம் -ஒண்ணாக ஆகுதல் நடக்காது. ஆகவே ஆபாசத்தோட கூடின மாயை, மாயா காரிய அனைத்தும் அறியும் அறிவு முதலான குணம் ஆகிய இவ்வளவு தத்பத வாச்சிய பாகங்களை விடுத்து இயங்கு சக்தியா இருக்கிற பாகத்தில மாத்திரம்;

அப்படியே ஆபாசத்தோட கூடின அவித்தை, அவித்தையால் செய்யப்பட்ட அற்பஞ்ஞத்துவாதி (சிறிதே அறியும் அறிவு முதலான) குணம் ஆகிய இவ்வளவும் -
த்வம் பத வாச்சிய பாகங்களை விடுத்து இயங்கு சக்தி பாகத்தை மட்டும் விட்டுவிடாத இலட்சணையால எடுத்துக்கிட்டு, கேட்டல் முதலிய ஞான வழிக்கான செயல்களுக்கு முன்னும் அவை முடிந்த பின்னும் ஏகம் என ஸாம வேத மகா வாக்கியம் தெரிவிக்கிறது.

ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா இயங்கு சக்தி எல்லாத்திலேயும் ஒண்ணேதான். வெளிப்பாடு வேற வேற இருக்கலாம். அந்த இயங்கு சக்தி பிரம்மம்தான்.

தாத்பர்யம்: ஆசாரியார் தானுபதேசித்தப்படி ஆவரண நிச்சயம் இருப்பது தோன்ற, அதன் முடிவான மகா வாக்கியத்தின் இலக்கியார்த்தமான கூடஸ்த பிரமத்தின் ஒருமையை உணர்த்தியதாம். மேலும் அது நீ ஆகும், நீ அதுவாகும் என்று ஓதப்புரோத (துணியில் ஊடும் பாவுமான) பாவமாய் அபேதம் சொன்னது முறையே பரோட்ச (மறைந்த) பிராந்தியும் பரிச்சின்ன (வரையறுக்கப்பட்ட) பிராந்தியும் நிவர்த்தியாகும் பொருட்டுக் கூறியதாம்.



2 comments:

Geetha Sambasivam said...

ம்ஹும், மறுபடி வரேன்! :((((((

திவாண்ணா said...

ஈசனையும் பிரம்மத்தையும் ஒண்ணா நினைக்கவே கூடாது. அதனாலதான் குழப்பம்.

முன்னே எங்கேயோ பாத்த க்ருஷ்ணனை இப்ப அடையாளம் கண்டு கொண்டது போல தேவதத்தனும் எங்கோ எப்பவோ பாத்தது இப்ப அடையாளம் காண்கிறோம்.

இது விட்டு விடாத இலட்சணை. ஏன்னா முழுக்க சம்பந்தத்தை விடவும் இல்லை. அப்படியே ஏத்துக்கவும் இல்லை.

முன்னே பாத்த க்ருஷ்ணன் / தேவதத்தன் க்கு இருந்த குணங்கள் வேற. இப்ப இருக்கறது வேற. ஆனால் ஆள் வேற இல்லை.
ஒரே ஆள் குணங்கள் மாறிவிட்டது. அதே போல ஒரே பிரம்மம் ¨குணங்கள் ¨ மாறிவிட்டது, வீச்சு குறைஞ்சு போச்சு. கூடஸ்தன் ஆகிவிட்டது. கூடஸ்தனோட வீச்சு குறைஞ்சு போனாலும் கடலலைக்கும் கடலுக்கும் இருக்கிற சம்பந்தம் போல் இது. இதனால ஐக்கியம் வந்துவிட்டது.

ஆனால் ஜீவனும் ஈசனும் இதே மாதிரி ஐக்கியம் வராது.
அவை ரெண்டுமே மாயை.

மேலே வர இருக்கிற பதிவுகளும் இதையே பேசும் அதனால பொறுத்து படிங்க.