Pages

Tuesday, September 9, 2008

இரண்டாம் நாள்



இரண்டாம் நாள்:

முற்பகலில் எரிந்தபின் தங்கி இருக்கக்கூடிய எலும்புகளை சேகரிப்பர். உடலில் எரிய சிரமமாக உள்ளது இதுதான். அதனால் கொஞ்சம் தங்கிவிடும். பால், நீர், நெய், தர்ப்பை, அத்திக்கொத்து, கண்டங்கத்தரிக்காய், கருப்பு சிவப்பு நூல்கள், கற்கள், நீர் குடங்கள், மண்வெட்டி, பானை இவற்றை எடுத்து செல்வர். நாம் காவல் இல்லாததால் வெட்டியான் உள்ளிட்ட பலர் சவத்தை தொட நேர்ந்து இருக்கும். அதற்கு பிராயச்சித்தங்கள் செய்து;

சிதையில் அக்னி அணைந்து போயிருந்தால் அதற்கும் பிராயச்சித்தம் செய்வர்:

பால் அல்லது பஞ்ச கவ்யத்தால் அக்னியில் (சாம்பலில்) தெளிப்பர்.

சாம்பலை எடுத்து சமித்தின் மீது வைத்து சிதைக்கு தெற்கே எங்காவது மும்முறை பூமியில் கோடு கிழித்து சாதாரண அக்னி வைப்பர்.
மந்திரம் சொல்லி அதில் சமித்தை வைப்பர். மௌனமாக நீரால் சுற்றி ஹோமம் செய்வர். 4 முறை நெய் எடுத்து பிரஜாபதி குறித்து ஹோமம்.
பிராயச்சித்த ஹோமங்கள் செய்து அக்னியை சிதையில் வைப்பர்.

தெற்கு பார்த்து நின்று நீர் அதிகமாக கலந்த பாலை சிதையில் அத்தி கொத்துக்களால் மந்திரம் சொல்லி அக்னியில் தெளிப்பர். தெற்கிலிருந்து நிறைய அக்னி எடுத்து தனியாக வைத்து அதில் நெய்யால் 3 ஆகுதி ஹோமங்கள். பிறகு ஒத்தைப்படை நீர்குடங்களால் நீரிட்டு அக்னியை முழுதும் அணைக்க வேண்டும்.

(அதாவது அக்னி அணையாமல் இருந்து இப்படி செய்ய வேண்டும். அனேகமாக அணைந்துவிடுமாதலால் அதற்கு பிராயச்சித்தம் செய்து மீண்டும் அக்னியை உண்டாக்கி கர்மா தொடர்கிறது.)

கர்த்தா இடது கையில் கறுப்பு சிவப்பு நூல்களால் கண்டங்கத்தரியை கட்டுக்கொண்டு மேற்கே பார்த்து அமர்ந்து இடது காலை ஒரு கல் மீது ஊன்றிக்கொண்டு பார்க்காமலே இடது கையால் பற்கள் தலை எலும்புகள் ஆகியவற்றை மந்திரம் சொல்லி எடுப்பார். பின் கை கால் எலும்புகள், இடுப்பு எலும்புகள் துடை முழங்கால், பாத எலும்புகள். இப்படி மந்திரத்துடன் எடுத்து பின் மந்திரமில்லாது மீதியையும் எடுத்து ஒரு சட்டியிலோ துணியிலோ போடுவார்.

பிறகு சிதையில் உள்ள சாம்பலை எடுத்து தெற்கே ஒரு உருவமாக செய்வர். இதன் மேல் 5 வித திண்பண்டங்கள் - பொரி, கடலை, அப்பம், முறுக்கு, இளநீர் ஆகியவற்றை சமர்பிப்பர்.

பின் எலும்புகள் உள்ள கலசத்தை துணியாலோ வாணாயாலோ மூடிவிட்டு அதை எடுத்துக்கொண்டு எழுந்து மந்திரம் சொல்லி பின் இவற்றை அடக்கம் செய்ய போவர். வன்னி மரத்தடி, பலாமரத்தடி, மஹா நதி இவற்றின் அருகே குழி பறித்து தெற்கு முகமாக உட்கார்ந்து குழியில் தர்ப்பைகளை தெற்கு நுனியாக பரப்பி அகமர்ஷண சூக்தம் சொல்லி குழியில் அஸ்தி கலசத்தை வைத்து பால், நெய், சந்தன நீர், பஞ்சகவ்யம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து மண்ணால் மூடுவர். கங்கை முதலிய புனித நீர்களையும் இதில் விடலாம். முதல் நாள் செய்தது போல முழுக்கு போட வேண்டும்.

முன் காலத்தில் ஆற்று வெள்ளம் ஏற்பட்டு எலும்புகள் காணாமல் போக வாய்ப்பு இருந்தது. அப்படி ஆனால் அதே இடத்தில் உள்ள மண்ணையோ மீதி சாம்பல் மிஞ்சினால் அதையோ வைத்து கர்மா செய்வர்.

No comments: