Pages

Tuesday, December 23, 2008

சிரத்தை -2

(ஷெட்யூல் பண்ணப்போய் பப்ளிஷ் பண்ணிட்டேன்.! ஹிஹி!)

இந்த மாதிரி புத்திக்கு எட்டாதபடிக்கு பல விஷயங்கள் இருகிறதாலேதானே யாரும் எதையும் முடிந்த முடிவா சொல்ல முடியலை! அத்வைதம், விசிஷ்டாத்வைதம். த்வைதம் என்று பலவிதமாக பிலாஸபி இருக்கு! எதையுமே தப்புன்னு சொல்லவும் முடியலை. அவரவர் தான் அனுபவித்தபடி சொல்லிப்போனார்கள். இதிலே ஒத்தர் உசத்தின்னோ ஒத்தர் தாழ்த்தின்னோ சொல்ல எதுவுமே இல்லை.

எப்படி இருந்தாலும் ஒரு கட்டத்திலே புத்தியை விட்டு விட்டு சிரத்தையின் பலத்திலேயே போக வேண்டி இருக்கு. அப்படித்தான் அந்த விளையாட்டு இருக்கு. என்ன பண்ணுவது! அடைய வேண்டியது புத்திக்கு எட்டாததாச்சே! ஆத்ம வழில நல்ல முன்னேற்றம் கண்டவர் கூட தொடர்ந்து இதே வழில ஆசாரியர் உபதேசித்தபடிக்கு போகலாம்ன்னு போனாலே இலக்கை அடையலாம். ஒரு ஸ்டேஜுக்கு மேலே கேள்வி கேட்கிறதுல பலன் கிடையாது. அனுபவத்திலேயே புரிஞ்சு கொள்ளணும். கேள்வி கேட்டா ஆசாரியரும் புத்திக்கு புரிகிறாப்பல சொல்ல முடியாது/மாட்டார்.

அதனால ஆரம்பத்திலேன்னு இல்லாம கடைசி வரைக்கும்கூட சாஸ்திரம் சொல்வது மேலேயும் குரு சொல்வது மேலயும் ஒரு தளராத நம்பிக்கை வைக்கணும். நடுவிலே என்ன நடந்தாலும் கூட அதன்படி செய்து கொண்டு போகணும். நிறுத்தாம நம்பிக்கையோடவே சாதனை செய்யணும். இப்படிப்பட்ட சிரத்தை சாதனையின் ஒரு உபாயம் மட்டும் இல்லை. இதுவே உச்சியான உபாயம். (1)

கண்ணனும் திடமாகவே சொல்கிறான்: சிரத்தை உள்ளவன்தான் ஞானம் அடைகிறான்.(2)

ஸாம வேதத்து மஹா வாக்கியம்தான் நாலுலேயும் கொண்டாடப்படுவது. அதை உபநிஷத்திலே சொல்கிற போது ஆசார்யனான உத்தாலக ஆருணி தன் பிள்ளையான ச்வேதகேதுக்கு உபதேசிக்கிறதா வருகிறது. ஆல விதையை பிளந்து கொண்டே போகச்சொன்ன ஆருணி உள்ளே ஒண்ணுமே இல்லை என்ற பிள்ளையிடம் ¨நீ ஒண்ணுமே இல்லை என்றதில் இருந்து சூக்ஷ்மமான சத்து ஆலமரமாக வரப்போகிறது¨ என்று சொல்லி குளிர்ச்சியாக ¨ஸௌம்ய¨ என்று கூப்பிட்டு ¨இதில் சிரத்தை வை¨ - ச்ரத்தஸ்வ என்கிறார்.
மஹா வாக்கிய உபதேசம் பெறும் தகுதி உள்ளவரிடம் கூட ச்ரத்தை வைன்னு சொல்ல வேண்டி இருக்கு! அப்ப ப்ரஹ்ம அனுபவம் ப்ரத்யக்ஷமா - நேரடியா உண்டாகிற வரை நம்பிக்கையே முக்கியம் என்று ஆகிறது.

