Pages

Monday, June 15, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 30



ராஜா ஐயருக்கு சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நேரம் காலம் இல்லாமல் அவ்வப்போது சமையலறையில் நுழைந்து எதையாவது - சமைத்ததோ சமைக்காததோ- வாங்கி சாப்பிடுவார்.
இதை பார்த்த பக்தர் ஒருவர் இது பற்றி பகவானிடம் குறை கூறினார்.
ஏன் நீயும் போய் சாப்பிட வேண்டியதுதானே??”
என்னாலே முடியாது. நான் மத்த நேரம் கிச்சனுக்குப் போக முடியாது.
அப்ப உன் பிரச்சினை அவர் எப்பவும் எதையாவது சாப்பிடறார் என்கிறது இல்லே; உன்னாலே முடியாதாதை அவர் செய்யறார் இல்லியோ..... அதான் பிரச்சினை!


ஒரு முறை வடநாட்டில் இருந்து வந்த ஒரு பக்தரிடம் குதிரைவண்டிக்காரன் இரு மடங்கு தொகையைக்கேட்டான்.
ஆசிரம சேவகர் க்ருஷ்ணஸ்வாமி தலையிட்டு வழக்கமான தொகையை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். அவன் பிடிவாதமாக மறுத்தான். கடைசியில் ஒரு தொகைக்கு பேரம் படிந்து பக்தர் கிளம்பினார். திரும்பிய க்ருஷ்ணஸ்வாமி பகவானிடம் நடந்ததை விவரித்து பகவானே! எவ்வளவோ சொல்லிப்பாத்தேன், கேக்கவே மாட்டேன்னுட்டான்!” என்று அங்கலாய்த்தார்!
பகவான் புன்னகையுடன் கேட்டார்: “நீ மட்டும் நான் சொன்னதை கேக்கறியா?”

