Pages

Monday, March 21, 2016

வித்தியாசமான நிகழ்வுகள் - 41


திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. அதற்கு மஹாத்மா காந்தி வந்திருந்தார். அப்போது காங்கிரஸ் அரசியல் கட்சியாக முன் வைக்கப்பட்டது. காந்திஜி ரமணரை சந்திப்பாரா என்று பரவலாக விவாதிக்கப்பட்டது. எல்லாருக்கும் பொதுவான ரமணர் ஒரு அரசியல் கட்சி தலைவரை சந்திப்பதோ ஆதரவு தெரிவிப்பதோ நடக்காது என்றனர் சிலர். யார் வேண்டுமானால் பகவானை பார்க்க முடிகிறது, காந்திஜி ஏன் பார்க்க முடியாது என்று சிலர்.
அந்த காலகட்டத்தில் பகவானின் சகோதரரின் மகன் திருவண்ணாமலையில் இருந்தார். தீவிர காங்கிரஸ் தொண்டராகவும் இருந்தார். இவர் பகவானையும் காந்திஜியையும் சந்திக்க வைக்க முயற்சி எடுத்தார். பகவான் ஏதும் சொல்லவில்லை. வேண்டாம் என்று சொல்லைவில்லையே என்று இவருக்கு திருப்தி. காந்திஜியுடன் பேசியதில் அவர் பகவானை சந்திக்க ஒப்புக்கொண்டு விட்டார். மாலை ஐந்து மணி போல் சந்திக்கச்செல்வதாக ஏற்பாடு செய்தார்கள்.
இவர் வெகு உற்சாகமாக ஆசிரமத்தில் தோரணங்கள் கட்டவும் கொடிகளை கட்டவும் முனைந்தார். மாலை நான்கு மணிக்கு பகவான் வழக்கம் போல மலையில் உலாவச்செல்ல வெளியே வந்தார். இவருக்கு குலை நடுங்கிவிட்டது. ஏனெனில் இப்படி வரவேற்பு கொடுப்பதற்கெல்லாம் பகவானின் இசைவை பெறவில்லை! பகவானோ அமைதியாக இதை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த கொடி இங்கே வேண்டாம், அங்கே கட்டினால் இன்னும் பார்வையாக இருக்கும் என்ற ரீதியில் சில திருத்தங்களை சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு மலைக்குப் போய்விட்டார்!
காந்திஜி வரும் சமயத்தில் பகவான் ஆசிரமத்தில் இல்லை என்றால் என்ன செய்வது? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கையை பிசைந்து கொண்டு இருந்தார்கள். நேரம் போய்க்கொண்டு இருந்தது. பொழுது சாயப்போகிறது; என்னேரமும் காந்திஜி வந்துவிடுவாரே பகவானை இன்னும் காணோமே என்று கவலை அதிகரித்தது!
காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து தகவல் வந்தது. மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து ஏதோ செய்தி வந்து காந்திஜி மாலை ட்ரெய்னில் அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாக!

No comments: