भवप्रत्ययो विदेहप्रकृतिलयानाम् ।।19।।
ப⁴வ ப்ரத்யயோ விதே³ஹ ப்ரக்ரு«தி லயாநாம் || 19||
பவ பிரத்யயம்:
அவித்தையை காரணமாக உடைய ஸமாதியானது தேகமற்றவர்களுக்கு, பிரக்ருதியில் லயமடைந்தவர்களுக்கு உண்டாகிறது.
ரத்தம், மாம்சம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை ஆகியன உள்ளவர் தேகம் உடையவர். இது நாமெல்லாம். இந்திரியங்கள், பஞ்ச பூத தன் மாத்திரைகள், (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை) அஹங்காரம், மகத்துவம் இவற்றை உடையது ஸூக்ஷ்ம சரீரம். இந்திரன் முதலான தேவர்கள் இப்படி இருக்காங்க. இந்த இந்திரியங்கள், அஹங்காரம் எல்லாம் இருக்கிறதாலேதான் இவங்களுக்கும் நம்ம மாதிரி கோப தாபங்கள், ஆசைகள் எல்லாம் இருக்கு. இவர்களோட புண்ணியம் அனுபவிச்சு தீர்ந்ததும் திருப்பி சம்சாரத்திலே கிடக்க வேண்டியதுதான். (தேவர்களும் கடவுளும் வேற வேறன்னு தெரியும்தானே?)
சரி, பிரக்ருதியில் லயம் அப்படின்னா என்னது?
இந்த உலகங்கள் எல்லாம் எதுலேந்து வந்ததோ அந்த மூலப்பொருள் ப்ரக்ருதி. ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் எல்லாமே இதுலிருந்து வந்தவையே. இவற்றோட பலவித சேர்க்கையால உலகத்தில பார்க்கிற விஷயங்கள் எல்லாம் உருவாச்சு. இந்த மூலப்பொருளோட லயம் ஆகமுடியும். ப்ரக்ருதி என்பதே மாயை ஆனதால் இதுவும் அவித்தையாக சொல்கிறாங்க.
உபாசனா காலத்திலே இந்திரியங்களை, பஞ்சபூத தன் மாத்திரைகளை, அஹங்காரத்தை, புத்தி தத்துவத்தை ஆன்மாவாக உபாசிக்கிறதுண்டு. பிரக்ருதியையும் உபாசிக்கிறதுண்டு. ஆன்மாவுக்கு ரூபம்ன்னு ஒண்ணு தெரியாதில்லையா! அப்போது அந்த அந்த தத்துவத்தில் பல மன்வந்தர காலம் லயமாக இருப்பர். இந்திரிய உபாசனை செய்தவர்களுக்கு அந்த இந்திரியத்துக்கு அபிமானி தேவதையின் சொரூப ப்ராப்தி கிட்டும். (விவரங்கள் பின்னாலே விபூதி பாதத்திலே வரும்.)
நம் உண்மை சொரூபத்தை தெரியாம மறைக்கிறது ஆவரண சக்தி. இதில் பல மட்டம் இருக்கு. பிரக்ருதியை உபாசிக்கிறவங்க இந்த மறைப்பில் பல மட்டங்களை கடந்து பிரகிருதியின் மறைப்பு வரை போய் பிரக்ருதியாவே ஆகிடுவாங்க. மனசையும் அனுபவத்தையும் இவங்களால் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனாலும் மாயை விடலை இல்லையா? ஒரு நூறாயிரம் வருஷங்கள் ஆனா பிறகு தேவர்களாகி திருப்பி உழல வேண்டியதுதான்.
இரண்டிலேயும் மறு பிறப்பு இருக்கு. அதனால முமுக்ஷுக்கள் இந்த வகை ஸமாதியை விரும்புவதில்லை.