பகவானை தரிசிக்க வட இந்திய வக்கீல் ஒருவர் வந்தார். இவர் ஒரு க்ருஷ்ண பக்தர். முன்னரே இரண்டு வாரங்கள் தங்க ஏற்பாடுகள் செய்து இருந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கினார். ஏனோ அவருக்கு ஆசிரம சூழ்நிலை பிடிக்கவில்லை. பகவானின் மௌனம் விளங்கவில்லை. அவரது அறைக்கு பக்கத்தில் தங்கி இருந்தவர் டங்கன் கிரின்லீஸ். இருவரும் இரவு உணவுக்குப்பின் நிலவொளியில் அமர்ந்து உரையாடுவர்.
வக்கீல் என்னோட இந்த பயணம் சுத்தமா பிரயோஜனமே இல்லாம போச்சு. இங்கே ஒரு ஆரத்தி, ஒரு பஜனை, ஒண்ணுமே இல்லை. மகரிஷியும் மத்தவங்களும் சும்மா உக்காந்து இருக்காங்க; வீணா பொழுதை போக்கறாங்க.” என்றார்.
டங்கன் கிரின்லீஸ் பகவான் அத்வைத ஸ்வரூபம். இதுதான் எல்லா வேததோட முடிவும். வேதங்கள் விவரிக்க முடியாம திரும்பற இடத்திலேதான் பகவானோட மௌனம் ஆரம்பிக்குது. இதை உணர்ந்து தெரிஞ்சுக்கணும். நிறைய காலமாகும். அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க! இன்னும் நாள் இருக்கே. பொறுமையா இருங்க.’ என்றார்.
வக்கீலோ என்ன மௌனமோ எனக்குப்புரியலே! அதுலே எனக்கு பக்தி வரலை. இங்கே வரதுக்குப்பதில் ப்ருந்தாவனம் போயிருக்கலாம். அங்கே க்ருஷ்ணன் இருக்கான். அவனிடம் உருகி அவன் தரிசனத்துக்கு காத்துகிட்டு இருப்பேன். இந்த பயணத்தால் ப்ரயோஜனம் இல்லே. பக்தியோட ரசம் அனுபவிச்சாத்தான் தெரியும். உங்ககிட்ட பக்தி இல்லேஎன்றார்.
ஒருவர் மற்றவருடைய நிலை புரியாமல் இருக்க விவாதிக்க ஒன்றுமில்லாமல் போனது!
மீதி நாட்களும் இப்படியே கழிந்தன. வக்கீல் உணவுக்கு மட்டும் ஆசிரமத்துக்குப்போனார். பகவானை சந்திப்பதை தவிர்த்தார். கிளம்பும் நாள் வந்தது. உற்சாகமானார். தன் நண்பரிடம் நான் உங்க மகரிஷிகிட்டேந்து தப்பிச்சுட்டேன்! நேரா பிருந்தாவனம்தான் போறேன். அங்கே ஆடிப்பாடி க்ருஷ்ணனுக்காக ஏங்கி பொழுதை கழிப்பேன்என்றார்.
பகவானை புரிந்து கொள்ளாமல் போகிறாரே என்று கிரின்லீஸ் க்கு வருத்தம் இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. “போய் வாங்க!” என்றார்.
பகவானிடம் சொல்லிக்கொள்ளக்கூட இல்லை. கிளம்பிவிட்டார்.
ஆனால் அவர் புகைவண்டி நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்த குதிரை வண்டி வரவில்லை! வேறு ஏற்பாடு செய்து போய் சேர்ந்தால வண்டி வந்து, கிளம்பிவிட்டு இருந்தது. அடுத்த வண்டி மறுநாள்தான். வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பினார் வக்கீல்.
டங்கன் கிரின்லீஸ் க்கு மகிழ்ச்சி. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வக்கீலை சமாதனப்படுத்தினார். இன்னும் ஒரு நாள்தானே? விடுங்க என்றார்.
பின் என்ன இருந்தாலும் நீங்க சொல்லிக்காம ஊருக்கு கிளம்பினது சரியாப்படலை. அவரைப்பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லாம இருக்கலாம். அவரைப்பத்தி என்ன வேணா சொல்லுங்க. போகட்டும். அவர் அவரோட இயல்புல இருக்கார். அது உங்களுக்கு பிடிக்கலை என்கிறதால ஒண்ணும் பண்ண முடியாது. என்ன இருந்தாலும் நாம அவரோட விருந்தினரா தங்கி இருக்கோம். போகும் போது சொல்லிக்கொண்டு போவதே மரியாதைஎன்றார். இது சரிதான் என்று வக்கீலுக்குப்பட்டது.
அடுத்த நாள் மாலை கிளம்பும் நேரம் வந்தது. மரியாதை நிமித்தமாக ஆரஞ்சுகள் வாங்கி ஒரு பையில் எடுத்துக்கொண்டு விடை பெற ஓல்ட் ஹாலின் வாசலில் நின்றார். பகவான் வழக்கம்போல மலைக்குப் போக வெளியேவந்தார். வக்கீலின் அருகில் வந்தவுடன் ஒரு நிமிடம் அவரைப்பார்த்துக்கொண்டு நின்றார்.
வக்கீலின் கால் அடியில் பூமி நழுவியது! பழப்பை கீழே விழுந்தது. பழங்கள் உருண்டன. அடியற்ற மரம் போல் பகவானின் காலடியில் கீழே விழுந்தார. ‘க்ருஷ்ணா க்ருஷ்ணாஎன்று அரற்றினார். கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.
பகவான் சரி போ!” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.
பகவானைப்பார்த்து வக்கீல் க்ருஷ்ணா, உன்னை தெரிஞ்சுக்காம போய்டேனே! உன்னையே திட்டினேனே?!” என்று கதறினார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒருவர் வந்து குதிரை வண்டி வந்தாயிற்று என்று சொன்னார். வக்கீல் இருந்த நிலையில் அவரை கைத்தாங்கலாக அழைத்துச்செல்லா வேண்டி இருந்தது. போகும் வழியில் டங்கனை பார்த்தார். “என் கிருஷ்ணனை பாத்துட்டேன்! இதுவே போதும். மீரா ஏன் இவ்வளோ பிரியமா இருக்கான்னு இப்பதான் புரியுது! வாழ்கையோட பலன் கிடைச்சாச்சு! நான் வீட்டுக்குப்போறேன்!” என்று அழுதார். அவரைக்கட்டிக்கொண்ட டங்கன் முதன் முறையாக பக்தியில் அழுதார்!
 

No comments: