Pages

Monday, December 8, 2008

பரிட்சை விடைத்தாள் -3
இது மௌலியோட பார்வை. தொடாத ஒரு விஷயத்தை தொட்டு இருக்கார். அது பத்தி பின்னால் எழுதுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்மா என்று ஆரம்பித்து நித்ய-நைமித்திக கர்மாக்களை விளக்கி நிஷ்காம்ய கர்மாவிற்கு வந்து கீதை ஸ்லோகங்களை பிரிச்சு மேஞ்சுட்டார் திவாண்ணா. ஆரம்பம் முதல் அழகிய மணவாளரது வெண்பாக்களையும் அளித்து, மேலும், பையர், தனது மறுபாதி, வேளுக்குடியார்ன்னு ஒரு குருப்பையே துணைக்கு வைத்துக் கொண்டு பதிவுகளை எழுதியது அழகு. நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. கீழே வருவது எனது சொந்த புரிதல்கள். தவறுகள் இருப்பின் அது எனது புரிதலால் மட்டுமே. திவாண்ணா மற்றும் படிப்பவர்கள் பிழைதிருத்தினால் மகிழ்வேன்.யத: ப்ரவ்ருத்திர் பூதானாம்

யேன ஸர்வமிதம் ததம்

ஸ்வகர்மணா தமப்யர்ச்ய

ஸித்தம் விந்ததி மானவ ॥18.46॥அதாவது அவரவர் ஸ்வகர்மாவை அடிப்படையாகக் கொண்டு கர்மங்கள் செய்தால் அதுவே தனக்குப் ப்ரீதியாகிறது என்று கூறியிருக்கிறான் கண்ணன். இந்த கர்மாவின் பலனையும் ஈஸ்வர-ப்ரீதியாக செய்யவேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல. கர்மாக்களால் புண்ணியம் அல்லது நன்மை ஏற்படுவதில்லை. ஆனால் பற்றினைத் துறந்து கர்மாவைச் செய்வதால்தான் நன்மை கிடைக்கிறது. சரி, விதிக்கப்பட்ட கர்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தொடர்வதால் என்ன நடக்கும்?, சிரத்தை உருவாகும், அதன் மூலம் புலன்களை அடக்கி முடிவாக கர்மா நம்மை பற்றற்ற நிலைக்குக் கொண்டு செல்லும்.கல்பம், நிருக்தம், சந்தம் வியாகரணம் போன்ற எல்லா அங்கங்ளையும் கொண்ட வேதத்தை அத்யயனம் செய்தாலும், பரமாத்மாவை அடைதலைக் குறிக்கோளாக கொள்ளாது, லெளகீக சுகத்தில் ஒருவன் இச்சை கொண்டால், அவனது அந்திம-காலத்தில் வேதம் இறகு முளைத்த பறவை போல அவனை விட்டு விலகிச் சென்றுவிடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆக, கர்மாவைச் செய்தல் மட்டும் பெரிதல்ல, பண்ணும் கர்மா, கர்மாவின் பலன் போன்ற எல்லாமும் ஈஸ்வரனை நோக்கியே இருக்க வேண்டும்.சரி, கர்மா என்பதில் எல்லாம் அடக்கம், எது நல்ல கர்மா, எது தவறானது என்று எப்படி அறிவது?, அதற்கும் கண்ணன் பதில் சொல்லியிருக்கிறான். எது செய்யக்கூடிய கர்மா, எது செய்யக்கூடாதது என்பதை அறிந்து கொள்ள சாஸ்திரங்களே பிரமாணம் என்கிறான்.

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வச:

அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥3.27॥ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணநி ஸர்வச

ய: பச்யதி ததாத்மானம் அகர்த்தாரம் ஸ பச்யதி ॥13.29॥என்பதாக கீதையில் மூன்று வகையான கர்மங்களை பற்றி கூறியிருக்கிறான் கண்ணன். அவை, க்ரியமாண கர்மா (நிகழ்காலத்தில் செய்வது), ஸஞ்சித கர்மா, ப்ராராப்த கர்மா எனப்படுகிறது.அதாவது சாஸ்திரம் சொன்ன விதிமுறைகளின்படி செய்வது சுபமான க்ரியமாண கர்மம். அதே சமயம் காம-க்ரோத-லோப-ஆஸக்தியால் (குருட்டுப் பற்று) தூண்டப்பட்டு சாஸ்திரம் கூடாது என்று கூறும் செயல்களைச் செய்வது அசுப க்ரியமாண கர்மா.
இதே போல, அநேக மனிதப் பிறவிகளில் எந்த கர்மாக்கள் பற்றிக் கொண்டிருக்கிறதோ அவை சஞ்சித கர்மா என்று கூறக் கேட்டிருக்கிறேன். இந்த சஞ்சித கர்மாவின் முடிவாக பயன் மற்றும் சம்ஸ்காரம் வருகிறது.
இந்த சஞ்சித கர்மாவிலிருந்தே, இக்கர்மாவின் பயனே ப்ராரப்தம் என்று எங்கோ படித்த நினைவு. அது பற்றிய தொடர்பினை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று நினைக்கிறேன். ஒரு வேளை தனித்தனி பதிவுகளைப் படித்ததில், எனக்கு அந்த புரிதலுக்கு வரவில்லையோ?. திவா அண்ணா வழிகாட்டினாலும் நான் சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் தொலைவு அதிகம் என்றே தோன்றுகிறது. பராம்பிகை அருளட்டும்.

Post a Comment