Pages

Sunday, July 7, 2013

ரமணர் - விரிந்த முட்டை

 
விரிந்த முட்டை
ஸ்ரீ ரமண பகவான் நீராடிவிட்டு வந்தார். கூடத்தில் ஒரு கொடியில் உலர்த்தி இருந்த துண்டை எடுக்க முயன்றார். மூங்கிலை கொடியாக கட்டி இருந்தார்கள். அந்த மூங்கிலின் ஓர் ஓரத்தில் ஒரு குருவி கூடு கட்டி இருந்தது. அந்தக்கூட்டில் நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது. கொடியிலிருந்து பகவான் துண்டை எடுக்கும் போது அவருடைய கை மோதியதால் கூடு அசைந்தது. அதிலிருந்து ஒரு முட்டை கீழே விழுந்தது. விழுந்த அது விரிந்துவிட்டது. அதைப்பார்த்தபோது பகவானுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பக்கத்தில் இருந்தவரிடம் "இங்கேபார்! என்ன பாவம் இன்று நேர்ந்துவிட்டது!” என்று கூவினார். உடனே விரிசல் உண்டான அந்த முட்டையை எடுத்து கருணை மிக்க நோக்கோடு பார்த்தார். ஐயோ பாவம்! இதன் தாய் எத்தனை துக்கத்தை அடையும்! தன் முட்டையை உடைத்ததற்காக அதற்கு என்னிடம் அசாத்திய கோபம் உண்டாகும். இந்த விரிசல் மறுபடியும் கூடுமா? எங்கே பார்க்கலாம்" என்று சொல்லி ஒரு துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து அந்த விரிசல் முட்டையை அதனால் சுற்றி மறுபடியும் கூட்டுக்குள் வைத்து விட்டார்.

மூன்று மணிக்கு ஒரு தரம் முட்டையை கூட்டில் இருந்து எடுத்துத் துணியை எடுத்துவிட்டு தம் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பார்ப்பார். சிறிது நேரம் தன் கருணைப் பார்வையை அதன்மீது ஓட்டிக்கொண்டே இருப்பார். அவருடைய அருட்பார்வையின் ஒளி அந்த முட்டைக்கு உயிரூட்டியது போலும். “இந்த விரிசல் போய்விடுமா? விரிசல் முட்டையாயிற்றே? இதிலிருந்து குஞ்சு வெளிவருமா" என்று சொல்லிக்கொண்டெ இருப்பார். ஏதோ பெரிய பிழையை செய்தவர்கள் தமது பிழைக்கு வருந்துவதைப் போல உள்ளமுருகினார். அந்த உருக்கம் அவர் வார்த்தையிலே வெளியாயிற்று.
இப்படியே ஈரத்துணியால் முட்டையை சுற்றிக்கூட்டில் வைப்பதும், அடிக்கடி தம் கை
எடுத்து தம் அன்புப்பார்வையினால் பார்ப்பதுமாக ஒவ்வொரு நாளும் செய்து வந்தார். ஒரு வாரம் இது நடந்தது.

குருவி அதை அடை காத்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் பகவான் அதைவிட அன்புடன் அந்த முட்டையை பாதுகாத்தார். தம் திருக்கரத்தில் வைத்து போற்றினார். தம் திருக்கண் பார்வையினால் கவசமிட்டு காப்பாற்றினார்.

ஏழாவது நாள் வழக்கம் போல பகவான் தம் கையில் அந்த முட்டையை எடுத்து வைத்துக்கொண்டார். அவர் கண்கள் வியப்பால் விரிந்தன! “என்ன ஆச்சரியம்! இங்கே பாருங்கள். விரிசல் மூடிவிட்டதே! இதன் அம்மாவுக்கு இனிமேல் சந்தோஷமாக இருக்கும். இதை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். கடவுள் இந்த பாபத்தில் இருந்து என்னை காப்பாற்றினார். ஒரு ஜீவனை அநியாயமாக அழித்துவிட இருந்தேனே! பொறுத்திருந்து பார்ப்போம். இதிலிருந்து குஞ்சு வெளிவருகின்றதா என்று பார்க்க வேண்டும்.” என்று மகிழ்ச்சியோடு பகவான் சொன்னார். அவருக்கு எத்தனை திருப்தி!

சில நாட்கள் சென்றன. ஒரு நாள் அந்த முட்டை பொரிந்தது. ஆம்! அதிலிருந்து சின்னஞ்சிறிய குஞ்சு ஒன்று வெளிவந்தது. பகவானுக்குத்தான் என்ன சந்தோஷம்! அவருடைய திரு முகத்திலிருந்து அருளொளி பரவிப்பொங்கியது. விரிசலான முட்டையிலிருந்து யாதொரு குறையும் இன்றிப் பிறந்த அந்த சின்னஞ்சிறு குஞ்சைச் சர்வ பூத தயாபரராகிய இவர் தம் கையில் எடுத்துக்கொஞ்சினார்; தடவிக்கொடுத்தார்' முத்தமிட்டார். “இதோ பாருங்கள், எத்தனை அழகாக இருக்கிறது!” என்று அருகில் நின்றவர்களிடம் கொடுத்தார். தாமே முட்டையிட்டு குஞ்சு பொரித்தவரைப்போல ஆனந்தம் அடைந்தார். அதை மறுபடியும் வாங்கித் தம் திருக்கரமான ஞானத்தொட்டிலில் வைத்துக்கொண்டார். அந்தக் குருவிக் குஞ்சு செய்த புண்ணியம்தான் எத்தகையது! உடற்கூட்டை விரியச் செய்து மெய்ஞ்ஞானத்தீயால் தகிப்பித்து முக்தியாகிய சாம்ராஜ்யத்தை அடைய வைக்கும் அந்த ஞான முனிவர் பறவைக்குலத்துக்கும் கருணை காட்டினார். விரிந்த முட்டையும் இணைந்து குஞ்சைத்தந்தது. ரமண பகவானுடைய பர்வையையும் ஸ்பரிசமும் அந்த அரிய செயலைச் செய்யக் காரணமாக இருந்தன என்று ஏன் சொல்லக்கூடாது?

கி.வா.ஜ எழுதிய 'ரமண மாமுனிவர்' என்னும் புத்தகத்தில் இருந்து...

No comments: