Pages

Thursday, June 18, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 31



ஒரு முறை ஒரு பக்தர் பகவானிடம் பகவானே! ஆத்மாவை உணரணும்ன்னு சொல்றாங்களே, அது எங்கே இருக்கு? அதை எப்படி உணரறது?” என்று கள்ளமில்லாமல் கேட்டார். பகவானுக்கு ஒரே ஆனந்தம்!
இப்போ என்கிட்டே ரமணாஸ்ரமம் எங்கே இருக்கு? அதுக்கு எப்படி போறதுன்னு நீ கேட்டா என்ன பதில் சொல்லறது?
நீயும் நீ பாக்கற எல்லாமும் ஆன்மாதான். அதை எப்பவும் உணர்ந்துகொண்டேதான் இருக்கே! ஆனா அது தெரியாம ஆத்மா எங்கே இருக்குன்னு தேடறதும் அதை உணர முயற்சி செய்யறதும் பண்டரிபுரம் பஜனை மாதிரிதான்.
பஜனை ஆரம்பிக்கும் போது எல்லாரும் கால்ல சதங்கை கட்டிண்டு ஒரு பித்தளை விளக்கை ஏத்தி வீட்டு நடுவில வெச்சுட்டு அதை சுத்தி சுத்தி வந்து பஜனை ஆரம்பிப்பா. பண்டரிபுரம் ரொம்ப தூரத்துல இருக்கு; யாத்திரை பண்ணுவோம் வாங்கன்னு பாடுவா. ஆனா விளக்கை சுத்தி சுத்திதான் வருவா. ஒரு அடி கூட முன்னே போகாட்டாலும் யாத்திரை போறோம்ன்னுதான் பாடுவா. இப்படியே விடிய விடிய பஜனை நடக்கும். பொழுது விடியும் போது இதோ பண்டரிபுரம் தெரியறது; இன்னும் கொஞ்சம் தூரம்தான்ன்னு பாடுவா. பொழுது விடிஞ்சதும் பண்டரிபுரம் வந்துட்டோம். இதோ பண்டரிபுரம்; இதோ பாண்டுரங்கன்னு பாடி விளக்குக்கு நமஸ்காரம் பண்ணி முடிச்சுடுவா.
ஆத்மா விஷயத்துலேயும் இப்படியேதான்! ஆத்மாவை எப்பவுமே தரிசிச்சுண்டே ஆத்மா எங்கே, இன்னும் அடையலைன்னு பஜனை பாடறோம்! அஞ்ஞான இருள் நீங்கி ஞானம் புலரும்போது, அது இங்கேயே இருக்கறதுதான்; அது நானேதான் ந்னு முடிச்சுடுவோம்!”
இப்படி சொல்லி முடிக்கும்போது பகவானின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் பொங்கிக்கொண்டு இருந்தது!

ஒரு நாள் சிரத்தையுடைய சாதனை செய்து வந்த ஒரு பக்தர் பகவானை பக்தியுடன் நமஸ்கரித்து கேட்டார்: “பகவானே எந்த நேரமும் மனசை ஆத்மாவிலேயே வெச்சிருக்கறதுதான் ஆத்ம விசாரம்ன்னு பகவான் சொல்லறது இல்லையா? இது என்னைப்போல லௌகீக வாழ்கையில இருக்கறவாளுக்கு எப்படி சாத்தியமாகும்? ஒரு பக்கம் ஆபீஸ் பொறுப்பு இன்னொரு பக்கம் குடும்ப பொறுப்பு, இதிலேயே நாளின் பெரும் பாகம் போயிடறதே? ஆத்ம விசாரம் பண்ணவே நேரம் கொஞ்சம்தான் கிடைக்கும்; இதில இடைவிடாம ஆத்மாவில மனசை வெச்சுண்டு இருக்கறது சிரம சாத்தியம் என்று கூட இல்லை; முடியவே முடியாது! அப்ப எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா?” இதை கேட்கும் போது அவர் குரலில் ஆதங்கம் தொனித்தது!
பகவான் மிக்க கருணையுடன் மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார் நீங்க வீட்டை விட்டு ஆசிரமம் வரதுக்கு கிளம்பினீங்க. வழியில உங்களோட நண்பரை சந்திக்கறீங்க. அவரோட க்‌ஷேம லாபங்களை விசாரிக்கறிங்க. அப்புறம் ஆசிரமத்துக்குத்தானே வறீங்க? அவரோட போகலையே? அப்படித்தான் இதுவும்.
காத்தால எழுந்தவுடனே மனசு அமைதியா இருக்கும். அப்போ அதுக்கு அது யார்ன்னு நினைவு படுத்தணும். தூக்கம் முடிந்து அது அப்பதான் வெளியே வந்தது என்கிறதால அதுக்கு தூக்கத்தோட சுகத்தை மறுபடி மிக சுலபமா நினைவுப்படுத்த முடியும். அதாவது மனசை தியானத்துல விசாரபரமா ஈடுபடுத்தணும். இப்படி காத்தாலே எழுந்த உடனே விசாரம் செய்யறது நீங்க ஆசிரமத்துக்கு கிளம்பற மாதிரி. பிறகு நமக்கான வேலை எல்லாத்தையும் கவனிக்கணும். காத்தாலே செய்த தியானத்தோட தொடர்பு தைல தாரையா இருக்கும். அது நமக்குத்தெரியுமோ தெரியாதோ அது விஷயமில்லை. வேலை தானா நடக்கும். இதான் வழியில நண்பனை பார்த்து விசாரிக்கறது.
மறுபடி இரவு தூங்கும் முன்னே கொஞ்ச நேரம் விசாரபரமா தியானத்துல இருக்கணும். இதுதான் சினேகிதன்கிட்டே சொல்லிக்கொண்டு ஆசிரமம் வந்து சேரறது.
இப்படித்தான் நாளெல்லாம் தியானத்துல இருக்கணும்.
காத்தாலே தூங்கி எழுந்தததிலே இருந்து இரவு தூங்கறது வரைதான் வாழ்க்கை. இப்படி இருந்தா வாழ்க்கையே தியானமாயிடும்.
இதோட பரிபாகத்திலே மனம் தியானத்துல இருந்தாலும், எதையாவது நினைச்சுக்கொண்டு விவகாரத்துல இருந்தாலும் ஆத்மாவிலேயேதான் நாம இருக்கோம் என்கிற தெளிவு வரும்.
மனதை சதாகாலமும் ஆத்மாவிலே வைத்து இருப்பதற்குப் பேர்தான் ஆத்ம விசாரம்ன்னு நான் சொல்வதோட அர்த்தம் இதுதான். இந்த தெளிவுதான் ஆத்ம விசாரம்!”
 

No comments: