Pages

Thursday, December 19, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 54





51 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ வித்யாதீர்த்தேந்திர ஸரஸ்வதி
அடைமொழிகள்: வித்யநாத யோகி, வித்யாஶங்கரர்
பிறந்த இடம்: வில்வராண்யம் (சரியான இடம் தெரியவில்லை)
பூர்வாஶ்ரம பெயர்: சர்வக்ஞ விஷ்ணு
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: சார்ங்கபாணி
பீடாதிபதியாக வருடங்கள்: 88 (இதில் கடைசி 15 ஆண்டுகள் இமயமலையில் )
சித்தி: 4485 ரக்தாக்ஷி மாக கிருஷ்ண ப்ரதமை (பொது ஆண்டு 1385- பிப்ரவரி-04)
சித்தி இடம்: இமாலயம்
மற்றவை:
இந்த ஆச்சார்யர் சாயனர், மாதவர் சகோதரர்களின் வித்யா குரு ஆவார். சாயனர் வேத பாஷ்யத்தை படைத்தவர்; நன்கு அறியப்பட்டவர். இந்த ஆச்சார்யரே வேதங்கள் மற்றும் வேதாந்தத்தில் பெரும் அறிஞர் ஆவார். எனவே, அவரது சிஷ்யர் சாயனர் வேத பாஷ்யங்களை எழுதி இருப்பதில் ஆச்சர்யமில்லை. மூத்த மகனாக இருந்த மாதவருக்கு ஶ்ரீ வித்யதீர்த்தரின் சிஷ்யரான ஶ்ரீ ஶங்கராநந்தாவால் சன்னியாசம் வழங்கப்பட்டது, இவரே புகழ்பெற்ற வித்யாரண்யர்.
எட்டு வேறு பெரிய சன்னியாசிகள் ஶ்ரீ வித்யாரண்யருடன் இந்த ஆச்சார்யரால் கர்நாடகப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது நோக்கம் அந்த பிராந்தியத்தில் அத்வைதம் மற்றும் சனாதன தர்மம் ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்துவதாகும். இவை வீர சைவம் மற்றும் சமீபத்தில் உருவாகி இருந்த த்வைத சிந்தனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தன.
இதற்காக ஶ்ரீ வித்யாரண்யர் அரசர்களான ஹக்காவிற்கும் புக்காவிற்கும் குருவாக பணியாற்றினார். விஜயநகர ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக அவர்களுக்கு வழிகாட்டினார். ஹம்பியில் உள்ள விரூபாக்ஷ மடத்தை அவரது சொந்த இருப்பிடத்திற்காக நிறுவினார், மற்ற 8 சன்னியாசிகளும் மற்றும் அவர்களது சீடர்களும் இப்பகுதியில் பல்வேறு ஶங்கராச்சாரிய மடங்களை நிறுவினர்.
ஶ்ரீ வித்யாரண்யருடன் எட்டு சன்னியாசிகளை அனுப்பி வைக்கும்போது, வித்யாதீர்த்தேந்திரர் அவர்களை காஞ்சி காமகோடி பீடத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருமாறு பணித்திருந்தார். ஶ்ரீமடாதிபதியாக 73 ஆண்டுகள் இருந்த பின், ஶ்ரீ ஶங்கரானந்தாவை மட்டும் அழைத்துக்கொண்டு இமாலயத்துக்கு சென்றுவிட்டார். உலகின் நல்வாழ்வுக்காக ஹிமாலயத்தில் மிகவும் கடினமான தபஸில் 15 ஆண்டுகள் செலவிட்டார், அங்கேயே சித்தியை அடைந்தார்.

No comments: