சீடன் என்னத்தை அனுபவிக்கிறானாம்?
ஆனந்தம். ஆனந்த வெள்ளம். தன்னைத்தவிர இரண்டாவதா ஒண்ணுமே இல்லை. இந்த உடம்பு கரணங்கள் ன்னு ஆரம்பிச்சு பட்டியல் போடுகிற 35 தத்துவங்களும் அவனைப்பொறுத்த வரை இல்லை.
இதை நனவில் சுழுத்தி என்கிறாங்க. பிரம்ம நிலையே அப்படின்னு இல்லை. சுழுத்தியிலே எல்லா கரணங்களும் போயிடும். இங்கே அப்படி இல்லை. இது ஒரு டிடாச்மெண்ட். தற்காலிகமா பற்று போயிடுது. கரணங்கள் செயலிலே இருந்தாலும் அவற்றோட விஷய அனுபவம் உள்ளே வரலை. கண் திறந்து இருந்தாலும் எதையும் பார்க்கலை. கிட்டே போய் பட்டாசு வெடிச்சாலும் காது கேட்கலை. வாயிலே கற்கண்டு போட்டாலும் உமிழ்நீர் கூட சுரக்கலை!
இந்த அனுபவத்தை அவனுக்கு தருவது சற்குருவே! அவர் வேற யாருமில்லை பிரம்மமே. நாம சட்டை போடுவது போல அவர் ஒரு காரணத்துக்காக உடம்பை போட்டுகிட்டு இருக்கார்.
நம்ம ஆன்மீக பாதையிலே பலரும் நமக்கு உதவ வருவாங்க. சிலர் உதவுகிறோம்ன்னு தெரிஞ்சே உதவுவாங்க. சிலர் அப்படி தெரியாமலே உதவுவாங்க. மோசமா சமையல் செய்கிறவங்க நாக்கு ருசியை அடிச்சு போடுகிறோம்ன்னு தெரியாமலே அந்த உதவியை செஞ்சுகிட்டு இருப்பாங்க. :-))
சிலர் ஏதோ சொல்லிகிட்டே போகும்போது நமக்கு திடீர்ன்னு ஏதோ ஒரு விஷயம் பட்டுன்னு புலப்படும்.
இறைவன் சித்தத்தாலே சிலர் நமக்கு தேவையான சமயத்திலே தேவையான வழியை காட்டிட்டு போயிடுவாங்க. இவங்க வழி காட்டிகள். மார்க தரிசி.
இந்த பிரம்ம அனுபவத்தை ருசி காட்டுகிறவங்களே உண்மையிலே சற்குரு. அப்படி சற்குருவை அடையும் பாக்கியம் செஞ்சவங்களுக்கு அப்புறம் வேற ஒண்ணுமே வேணாம்.
84.
சீடன் அநுபவ ஸ்திதியை கூறல்:
அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே யகண்ட மாகித்
தனுகர ணங்க ளாதி சகலமு மிறந்து சித்தாய்
மனதுபூ ரணமாய்த் தேக மானசற் குருவுங் காண
நனவினிற் சுழுத்தி யாகி நன்மகன் சுபாவ மானான்.
அனுபவ ஆநந்த வெள்ளத்து அழுந்தியே அகண்டமாகி தனு கரணங்கள் ஆதி (முதலான 35 தத்துவங்கள்) சகலமும் (அனைத்தும்) இறந்து (நீங்கி) சித்தாய் மனது பூரணமாய், [பரி பூரண சொரூபமே] தேகமான (தேகத்தை சட்டை போல ஏற்ற) சற்குருவும் காண (பார்த்தருள) நனவினில் சுழுத்தியாகி (சுழுத்தி உடையவனாய்) நன்மகன் (நல்ல சீடன்) [அகண்ட சொரூப] சுபாவமானான்.
தாத்பர்யம்: பிரமானந்தத்தில் அழுந்தி பிரபஞ்சத்தை நீக்கி பெரிதுக்கெல்லாம் பெரிதான சுபாவ நிலை பெற்று இருந்தான்.
--
நனவினில் சுழுத்தி: இந்திரியங்கள் தம் காரணமான அஞ்ஞானத்தில் சுழுத்தி போல லீனமாகாது, தம்தம் கொள்கையில் இருக்க அவற்றின் வியாபாரமான விஷயானுபவம் அற்று இருப்பவன் என்றவாறு..
3 comments:
//இறைவன் சித்தத்தாலே சிலர் நமக்கு தேவையான சமயத்திலே தேவையான வழியை காட்டிட்டு போயிடுவாங்க. இவங்க வழி காட்டிகள்//
உண்மைதான்.
இவனுடைய வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், தோன்றும் துணையாகவும், தோன்றாத் துணையாகவும், இறையருள் வழிநடத்துவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.அதைத் தெரிந்து கொள்வதற்கு, எத்தனையோ மஹான்கள், சித்த புருஷர்கள், யோகிகளுடைய தரிசனம் அவ்வப்போது ஒரு திருப்புமுனையாகக் கிடைத்துக் கொண்டே இருப்பதையும் நன்றியோடு நினைத்துப் பார்க்க முடிகிறது.
இந்த சீடனுடைய பணிவான வணக்கங்கள்....:)
தம்பி
//மோசமா சமையல் செய்கிறவங்க நாக்கு ருசியை அடிச்சு போடுகிறோம்ன்னு தெரியாமலே அந்த உதவியை செஞ்சுகிட்டு இருப்பாங்க. :-))//
நல்ல உவமை!
உண்மைதான்,வாழ்க்கையை நடத்தவே, யார் எப்போ எந்த விதத்திலே எந்த உருவிலே வந்து உதவுவாங்கனு தெரியாமலேயே இறைவன் வழிநடத்துவான், ஆன்மீகத்துக்கும், ஆன்ம அனுபவம் பெறவும் அவன் உதவாமலா இருக்கான்? நாம் தான் புரிஞ்சுக்க மாட்டேங்கறோம். அதைப் புரிய வைக்கவும் ஒரு சத்குரு வரணும். வாழ்க்கையின் தேடல் குருவைத் தேடியா, அல்லது ஆத்மானுபவமானு சொல்ல முடியலை. எல்லாருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்குமா தெரியலை! :((((( எத்தனை பிறவி எடுக்கணுமோ? :((((((
Post a Comment