Pages

Thursday, July 4, 2013

பொய்!

 
எல்லாம் கலிகாலம்ன்னா! நல்லவனா இருக்கறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா?
இந்த வாக்கியம் இப்பல்லாம் அடிக்கடி காதில விழுது.

கஷ்டம்தான். இல்லைன்னு சொல்லலை. இருந்தாலும் இது ஒரு எதிர்மறை நிலைப்பாடு. கஷ்டம் என்பதற்காக அப்படி இருக்க முயற்சி செய்யாமல் இருக்கலாமா என்ன? முயற்சி செய்து முடியவில்லை எனும் போது இப்படி அலுத்துக்கொள்வதை புரிந்துக்கொள்ளலாம். மாறாக இப்படி அடிக்கடி நினைக்க நினைக்க நல்லவனாக இருக்கும் எண்ணமே காணாமல் போய்விடும்.

பகவான் மீது பாரத்தை போட்டுவிட்டு நல்லவனாக இருக்க முயற்சி செய்ய செய்ய அதற்கு அவனே துணை இருப்பான்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். எனக்கு சத்தியம் முக்கியம். பொய் சொல்லச்சொன்னால் வெகு வெகு சிரமம். கடைசியில் தோல்விதான் அடைவேன். கூட இருப்பவரிடமும் அதையே எதிர்பார்ப்பேன். அப்படி அவர்கள் இல்லை என்பது பல காலம் எனக்கு தலைவலியாக இருந்தது. பிறகு ஒவ்வொருவரும் ஒரு விதமாகத்தான் இருப்பார்கள் என்று புரிந்தது.

சமீபத்தில் ஒரு தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன். நண்பர் ஒருவர் போன் செய்து ஒருவரை பார்க்க சிலர் செல்வதாக சொல்லி நானும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த காரியத்தில் எனக்கும் பங்கு இருப்பதால் சரி என்று ஒத்துக்கொண்டேன். "எந்த நேரம்?” என்று கேட்டார்கள். " என் வேலை முடிந்த பிறகு. மதியத்துக்கு மேல் அந்த ஊருக்கு நான் நேரடியாக வந்துவிடுகிறேன்" என்றேன். அவர்கள் வேறொரு ஊரில் இருந்து வர வேண்டும். ஆகவே அவர்கள் முன்னால் போவது என்று தீர்மானம் ஆகியது. நான் வரக்கூடிய நேரம் ஆஸ்பத்திரி வேலை முடிந்து என்பதால் அதற்கு முன் தினம் இரவுதான் அது தெரியவரும். அப்போது சொல்வது என்றும் முடிவாயிற்று.

குறிப்பிட்ட நாளுக்கு முன் தினம் என் ஆன்மீக வழிகாட்டியிடம் இருந்து இந்த குறிப்பிட்ட சந்திப்புக்கு நான் போகக்கூடாது என்று ஒரு தொலைபேசி செய்தி வந்தது! இவர் சொல்வதை அனேகமாக நான் தட்டுவதில்லை; ஏன் எதற்கு என்று நிச்சயம் கேட்பதில்லை. அதில் ஏதோ விஷயம் இருக்கும்.

வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறேனே? என்ன செய்வது? தகவல் தெரிவித்தவர் அசால்டாக "இன்றைக்கு கடுமையான வேலை இருக்கிறது. அதனால் வர முடியவில்லை" என்று சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துக்கொண்டார். வழக்கமாக 4- 5 கேஸ்கள் இருக்கும். கடுமையான வேலையா? அதெப்படி சொல்வது? 'பகவானே பொய் சொல்லாமல் இருக்க வெச்சு காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டேன். இந்த பிரார்த்தனைகள் எனக்கு சுலபமாக வருவதில்லை. இருந்தாலும் இப்போது மனதில் தோன்றியது.

முந்தைய இரவு மருத்துவ மனையில் இருந்து தகவல் வந்தது. இது வரை என்றைக்கு இல்லாதபடி "சார் நாளை 13 கேஸ்கள்" என்றார்கள்!

பொய் சொல்லும் அவசியம் ஏற்படவில்லை!

No comments: