பகவானிடம் கேள்வி கேட்டால் எப்போது
பதில் வரும் என்றே தெரியாது! சில சமயம் உடனடியாக; சில சமயம் பதிலே வராமலும்
போகும். இதில் யாரும் அவர் போக்கை நிர்ணயிக்க இயலாது!
நீண்ட தூரத்தில் இருந்து வந்த ஒரு
பக்தர் பகவானிடம் “ பகவானே மனம் அடங்கறதுக்கான உபாயம் எல்லாம் பண்ணிட்டேன். ஆனா ஒரு முன்னேற்றமும் தெரியலே. என் மனம் அடங்குமா
பகவானே?” என்று கேட்டார்.
பகவான் மௌனமாகவே இருந்தார்.
சற்று நேரம் கழிந்து மீண்டும் “சாஸ்திரங்கள் மனவடக்கம் இல்லாம
ஆன்மீகத்துல முன்னேற்றம் ஏற்படாதுன்னு சொல்லறதே? நான்
சிரத்தையாத்தான் பண்ணறேன்” என்றார்.
அப்போதும் மௌனமே.
இன்னும் சற்று கழித்து “ஆத்மீகத்துல முன்னேற்றமே இல்லை
என்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு; நீங்கதான் ஆசீர்வாதமா
ஏதேனும் சொல்லணும்” என்றார்.
இதற்கும் பகவான் அசையவே இல்லை.
ஒன்றரை மணி நேரம் கடந்தது. பகவான் வழக்கமாக வெளியே
செல்லும் நேரம்.
பக்தரை கடந்து போகும் போது அவரைத்
திரும்பிப் பார்த்து “போகப்போகத் தெரியும்” என்றார்!
ஒரு முறை பகவான் பக்தர்கள் புடை சூழ
அமர்ந்திருந்தார். அப்போது
ஒரு பக்தர் விடை பெறும் போது “பகவானே! நாங்க
எல்லாரும் ஆத்மானுபவத்துக்குத்தான் இங்கே வரோம். உங்க
அருளாலே எல்லாருக்கு அது ஏற்படட்டும்.” என்று வேண்டி விடை
பெற்றார்.
அவர் சென்ற பின் பகவான் “எல்லாரும்
ஆத்மானுபவத்துக்குத்தான் இங்கே வரா. ஆனா அது எப்படி
இருக்கும்ன்னு லவலேசம் தெரிஞ்சாலும் நம்மள சுத்தி ஈ காக்கா இருக்காது” என்றார்.
அன்று இரவு அவரது சேவகர் “ பகவானே? ஆத்மானுபவம்
அவ்வளோ பயங்கரமா இருக்குமா? அது எப்படி இருக்கும்ன்னு
எங்களுக்கு காட்டினா ஈ காக்கா சுத்தி இருக்காதுன்னு சொன்னீங்களே?” என்று கேட்டார்.
“ ஆத்மானுபவம் இன்னதுன்னு
தெரியாமத்தான் சுத்தி சுத்தி வரா. அது எல்லோருக்கும்
எப்பவும் இருக்கிற சாமான்யமான இருப்புன்னு தெரிஞ்சா ஈ காக்கா சுத்தி இருக்காதுன்னு
சொன்னேன்!” என்றார் பகவான்!
ஆசிரம நிர்வாகத்தில் இருந்த சிலர் ஒரு
மாதப்பத்திரிகையை ஆசிரமத்தில் இருந்து வெளியிட விரும்பினார்கள். திட்டம் தயார் ஆனது. ஒப்புதலுக்காக பகவானை அணுகினர்.
“அந்தப்பத்திரிகையிலே என்ன
இருக்கும்?” என்று கேட்டார் பகவான்.
“நம்ம ஆசிரமத்து செய்திகள்.
இந்த மாசம் யார் யார் பகவானைப் பார்க்க வந்தா; அவா என்ன கேட்டா, பகவான் என்ன பதில் சொன்னார்,
இதெல்லாம் இருக்கும். உலகத்துல எல்லாரும்
படிப்பா பகவானே!”
“ஓ! அப்ப
நான் பேசவே இல்லைன்னா அதில என்ன போடுவா? உங்க பத்திரிகையில்
வரணும் என்கிறதுக்காக நான் பேசிண்டே இருக்கணுமா? ஏற்கெனெவே
பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டேள். பேஷ் பேஷ், புது தண்டனையா கண்டு பிடிச்சுண்டே இருக்கேளா?”
முயற்சி கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment