பகவானின் தேகம் நோய்வாய்ப்பட்டது. டாக்டர்கள் சத்தான ஆகாரத்தை
பரிந்துரைத்தார்கள். வழக்கம் போல பகவான் காதில்
போட்டுகொள்ளவில்லை. யாரோ பகவான் தினமும் சப்பாத்தி, பால், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டால் தேவை என்றார்கள்.
பகவான் “அவ்வளவு வசதியான போஜனம் எல்லாம்
நமக்கு முடியாது. நமக்கு சாது போஜனம்தான்” என்றார். "உடம்பு சரியில்லாவிட்டால் அப்படி
சாப்பிடலாம். மகாத்மா காந்தியும் விசேஷ உணவுதான், அரவிந்தரும் அப்படித்தான், ஆரோக்கியத்துக்காக
எடுத்துக்கலாம் பகவானே! எங்களுக்காக ஒரு ஆரஞ்சு ஜூஸ்
எடுத்துக்குங்களேன்” என்றார் ஒரு அன்பர்.
“ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் என்ன
விலை?”
“என்ன நாலு அணா இருக்கும்!”
“இல்லே நாலணா இருக்காது. நமக்கு 200 டம்ளர் ஜூஸ் வேணும். உங்களை எல்லாம் பாக்க வெச்சுட்டு நாம சாப்பிடறதா? சரி,
அப்படியே ஆனாலும் 200 டம்ளர் ஜூஸுக்கு தினசரி 50
ரூபா நமக்கெல்லாம் கட்டாது!”
மீண்டும் அடுத்த நாள் இந்த விஷயம்
ஆரம்பித்தது. நெய்
தடவிய சப்பாத்தியும் பால் ஒரு டம்ளரிலும், ஆரஞ்சு ஜூஸ் ஒரு
டம்ப்ளரிலும் கொண்டு வரப்பட்டு பகவான் அருகில் வைக்கப்பட்டது. பகவான் அதை திரும்பிக்கூட பார்க்கவில்லை. கொண்டு
வந்து வைத்தவாளே சாப்பிடட்டும் என்றார்.
அப்போது அங்கிருந்த பக்தை “பகவான் எங்களுக்காக அந்த
சோஃபாவிலே உட்கார்ந்து கொண்ட மாதிரி, எங்களுக்காக இதை
சாப்பிடணும்!” என்றார்.
அவ்வளவே. பகவான் பதில் பேசாமல் உடனே தரையில் அமர்ந்து
கொண்டார்.
யாரும் இதை எதிர்பார்க்கவில்லை! அந்த பக்தை அழ
ஆரம்பித்துவிட்டார். “பகவானே ஏதோ தெரியாம பேசிட்டேன்!”
என்று அரற்றினார்.
யாருக்கு எப்படி பகவானை திருப்பியும்
சோஃபாவில் உட்கார வைப்பது என்று தெரியவில்லை.
அப்போது வந்த ஒரு நெடு நாள் பக்தர் பகவானை அலாக்காக தூக்கி
சோஃபாவில் உட்கார வைத்துவிட்டார். பகவான் எந்த எதிரிப்பும்
தெரிவிக்கவில்லை! திரும்பவும் தரையில் உட்கார எத்தனிக்கவும்
இல்லை. அத்துடன் அந்த பிரச்சினை தீர்ந்தது. விசேஷ உணவு பிரச்சினையும் தீர்க்கப்பட்டது!
க்ருஷ்ண ப்ரேம் தீவிர வைஷ்ணவர். வெளி நாட்டவர். ஒரு முறை பகவானிடம் “பகவானே, சர்வம்
வாசுதேவ மயம் ஜகத் ந்னு நினைக்கறதுதானே உயர்ந்த ஸ்திதி?” என்று
கேட்டார்.
பகவான் ஆமோதிப்பது போல தலையை ஆட்டினார். “ஆமாமாங். அது மேலான ஸ்திதிதான். வைஷ்ணவ சம்பிப்ரதாயத்தோட
அடிப்படையே அதுதான். ஆனாலும் பாக்கறதெல்லாம் வாசுதேவமயம்ன்னு
நினைக்கறது யார்? நாம்தானே?
நாம் பாக்கற உலகமா சொல்லறது, நாங்கல்லாம் வாசுதேவன்னு?
நாம் பூமி, மரம், செடி
கொடியை எல்லாம் வாசுதேவமயமா பார்க்க பிரியப்படறப்போ நம்மையே ஏன் அப்படி
பார்க்கக்கூடாது?
எல்லாத்தையும் வாசுதேவ மயமா பார்க்கிறவா
யார்ன்னு பார்த்தா நீயேதான் அந்த வாசுதேவன்னு தெரிஞ்சுப்பே. அப்புறம் விசேஷமா சர்வம்
வாசுதேவமயம் ஜகத்ன்னு பார்க்க அவசியம் இருக்காது. பாக்கிறவன்
வாசுதேவன்னா பார்க்கிறதெல்லாம் வாசுதேவமயம்தான். இதைத்தான்
த்ருஷ்டீம் ஞானமயீம் க்ருத்வா... ந்னு ஆச்சாரியார் எளிமையா
சொல்றார்.”
இப்படிச்சொல்லி பின் மெதுவான குரலில் “யானும் நீ, அதனன்றி எம்பிரானும் நீ, இராமனே” என்றார். அப்போது கண்களில் கண்ணீர் ததும்பியது.
சமாளித்துக்கொண்டு மலையை பார்க்கலானார்.
No comments:
Post a Comment