விஷயங்களை நம்புவது மட்டும் இல்லை. அதை சொல்லுகிற குருவிடத்திலே கூட நம்பிக்கை வேண்டி இருக்கு. இது ரொம்பவே முக்கியம். குரு ஞானியா இருந்தா கூட பல விஷயங்களிலே அஞ்ஞானியா நடிக்க வேண்டி இருக்கும். அப்பதான் அவர் தன் வாழ்க்கையை நிம்மதியா நடத்திக்கொண்டு போக முடியும். யார் கிட்டேயாவது கொஞ்சம் சக்தி இருக்குன்னா அவரை விடாம படுத்தி எடுத்து தனக்கு முக்கியமா தோணுகிற காரியங்களை சாத்திச்சு கொண்டு அப்புறம் கஷ்டப்படறதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே! அவர் சொல்கிறதை பின் பற்ற தயாராக இருக்க மாட்டோம்; ஆனா அவர் நமக்கு வேண்டிய காரியங்களை சாதிச்சு கொடுக்கணும். ம்ம்ம்ம்...... இதுதானே உலகம்! போகட்டும்.

ஒரு வேளை யாரானா அசத்துகிட்ட இவர்தான் குருன்னு மாட்டிகிட்டா என்ன செய்வது? இது பல பேருக்கும் வரக்கூடிய சந்தேகம்தான். அப்படி வந்தா தர்ம சங்கடம் தான்!

குருவை தீர விசாரித்துதான் அடைக்கலம் ஆக வேண்டும். அதுவும் போலிகள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்திலே ரொம்பவும் பிரச்சினையான விஷயம். இவர் நிஜமாவே ஞானிதானா? அப்படின்னா ஏன் இப்படி சாதாரண மனுஷன் போல கோபப்படுகிறார், தாபப்படுகிறார்? இப்படி சந்தேகம் வந்தா தொலைந்தது. அந்த சந்தேகப்பேய் பெரிசா வளந்து மூளையை ஆக்கிரமித்து கொண்டு ஒரு சாதனையும் பண்ணவிடாம ¨ஏமாந்து போயிட்டோமோ, ஏமாந்து போயிட்டோமோ ¨ன்னு இலக்கை கோட்டை விட செய்துடும்.

பகவான் அதனாலதான் சந்தேகப்படுபவன் அழிந்தே போவான் (3) என்று சொல்கிறான். இதையே தமிழ்ல அழகா சொல்லி இருக்கு- பாஸிடிவ்வா! நம்பினோர் கெடுவதில்லை. அப்படின்னா நம்பாதவங்க? அதை சொல்வானேன்!

அப்படி சொன்னா எப்படி? ஒரு வேளை போலியிடம் போய் சேர்ந்துவிட்டோமானால்? நம்ம சாதனா என்ன ஆறது? அவர் நம்மை உபயோகிச்சு (exploit செய்து) கொண்டா?

அப்படி ஆனாலும் உண்மையில் ஒரு பிரச்சினையும் இல்லை. ¨இந்த குருகிட்ட வந்து விழுந்துட்டோம். அவர் வெளியே எப்படி வேணுமானாலும் தோன்றிவிட்டு போகட்டும். நம்மை பொறுத்தவரை அவர் மூலமா பகவான் விமோசனம் தராம கை விட மாட்டான்¨னு திடமான நம்பிக்கையோட சிரத்தையை மனசில ஆணிவேரோட விட விட்டு சரணாகதி செய்துடணும். ஆரம்ப பாடம் சொல்லித்தர ஆசார்யனை விட இது ஞான வழி காட்டற குருகிட்ட ரொம்பவே முக்கியம். அப்படி செய்தா குருவா வரிச்ச ஆசாமி போலியா இருந்தாலும், அவருக்கு ஞானம் இல்லாவிட்டாலும் அவர் மூலமா பகவான் இந்த சிஷ்யனுக்கு ஞான அனுக்கிரஹம் செய்துடுவான்.

