Monday, December 15, 2008
தமம்
தமம் என்கிறது இந்த மனசு கண், காது முதலானவற்றால மனசு வெளியே போய் உலக விஷயங்கள்ல ஈடுபட்டு சுகம் என்கிற கஷ்டத்துல { :-)) } அகப்படறதை தடுப்பது. அதாவது புறக்கரணத்தை கண்டிக்கிறது. புறக்கரணம்? அதாங்க இந்திரியங்கள் / புலன்கள்.
ஐந்து கர்மேந்திரியங்களும் ஐந்து ஞானேந்திரியங்களும் இருக்கு இல்லையா? கை பல விஷயங்களை செய்கிறது. கால் நடக்க; வாய் பேச, இன்னும் இரண்டு இந்திரியங்கள் கழிவுகளையும் வீர்யத்தையும் வெளியே தள்ள. இவை 5 கர்மேந்திரியங்கள். வெளியே உள்ள விஷயங்களை அறிய பயன்படுவது ஞானேந்திரியங்கள். சப்தத்தை கேட்க காது; வழவழ, சொரசொர, சில்லுன்னு, சூடா, இப்படி அனுபவிக்க தோல்; வண்ண மயமா உலகை பார்க்க கண்கள்; பல சுவைகளை அறிய நாக்கு (வாய்); பல வாஸனைகளை அறிய மூக்கு.
இதையெல்லாம் கட்டுக்குள்ள வைக்காததுதான் பல பிரச்சினைகளுக்கும் காரணம். ஒவ்வொரு இந்திரியமும் கொடுக்கக்கூடிய அனுபோகத்தில இருக்கிற ஆசையாலதான்ஒரு ஜீவன் இந்த மாயா லோகத்திலே கட்டிப்போடப்படுகிறது. இந்த மாயைல இருக்கிற வரை ஆத்மாவை புரிஞ்சுக்க முடியாது என்பதாலே ஆத்ம நாட்டம் இருக்கிறவங்க இதை கட்டிப்போடணும்.
சமம் தமம் ரெண்டுமே அடக்கு என்கிற பொருளைதான் தருதுக. இருந்தாலும் வெளி விஷயங்களை அறிந்து அனுபோகத்துக்கு உதவி செய்யறவற்றை அடக்கறது தனியாவும், இந்திரியங்கள் உதவி இல்லாட்டாக்கூட தானே எண்ணங்களை உற்பத்தி பண்ணி சலிக்கிற மனசை அடக்குகிறது தனியாகவும் இருக்கிறதால ரெண்டாச்சு. சமம் மனவடக்கமாயும் தமம் புலனடக்கமாயும் ஆச்சு. ரெண்டிலே மனவடக்கம்தான் முக்கியம். ஏன்னா, புறக்கரணம்ன்னு சொன்னாலும் இந்த இந்திரியங்கள் வழியே வெளியே பாய்கிறது என்னவோ மனசுதான். மனசை கண்டிச்சுட்டா புலன்களுக்கு ரொம்ப ஒண்ணும் வேலை இல்லை. ஆதனாலதான் சமம் முதல்ல சொன்னாங்க.
அப்ப மனசை கட்டுப்படுத்தறது ஒண்ணே போதுமே? ஏன் புலன் கட்டுப்பாடு?
நல்ல கேள்வி. மனசை முழுக்க கட்டுக்கு கொண்டு வரது ஞான வழியிலே ரொம்ப தூரம் போன பிறகுதான் கை வரும். அது வரை கொஞ்சம் கொஞ்சம் கட்டுப்பாட்டுல இருக்கும்.
கேசரி வாசனை மூக்குக்கு எட்டாதவரைக்கும் மனசு அது பின்னால போகாது. வாசனை கிடைச்சாச்சுன்னா கை கால் பரபரக்கும்; ஓடிப்போய் கேசரியை பாத்ததும் கை எடுக்கும், வாய் திறக்கும்; நாக்கு ருசி பாக்கும் ஹா! இப்படி நிறைய விஷயங்கள் புலன்களுக்கு தென் படாத வரை பிரச்சினை இல்லாம தென்பட்டா இந்திரியங்கள் அதுக்கு ஆலாப்பறக்க, உடனடியா மனசு பிச்சுக்கொண்டு அலைய ஆரம்பிக்கும். மேல் மட்டங்களுக்கு போகிற வரையிலே இப்படித்தான் மனசு வெளிக்கவர்ச்சி இல்லாதவரை ஓரளவு அடங்கியும் அது புலப்பட்டா அலைகிறதுமா இருக்கும். புலப்படும் இந்த நேரத்துக்குத்தான் இந்திரியங்களை கட்டுப்படுத்தணும் என்கிறதும் அதை தனியா வெச்சு இருக்கிறதும்.
கடோபநிஷத்துல அழகான உதாரணம் புலன்களைப்பத்தி.
ஜீவன் தேர்ல இருக்கிற யஜமானன் மாதிரி.
சரீரமே தேர்.
ஓட்டுறவன் புத்தி.
தேரை இழுக்கிற குதிரைகள் புலன்கள். இவற்றை கட்டுப்படுத்துகிற லகான் மனசு. இது புத்தி கைலதானே இருக்கும்.
இந்த விவேக வைராக்கியத்துல கெட்டியான நல்ல புத்தி சரியான ஆத்ம வழியில போகிற மாதிரி மனசால லகானை பக்குவமா பிடிச்சு விட வேண்டிய அளவு மட்டுமே விட்டா புலன்களான குதிரைகள் தேவையான அளவு நல்ல அனுபோகங்களுக்கு மட்டுமே போய் இழுத்துப்போக இறங்க வேண்டிய இடமான ஆத்ம சாக்ஷாத்காரம் வரும். அப்புறம் என்ன! இவை ஏதும் தேவையில்லை என்கிறதாலே குதிரைகளையும் லகானையும் அவுத்துவிட்டு சாரதியையும் அனுப்பி வைத்துட்டு யஜமானன் சுகமா இருக்கலாம்!
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அழகாக விளக்கியிருக்கீங்க!
Post a Comment