Pages

Monday, December 29, 2008

சமாதானத்தில் இன்னும் ஒண்ணே ஒண்ணு...
சமாதானத்தில் இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்கு.
முன்ன சொன்ன ஸ்லோகம் முடியலை, பாதில நிக்குது, இல்லையா?

ஸம்யக் ஆஸ்தாபனம் புத்தே: சுத்தே ப்ரம்ஹணி ஸர்வதா| தத் ஸமாதானம் இத்யுக்தம் ந து சித்தஸ்ய லாலநம்.
வி.சூ 26/27
அது என்ன ¨ந து சித்தஸ்ய லாலநம்¨? சித்தத்துக்கு செல்லம் கொடுக்கிறது இல்லை.

அடம் பிடிக்கற குழந்தையை மிட்டாய் தரேன் என்கிறாப்பல தாஜா பண்ணி காரியத்தை செய்ய வைக்கிறது போல, சாதகனுக்கும் ஆரம்ப நிலைகள்ல கொஞ்சம் சலுகை கொடுத்து முன்னேற தூண்டுகிறது உண்டு. அது முடியலையா, பரவாயில்லை; இத பண்ணு என்கிறது போல. எடுத்த எடுப்பில ப்ரம்மத்துக்கு உருவம் இல்லை, உருவம் இல்லாமலே பக்தி பண்ணுன்னு சொல்லாம ஆனை, பூனைன்னு எப்படி வேணுமானா வெச்சுக்க, பக்தி பண்ணு சொன்னது போல. அது ஆரம்ப நிலை. இப்ப இன்னும் முன்னேறியாச்சு. போகப்போக கன்செஷன் கம்மி, அப்புறம் இல்லவே இல்லை. அப்படி இப்ப புத்தியை நிலை நாட்டறதுல சலுகை ஒண்ணும் இல்லை என்கிறார் சங்கரர். நிர்குணமான வஸ்துலதான் புத்தியை வைக்கணும் என்கிறார். அட, இதெல்லாம் நமக்கு வராதேன்னா...

இப்ப வராதுதான். பொறுமை வேணும். ஆத்ம முன்னேற்றம் பல ஜன்மங்கள்ல நடக்கிற விஷயம். எல்லாருக்கும் திடுதிப்புன்னு வந்துடாது. ஒவ்வொரு ஜன்மத்திலேயும் முன்னே விட்ட இடத்துலேந்து தொடருவோம். அதனால கவலை வேணாம்.
அதானால இப்ப நாம செய்கிறது புத்தி பூர்வமா இது எல்லாம் என்னன்னு தெரிஞ்சுகிறதுதான். சாதனையில போகப்போக அனுபவம் ஏற்படும்.

ஆக நிர்குணமான சுத்தமான ப்ரம்மத்தில் பூர்ணமாகவும் சரியாகவும் எக்காலமும் நிலைநாட்டுவதாக எது உண்டோ அதுவே ஸமாதானம் என்று சொல்லப்படுகிறது.
--
ஆக சமாதி ஷட்சம்பத்தில ஆறும் முடிஞ்சது.

அடுத்த நிலை  முமுக்ஷுத்வம். மோக்ஷத்தை தீவிரமா விரும்பறது. இந்த விருப்பம் நிறைவேறினா கிடைச்சா அவன் முக்தன்.

அட, எல்லாருக்கும்தான் மோக்ஷம் வேணும் என்கிறதுல விருப்பம் இருக்கும்.

அப்படியா? ஆச்சரியம் என்னன்னா, அதுதான் இல்லை.

நான் இந்த வழிக்கு வந்த புதிசில ஒரு சிருங்கேரி சங்கர மடத்து சன்னியாசி ஒத்தரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தேன்.  இப்ப நான் எழுதற சமாசாரம் எல்லாம் அப்பதான் படிக்க ஆரம்பிச்சு இருந்தேன். படிச்சு புரியறதைவிட கேட்டுக்கலாமேன்னு நிறைய கேள்விகள் கேக்க ஆரம்பிச்சேன். அவரும் சளைக்காம பதில் சொல்ல ஆரம்பிச்சார். இப்படியே போகிற போது ஒரு இடத்திலே ¨சாதாரணமா மக்கள் மோக்ஷத்தை விரும்ப மாட்டாங்க¨ ன்னார். எனக்கு ஆச்சரியமா போச்சு. ¨ஏன், இதோ நான் கேக்கிறேனே?¨ ன்னேன். ¨அட! உன்னை பாத்து அப்பலேந்து ஆச்சரியப்பட்டு கொண்டு இருக்கேன்பா! இவ்வளவு வருஷத்தில என்கிட்ட சிஷ்யர்கள் தவிர யாரும் இப்படி இந்த விஷயத்திலே கேள்வி கேட்டதே இல்லை¨ ன்னார். அப்புறம் உலகத்தை கொஞ்சம் கூர்ந்து பாத்ததிலே அது உண்மைதான்னு தெரிஞ்சது.

¨ஏன் இந்த பதிவுகளை படிச்சுட்டே எவ்வளோ பேர் து.கா து.கா ன்னு ஓடறாங்க!¨ அப்படின்னு யாரோ சொல்கிறது காதில விழுது!

மனுஷ ஜன்மம் கிடைக்கிறதே பெரிசு. அதிலும் ஆன்மீக நாட்டம் இருக்கற சூழ்நிலைல பிறக்கறது இன்னும் பெரிசு. ஆதிலும் ஆன்மீக ஈர்ப்பு இருக்கிறது பெரிசு. அதிலும் வெறும் ஈர்ப்போட நின்னுவிடாம சாதனா செய்யணும்ன்னு ஒரு நினைப்பு வறதும் அதில ஈடு படறதும் ரொம்ப பெரிசு! ஆத்ம ஞானத்துக்கு எல்லாத்தையும் த்யாகம் செய்யறது ரொம்ப ரொம்ப பெரிசு!

குறிப்பா மேல் நாட்டு மக்களுக்கு இது அதிர்ச்சி தரதாவே இருக்கு. தன்னோட சுய அடையாளத்தை இழக்கணும்னா வெல வெலத்து போயிடறாங்க! அதுக்கு நான் ரெடி இல்லேன்னே சுத்தமா சொல்லிடறாங்க. ஒரு போலந்து நாட்டு பெண்மணியோட மடலாடிகிட்டு இருந்தேன். இந்தியா பத்தின விஷயங்களை அவங்க ரொம்ப ஆர்வமா கேட்டுகிட்டே வந்தாங்க. கடேசில இந்த பிலாசபி தான் அவங்களுக்கு பிடி படலே!
அது எப்படி தான் என்கிறதை விட்டுக்கொடுக்க முடியும்?

தான் என்கிற பொய் தோற்றத்தை விட்டுட்டு தான் உண்மையில யார் ன்னு தெரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சா அந்த ¨தான்¨ தானா இருக்காது. இன்னும் பரந்து விரிந்து போயிடும்!


Post a Comment