நாமே தெரிஞ்சு கொள்கிறதைதான் உண்மை என்றும் சாஸ்திரம் சொல்லி அதை ஆசார்யன் தனக்கு சொல்வதை நம்பிக்கையிலேதான் எடுத்துக்கணும் என்று அவ்வளவு திட புத்தி இல்லாமல் இருக்கிறது சிரத்தை இல்லை. அதானே ஆரம்பத்துல சொன்னோம்?
பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும்.சரி, சரி, ஏன் வேத, சாஸ்திரத்துக்கு இவ்வளோ முக்கியத்வம்ன்னா....
வேதங்களும் சாத்திரங்களும் பகவான் ரிஷிகளுக்கு காட்டிக்கொடுத்து இருக்கிற சத்தியம். இதுல ஒரு நம்பிக்கை வேணும். இதுவே சிரத்தை
சிரத்தை என்கிற வார்த்தையை நிருக்தத்திலே பிரிச்சு வேர்ச்சொல் ஆராய்ச்சி செய்கிறபோது ச்ரத், தா என்று ரெண்டு சொல்லாக சொல்கிறாங்க. ச்ரத் = சத்யம். தா = fix செய்வது. ஒரு விஷயத்தில் இதுதான் சத்தியம் என்று மனசை திடப்படுத்துவது. அதான் சிரத்தை.

சாந்தோக்கியத்திலே இப்படிப்பட்ட ச்ரத்தை நாம் மனசில ஆழ்ந்து நினைக்க வேண்டிய, கண்ணுக்கு தெரியாத, தத்தவத்திலே இருந்தாதான் ஒருத்தன் சரியாக அப்படி நினைப்பான். இல்லாதவன் அப்படி நினைக்கவே முடியாது என்கிறது.(4) ¨எப்போது சிரத்தை வைக்கிறானோ அப்போதே சரியாக நினைப்பது¨.

முண்டகோபநிஷத் பாட்டியல் போடுகிறது - யாருக்கு பிரம்ம வித்தையை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று. பல யோக்யதைகளில் - க்ரியாவந்தர் (கர்ம அநுஷ்டானமுள்ளவர்) ச்ரோத்திரியன் (வேத பொருளை உணர்ந்தவர்), ப்ரம்மத்தில் நிலை பெறும் தாபம் உள்ளவர் என்று சொல்லி மேலே அது ச்ரத்தையை சொல்லுகிறது. (5) ப்ரச்னோபநிஷத் ஆத்மாவை தேடிப்போகிறவர்கள் தபஸாலும், ப்ரஹ்மசர்யத்தாலும். ச்ரத்தையாலும் வித்யையாலும் தகுதி பெறுவதாக சொல்லுகிறது. (6)

கண்ணனும் ¨சாஸ்திர விதியை மீறி தன் இஷ்டப்படி செய்கிறவனுக்கு சித்தி கிடைக்காது, பர கதியும் கிடைக்காது. அதனால அர்ஜுனா சாஸ்திரத்தையே பிரமாணமா வைத்து கொண்டு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதுன்னு வழி வகுத்துக்க¨ ன்னு சொல்றார். (7)

1.ச்ரத்தா ச ப்ரஹ்ம விஜ்ஞானே பரமம் ஸாதனம் - ப்ருஹ -அத் 2 முகவுரை.
2.ச்ரத்தாவான் லபதே ஞானம் ப.கீ 4, 39
3.அச்ரத்ததானச்ச சம்சயாத்மா வினச்யதி ப.கீ 4, 40
4.சாந்தோ 7-19-1
5.சாந்தோ 3-2-10
6.ப்ரச்னோ1-10
7.ப.கீ 16 – 23, 24


Post a Comment