Pages

Monday, July 20, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -40




பகவானை தரிசிக்க ராமநாதபுரம் ராஜா வந்திருந்தார். அவர் வந்த போது பகவான் பாகசாலையில் கீரை ஆய்ந்து கொண்டுஇருந்தார். ராஜா வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் தன் வேலையைதொடர்ந்து அதே போல செய்து கொண்டு இருந்தார். முடிக்க அவசரமே காட்டவில்லை. ராஜா காத்திருந்தார். வேலையை முடித்த பிறகு பகவான் வந்து சோஃபாவில் அமர்ந்தார்.
ராஜா நமஸ்காரம் செய்துவிட்டு பகவானுடம் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். சில சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றார். விடை பெற்றார்.
தண்டபாணி ஸ்வாமியும் இன்னும் சிலரும் அவரை வழி அனுப்ப கோவில் வரை சென்றனர். தண்டபாணிஸ்வாமிதான் அப்போது ஆசிரம நிர்வாகத்தை கவனித்து வந்தார்.செல்லும் வழியில் தண்டபாணிஸ்வாமி ராஜாவிடம் நீங்களே பார்த்தேள்! பகவான் தங்க ஒரு நல்ல கட்டிடம் இல்லை. அதுக்கெல்லாம் பணம் இல்லை. சமயத்தில் எங்களுக்கே சாப்பாடுகூட இல்லாமல் போய்விடும்என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். அதாவது நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக நன்கொடை ஏதும் தந்தால் உதவியாக இருக்கும் என்று சொன்னார்.
இந்த விஷயம் பகவான் காதுக்கு போயிற்று. அவர் கடுமையானார்.
நீங்க அந்த ராஜாவோட நம்பிக்கையை கெடுத்துட்டேள். அவாகிட்டே அரண்மனை இருக்கு; காசு இருக்கு; அது கொடுக்கிற சந்தோஷம் கூட இருக்கு. ஆனா விரக்திதான் மிஞ்சறது. காசு பணம் கொடுக்கிறது உண்மையான சந்தோஷம் இல்லைன்னுதான் கௌபீனம் கட்டிண்டு இருக்கற எங்கிட்ட வரா. நான் துக்கத்துல இருக்கேன். சுகப்பட ஏதாவது வழி உண்டான்னு கேட்டுண்டு வரா.
அவா அமைதியை தேடி இங்கே வந்தவா. நீங்க அவா கிட்டே குறைபாட்டு பாடி அவா நம்பிக்கயை கெடுத்துட்டேள். இப்ப என்ன நினைப்பா? இவனும் நிம்மதியா இல்லே. ஏன்னா பொருள் கேக்கறான்.
அவா அரண்மனைக்குப்போய் யோசிப்பா. துறவு இதுக்கெல்லாம் பதில் இல்லை. காசு பணம் இருந்தாத்தான் நிம்மதி. அது கொடுக்கறதே சந்தோஷம்னு. நீங்க ஒரு மனுஷனோட நம்பிக்கையை கெடுத்துட்டேள்.
தயவு செஞ்சு இனிமே யார்கிட்டேயும் ஸ்வாமிக்கு அது இல்லே இது இல்லேன்னு யாசிக்காதீங்கோ. பணம் காசு கேக்கவே கேக்காதீங்கோ!” என்றார் பகவான்.
 

No comments: