Pages

Tuesday, May 23, 2017

ஆன்மீக விசாரம் - 11


என்னால இன்னும் முடியும்ன்னு நினைக்கறவங்க மனசை புத்தியால கண்ட்ரோல் பண்ணப்பார்க்கலாம். ரெண்டும் ஒண்ணுதானே? ஆமாம். புத்தி என்கிறது ஸ்திரமான ரூபம்; மனசு என்கிறது சலனப்படற ரூபம். இதுல ஒரே நேரத்துல ரெண்டு ஸ்திதியிலேயும் இருக்க முடியுமா? ம்ம்ம்ம்…. முடியலாம். இருந்தாலும் ஒண்ணுதான் டாமினெண்ட்டா இருக்கும். அது மனசா இல்லாம புத்தியா இருக்கும்படியா பாத்துண்டா போதும்.
இதுக்குப்பார்வை மாறணும். நம் வாழ்க்கையை வேத்து மனுஷனா பார்க்கக் கத்துக்கணும். இதைத்தான் சாட்சி பாவம் என்கிறாங்க. இப்படி நடக்கறதா? ஐயோ இப்படி நடக்கறதே இது எனக்கு சௌகரியமில்லையேன்னு புலம்பறது மனசு. ஓஹோ! இப்படி நடக்கறதா? அது எனக்கு சௌகரியமில்லை. மாத்த முடியுமா? முடியும்னா எப்படி? இந்த ரீதியில போகிறது புத்தி. இதுல உணர்ச்சிகள் மேலோங்காது என்கிறதால பிரச்சினைகள் குறையும். ஆனா பொதுவா மனிதனுக்கு இந்த உணர்ச்சிகள் இல்லாம இருக்கறது பிடிக்கறதில்லை. என்ன இது, மெஷின்தனமான வாழ்க்கை என்பாங்க!
இன்னொரு வழி எண்ணங்களை படிப்படியா குறைத்துக்கொண்டே போவது. கடைசியா அடைய வேண்டிய நிலை மனமில்லா சாந்த நிலை.
மனசு ரொம்பவே பவர்புல் என்பார் ஸ்வாமி சிவானந்தர். நினைத்தது நடக்கும்.
'ஹாஹ்ஹாஹ்ஹா! எத்தனை நினைச்சு இருப்பேன்? ஒண்ணு கூட நடக்கறதில்லை' ன்னு பலரும் ஆட்சேபனை சொல்லலாம். பிரச்சினை என்னன்னா நினைப்பு ஒண்ணா மட்டும் இருக்கறதில்லை! ஒண்ணை விரும்பின மாத்திரத்தில் அடுத்தது க்யூவில் வந்து நிக்கும். சின்மயானந்தா சொல்லுவார் ' உன் மனசில் அது வேணும்ன்னு நினைக்கிறாய். ரைட், அதை கொண்டு வரேன்னு மனசு கிளம்பும். அது கொஞ்ச தூரம் போகிறதுக்குள்ள எனக்கு இது வேணும்ன்னு இன்னொரு ஆசை வரது. சரி அதை விட்டுட்டு இதை கொண்டு வரேன்னு மனசு திசை திரும்பறது. சீக்கிரமே அடுத்த ஆசை வந்துடும். இதனால மனசு சுத்திண்டே இருக்குமே ஒழிய அதால எதையும் சாதிக்க முடியாமப் போகும்.'
உண்மைதானே! நமக்கு ஆசைகள் கொஞ்சமா நஞ்சமா? லோகத்தில பார்க்கிற எதானாலும் அது எனக்கு வேணும்ன்னு தோணிண்டே இருக்கும்! காந்தி சொல்லுவார் 'இந்தியாவில குறைந்த பட்ச தேவைகளை எல்லாருக்கும் நிறைவேத்த முடியும். அத்தனை வளம் இருக்கு. ஆனா ஒத்தனோட எல்லையில்லாத எல்லா விருப்பங்களையும் நிறைவேத்த இந்த உலகமே போறாது!'
அதனால நம்மோட விருப்பங்களை குறைக்க குறைக்க அது நிறைவேறும் சாத்தியம் அதிகமாகும்.
அதே போல எண்ணங்களை குறைக்கக்குறைக்க அவை வலுப்பெறும். ஒரு பார்வையில் பார்க்கிறதோட சாதக பாதகங்கள் புரிந்துபோகும். என்ன செய்யணும் என்கிறது தெளிவா இருக்கும். படிப்படியா எண்ணங்களை குறைத்து எண்ணங்களில்லாத நிலைக்கு போவதே நோக்கம். மாறாக நாம என்ன செய்யறோம்? நமக்கு சம்பந்தமில்லாத பல விஷயங்களையும் போட்டுக்குழப்பிக்கறோம். ட்ரம்ப் என்ன செய்தால் நமக்கு என்ன? டீம் ஏ ஜெயிச்சா என்னா தோத்தா என்ன? இன்னார் அரசியலுக்கு வந்தா என்ன வராட்டா என்ன? பல விஷயங்கள் நமக்கு சம்பந்தமே இல்லாதவை. சிலது அப்படி இருந்தாலும் நம்மால எதுவும் செய்ய முடியாதவை. உலகத்தைப்பார்த்து இது இப்படி இருக்கே அது அப்படி இருக்கேன்னு புலம்பறவங்க ஒண்ணுத்தையும் சாதிக்கப்போறதில்லை. சமூக வலைதளங்களில சர்வ சாதாரணமா இதை பார்க்கிறோம். ஏதோ ஒரு சம்பந்தமில்லாத சின்ன விஷயத்தை வெச்சுக்கொண்டு குடுமிப்பிடி சண்டையே நடக்கிறது. நடப்பு சமாசாரமா இருந்தாக்கூட பரவாயில்லே. குலோத்துங்க சோழன் இப்படி செஞ்சானா இல்லையா? அது சரியா தப்பா? யோவ்! தெரிஞ்சு இப்ப என்ன செய்யப்போறே?
ரைட் ரைட் இத்தோட நிறுத்திக்கலாம். எடுத்த விஷயம் புரிய இது போதும். மனசை வீணா அலைக்கழிக்க வேண்டாம்.
Post a Comment