Pages

Monday, June 8, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -28


தேவராஜ முதலியார் ஒரு முறை பகவானிடம் கேட்டார்: “பகவானே! ஆன்ம முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமா வருமா.... இல்லை சட்டுன்னு வந்துடுமா?”
பகவான் சொன்னார்: “நீர் ஒரு இருட்டான குகைக்குள்ளே ஒரு டார்ச் லைட் எடுத்துண்டு போறீர்.... குகையில இருக்கிற இருட்டு கொஞ்சம் கொஞ்சமா மறையுமா.... இல்லை உடனடியா மறையுமா?

பகவான் ஒருமுறை நான் பயப்படறது ரெண்டு பேருக்குத்தான். ஒண்ணு முதலியார் பாட்டி. ரெண்டாவது ராமநாதன்என்றார்.
இது அருகில் இருந்த சேவகருக்கு விளங்கவில்லை. உரிமையோடு பகவானிடம் பகவானே, இவங்க ரெண்டு பேரைப்பாத்தா மட்டும் ஏன் பயம்?” என்று கேட்டார்.
இவா ரெண்டு பேரையும் பாத்தாலே எனக்கு ஏதோ பண்ணும். பக்கத்திலே வந்தா இன்னும் ஜாஸ்தியாகும். கஷ்டப்பட்டு அடக்கிப்பேன். இவா ரெண்டு பேரும் என்னை எதைக்கேட்டாலும் தந்துடுவேன் போல இருக்கும். ஆனா வந்ததுலேந்து இது வரைக்கு இவா ரெண்டு பேரும் என்னை ஒண்ணுமே கேட்டதில்லே. முக்தியே அவாளுக்கு தூசு!” குரல் கம்மியது; கண்களில் நீர் பெருகியது. மலையை திரும்பிப்பார்த்தார். அந்த பேச்சே அவருக்கு பயம் ஊட்டுவது போல இருந்தது!

ஒருமுறை மதிய உணவின் போது பாடசாலை மாணவன் ஒருவன் பரிமாறினான். மோர் வார்க்கும்போது பகவான் திடீரென்று இன்னும் கொஞ்சம் விடுஎன்றார். ஆச்சரியம்! எதையுமே இரண்டாம் முறையாக பகவான் கேட்டதே இல்லை. இன்று கேட்டார்.
வாளியில் மோர் இல்லை. இது பகவானுக்கும் தெரிந்தே இருந்தது. மாணவன் சமையலறைக்குப் போய் அங்கிருந்த வாளியை கொண்டு வந்து மோர் வார்த்தான். பகவான் அதை கையில் வாங்கி குடித்தார். பின் சேஷாத்ரி, நீ முன்னே வார்த்த மோருக்கும் இபோ கொண்டு வந்ததுக்கு நிறைய வித்தியாசம் இருக்கே? இது ரொம்ப ஜலமா இருக்கே? ஏன்னு கேட்டுவா!” என்றார்.
அவனும் விசாரித்து வந்து பகவானே! அது வேலையாளுங்களுக்கு வெச்சிருந்ததாம் என்றான்.
பகவான் அங்கிருந்தவர்களை அழைத்து வேதனையுடன் இதென்ன பழக்கம்? அவமானமாயிருக்கு. எல்லாருக்கும் ஒரே மாதிரி பரிமாறுங்கோ என்றார்.
அடுத்த நாள் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
 

No comments: