Pages

Tuesday, March 15, 2016

தேஹம் நாஹம்


 பகவான் ரமணரின் அடியார்களில் ஒருவர் குர்ரம் சுப்பராமையா. வருடா வருடம் ரமணாஸ்ரமத்துக்கு வந்துவிடுவார். இரு சிறு குழந்தைகளும் அவருடன் வருவர். வந்திருக்கும் அடியார்களில் சிலர் எதையேனும் எழுதி கொண்டு வந்து பகவானிடம் காட்டுவது உண்டு. அதில் பிழைகள் இருந்தால் திருத்திக்கொடுக்க வேண்டுவர்கள். அவரும் அதை பார்த்து திருத்தி கொடுப்பார். இதை பார்த்த சுப்பராமையாவின் சின்னக்குழந்தை தன் பள்ளி நோட்டுப்புத்தகத்தை கொண்டு பகவானிடம் கொடுத்தது. கூடியிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு. ஆனா பகவான் மற்றவர்கள் கொடுத்ததை வாங்கியது போலவே இதையும் வாங்கி குழந்தை எழுதியதை திருத்தி நோட்டுக்கு அட்டை போட்டு கொடுத்தார்.
இந்தக்குழந்தையை கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பார்.
இது துண்டு. இது பகவானோட துண்டு.
சரி.
துண்டு பகவான் ஆகுமோ?
ஆகாது.
இது என்ன?
கை.
இது பகவானோட கை. இந்த கை பகவானாகுமோ?
ஆகாது.
குழந்தையின் சட்டையை காட்டி இது என்ன என்பார். அது சட்டை என்று சொல்லும்.
இது யாரோட சட்டை?
இது என் சட்டை.
இது உன் சட்டை; ஆனா சட்டை நீயாகுமோ?
இல்லை.
இது என்ன?
இது என் கை.
இது உன் கை; ஆனா இந்தக்கை நீயாகுமோ?
இல்லை.
இது உன் உடம்பு; ஆனா இந்த உடம்பு நீயாகுமோ?
இல்லை.
இதே போல திருப்பித்திருப்பி சொல்லிக்கொடுப்பார்.
அப்புறம் சொல்லிக்கொடுத்தது:
தேஹம் நாஹம் சொல்லு. குழந்தை திருப்பிச்சொல்லியது.
கோஹம் ஸோஹம் சொல்லு. குழந்தை திருப்பிச்சொல்லியது.
( தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் + உடம்பு நான் அல்ல. நான் யார்? அதுவே நான்.)
இதையே திருப்பித்திருப்பி சொல்லிக்கொடுத்தார்.
மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதெல்லாம் எவ்வளோ பெரிய விஷயம். குழந்தைக்கு என்ன புரியும்?
சுப்பராமையா ஊருக்கு செல்லும் நாள் வந்தது. பகவானிடம் சொல்லிக்கொண்டு போக வந்தார்கள். பகவான் மலைக்குப்போக கிளம்பிக்கொண்டு இருந்தார். குழந்தையை பார்த்து "எங்கே நான் சொல்லிக்கொடுத்ததை சொல்லு பார்க்கலாம்?”என்றார்.
தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் . குழந்தை திருப்பிச்சொல்லியது.
ரொம்ப சரி. இதையே தினமும் சொல்லிக்கொண்டே இரு! தன் கையில் இருந்த தடியால் அதன் தலையில் தட்டி சொன்னார் “ நான் என் வீட்டுக்குப்போறேன். நீயும் உன் வீட்டுக்குப்போ!”
ஓரிரு மாதங்களில் குழந்தை இறந்துவிட்டது. அதன் சமாதியில் கல்வெட்டு ஒன்று வைத்தார்கள். தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம்.

No comments: