Pages

Wednesday, April 22, 2009

அஞ்ஞானம், சந்தேகம், விபரீதங்கள்




சிரவணம் அஞ்ஞானத்தை ஒழிக்கும்.
மனனம் சந்தேகத்தை ஒழிக்கும்.
நிதித்தியாசனம் என்கிற சிந்தித்து தெளிதல் விபரீதத்தை நீக்கும்.
அஞ்ஞானம் என்கிறது ¨நாம் கூடஸ்தன்; பிரம்மத்தின் அம்சம். அதனால நாம் எப்பவும் பிரம்மமே என்ற நினைப்பு விட்டு நாம் பிரம்மமல்ல என்று நினைக்கிறது.
சந்தேகம் என்கிறது தத்வமஸி ன்னு குரு சொல்லி இருந்தாலும் பிரம்ம நிலையை அனுபவிச்சு இருந்தாலும் அதில திட நம்பிக்கை இல்லாமல் இது ஏதும் மாயையோ? கண்கட்டு வித்தையோ? நாம் பிரம்மம் இல்லையோ? என்று நினைக்கிறது.
விபரீதம் என்பது ¨ஜகம் பொய், பிரம்மம் மட்டுமே சத்தியம்; நாம் அந்த பிரம்மம்¨ என்று திடமா நினைக்காமல் ¨ஜகம் உண்மை. நாம் திருப்பி திருப்பி பிறக்கிற ஜீவன்¨ ன்னு நம்புகிறது.

எத்தனையோ ஜன்மங்களா இந்த ஆத்மா ¨நான் சீவன். பாவ புண்ணியங்கள் நிரம்பிய கர்மங்களை செய்து கொண்டே இருக்கோம். அதனால் அவற்றோட பலனை அனுபவிக்க திருப்பி திருப்பி பிறந்து உழல்கிறோம்.¨ ன்னு நினைக்கிறது. தான் பிரம்மத்தோட அம்சம்ன்னு நினைவே இல்லை. கடவுள்ன்னு ஒண்ணு நமக்கு அன்னியமா நம்மை அல்லாமல் இருக்கு என்று நினைக்கிறது. இப்படிப்பட்ட பிரிவினை மயக்கம் எவ்வளோ தூரம் அழுந்தி இருக்குன்னா கடவுள்ன்னு ஒத்தர் இருக்காரா என்கிற சந்தேகமும்; கடவுள் கூட இல்லவே இல்லை ன்னு தீர்மானிக்கறதா இருக்கு. {இது நானே பிரம்மம், அதனால கடவுள்ன்னு தனியா இல்லை என்ற அறிவால ஏற்பட்டது இல்லை.}

அதனால திடுதிப்புன்னு இது நாம் பிரம்மம்ன்னு நம்பிடாது. ¨நான் சீவன் இல்லை. சீவ சாக்ஷி. பிரம்மத்தோட ஒரு பகுதி. பிரம்மத்தை தவிர வேறாக நான் என்பது இல்லை; எங்கும் எப்போதும் பிரம்மம் மட்டுமே நிறைஞ்சு இருக்கு. அதுவே சத்தியம். அதிலேயே இருக்கிறதே முக்தி¨ ன்னு உடனடியா அனுபவத்துக்கு வராது. நான் என்பது இல்லை என்கிற ஒரு கான்செப்ட் கேட்டே நடுங்கற பேர்களை பாத்து இருக்கேன்! சுய அபிமானம் அவ்வளோ இருக்கு!

ஏன் பிரம்ம நிலையிலேந்து மீண்டு வருகிறாங்க?

பூர்வ ஜன்ம வாசனை அப்படி பிடிச்சு இழுத்து வருது. இதே வாசனைகள்தான் நாம திடமா இருக்க தடையாவும் இருக்கும். வாசனைகள் கிளைத்து திருப்பி புலப்பட்டு நிலைக்காம இருக்க நாம் ஜாக்கிரதை படுத்தணும். அதுதான் சிரவண மனன நிதித்யாசங்கள். இவற்றில சிரத்தை காட்டி பழகினா எப்படி நாம் சீவன்; பிரம்மம் இல்லைன்னு எப்பவும் தோணித்தோ அதே போல நாம் பிரம்மம்: சீவன் இல்லைன்னு தோணிடும். அதுவே நிலைத்திடும்.

91.
ஆத்ம ஞானத்துக்கு தடையான அசம்பாவனையாதிகளின் தன்மை:

பிரம பாவனையைமூடிப் பேதங்காட் டுவதஞ்ஞானம்
குரவன் வாக்கியநம்பாமற் குழம்புவதாஞ் சந்தேகம்
திரமறு சகமெய்யென்றுந் தேகநானென்று முள்ளே
விரவிய மோகந்தானே விபரீதமென்பர் மேலோர்.

பிரம பாவனையை மூடி (மாற்றி) பேதம் காட்டுவது அஞ்ஞானம் (அசம்பாவனை எனப்படுவது); குரவன் வாக்கியம் நம்பாமல் (சிரத்தை இல்லாது) குழம்புவதாம் சந்தேகம்; திரமறு (இல்லாத) சகம் மெய் என்றும், தேகம் நான் என்றும், உள்ளே விரவிய (பொருந்திய) மோகந்தானே விபரீதம் என்பர் மேலோர்.

மேல் விளக்கம்:
அசம்பாவனை: தான் பிரமம் என்ற சிந்தனையை மாற்றி சீவேஸ்வர சகத்து சிந்தனையை தோற்றுவிப்பது.

குழம்புதல்: ஆச்சாரியர் வாக்கியத்தில் (தத் த்வமஸி) நம்பிக்கை இல்லாது நான் கர்த்தாவோ சாட்சியோ, சாட்சி என்றாலும் கர்த்துவத்துவாதி உண்டோ, அப்படி கர்த்துவத்துவாதி இல்லாவிடினும் தனக்கு பூரணத்துவம் உண்டோ, உண்டானாலும் தன்னை அப்படி அறியலாமோ கூடாதோ என இது முதலாக வரும் சிந்தனைகளே குழப்பம்.

விபரீதம்: பழுதையிடம் தோன்றின பாம்பு இல்லாதது போல தன்னிடத்தில் விவர்த்தமாக தோன்றின சீவேஸ்வர சகத்து இல்லாது இருக்கவும் அதை சத்தியம் எனவும் நான் மனுடன், நான் இந்த சாதி, நான் இந்த ஆசிரமத்தை உடையவன், நான் உழவு யாகம் முதலானவற்றை செய்பவன், நான் அன்னம் முதலானவற்றை புசிப்பவன், நான் குடம் முதலானவற்றை அறிபவன் என இது முதல் வரும் சித்த விருத்திகளே விபரீதம்.

தாத்பர்யம்: ஆத்ம சிந்தனையை மறைப்பது அசம்பாவனை. தான் ஆத்மாவோ அனாத்மாவோ என மனம் கலங்குதல் சந்தேகம். தான் அனாத்மா பிரபஞ்சம் சத்தியம் என தோற்றுவது விபரீதம்.


2 comments:

Geetha Sambasivam said...

//நான் சீவன். பாவ புண்ணியங்கள் நிரம்பிய கர்மங்களை செய்து கொண்டே இருக்கோம். அதனால் அவற்றோட பலனை அனுபவிக்க திருப்பி திருப்பி பிறந்து உழல்கிறோம்.¨ ன்னு நினைக்கிறது. தான் பிரம்மத்தோட அம்சம்ன்னு நினைவே இல்லை//

இங்கே சொல்லி இருப்பது சரி. அறியாமையினாலே வரது.


//ஜகம் பொய், பிரம்மம் மட்டுமே சத்தியம்; நாம் அந்த பிரம்மம்¨ என்று திடமா நினைக்காமல் ¨ஜகம் உண்மை. நாம் திருப்பி திருப்பி பிறக்கிற ஜீவன்¨ ன்னு நம்புகிறது.//

இங்கே பிரம்மம்னு திடமா நினைக்கணும். அதுவும் சரி. ஆனால்



ஏன் பிரம்ம நிலையிலேந்து மீண்டு வருகிறாங்க?

//பூர்வ ஜன்ம வாசனை அப்படி பிடிச்சு இழுத்து வருது. இதே வாசனைகள்தான் நாம திடமா இருக்க தடையாவும் இருக்கும். வாசனைகள் கிளைத்து திருப்பி புலப்பட்டு நிலைக்காம இருக்க நாம் ஜாக்கிரதை படுத்தணும்.//

இங்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு. திருப்பித் திருப்பிப் பிறக்கிற ஜீவன் என்பது ?????? ம்ம்ம்ம்ம்ம்ம்??? புரியலையே? :(((((((

திவாண்ணா said...

//இங்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு. திருப்பித் திருப்பிப் பிறக்கிற ஜீவன் என்பது ?????? ம்ம்ம்ம்ம்ம்ம்??? புரியலையே? :(((((((//

ப்ரம்ம நிலைக்கு போயிட்டா அங்கே வேறு எதுவுமே இல்லை.
காலம் கூட இல்லை.
பிறப்புகள் இல்லை.

மண்ணால செய்த பிள்ளையார் பொம்மை உடைஞ்சு மண்ணாகி அப்புறம் முருகன் பொம்மையாகிற மாதிரிதான் இன்னொரு பிறப்பு.

ஜீவன் ஈசன் ன்னு நிக்கிறதெல்லாம் ப்ரம்ம நிலையோட ஒப்பிட்டா ஒரு கீழ் நிலைதான்.(நம் வாழ்கையிலே இதுக்கே நாம் இன்னும் சாக்ஷாத்காரத்துக்கு வரலை! அந்த தியரில மட்டுமே இருக்கோம்.)

ப்ரம்ம நிலையிலேந்து ஜீவன் ஈசன் நிலைக்கு வரது ஒரு வீழ்ச்சிதான்.