Pages

Thursday, April 30, 2009

வெறும் சாட்சியா....




நாம பல பேர் நடந்ததை நினைச்சுகிட்டே இருக்கோம் இல்லையா? அதனாலேயே துக்கம், கோபம் எல்லாமே வரும்! அட, அதான் நடந்து முடிந்த கதையாச்சே ன்னா யாரும் கேட்கிற மாதிரி இல்லே! சிலர் ஆமாம் சரிதான் ன்னு ஒத்துப்பாங்க. அப்புறம் திருப்பி அதே நினைவுகள் கோபதாபங்கள்...

இல்லை வரும் காலத்தைப்பத்தி கனவுகள், திட்டங்கள்... இப்படி செய்யணும், அப்படி செய்யணும், நான் இப்படி ஆவேன், அப்படி ஆவேன்... நினைத்த மாதிரி நடக்காட்டா கோப தாபங்கள்!

சீவன் முத்தர் இதுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். இப்படி நடந்ததேன்னு வருந்தவும் மாட்டார்; இப்படி நடக்கும்ன்னு குஷியாவும் இருக்கமாட்டார்! நிகழ்காலத்திலே இருப்பார். விதி வசத்தாலே கிடைச்சது எதுவோ அதை அனுபவிப்பார். அது நல்லதோ கெட்டதோ... சூடா கேசரி கிடைச்சாலும் சரிதான், சில்லுன்னு பழையது கிடைச்சாலும் சரிதான், ஒண்ணே போல இருக்கும் அவருக்கு!

நாம நல்ல வெயில்லே உஸ்உஸ்ன்னு "நாசமா போற வெயில்" ன்னு திட்டிக்கிட்டே தார்ரோட்டிலே போறோம். திடீர்ன்னு பாத்தா வெயில் சில்லுன்னு இருக்கு! இது என்ன அதிசயம்ன்னு இல்லே பாப்போம்! சீவன் முத்தர் இப்படி ஏதாவது நடந்தா அதை பாத்து எல்லாம் அசரமாட்டார்! இது ஏதோ வழக்கமா நடக்கற மாதிரி நடந்துப்பார்.

எதையும் இது நல்லதுன்னும் சொல்லமாட்டார். இது கெட்டதுன்னும் சொல்லமாட்டார்!
ஒத்தரை செத்து போயிடார்ன்னு சுடுகாட்டுக்கு எடுத்துப்போகும் போது திடுதிப்புன்னு செத்த பொணம் (அப்ப உயிருள்ள பொணம் உண்டா?!) எழுந்து உக்காந்தா நாம எவ்வளோ ஆச்சரியப்படுவோம்! சீவன் முத்தருக்கு அது ஒண்ணும் ஆச்சரியமாவே தோணாது!
ஒண்ணும் புரியலையே!
ஒண்ணுமில்லே, நமக்கு இதெல்லாம் நடக்க காரணம் மனசுதானே! அது அடங்கிப்போனா வேற எப்படி இருப்பாங்க!
நடக்கிற விஷயங்களுக்கு வெறும் சாட்சியா மட்டும் இருப்பாங்க.


98.
சென்றது கருதார்நாளைச் சேர்வதுநினையார் கண்முன்
நின்றதுபுசிப்பார் வெய்யி னிலவாய்விண் விழுதுவீழ்ந்து
பொன்றின சவம்வாழ்ந்தாலும் புதுமையா வொன்றும்பாரார்
நன்றுதீ தென்னார்சாட்சி நடுவான சீவன்முத்தர்.


சென்றது கருதார் (முன்பு நீங்கினதை நினைத்து வாடார்) நாளைச் சேர்வது நினையார் (நாளை வரக்கூடியதை நினைத்து மகிழ்ச்சி அடையார்). கண்முன் (நிகழ் காலத்தில்) நின்றது புசிப்பார் (விதி வசத்தால் கிடைத்ததை அனுபவிப்பர்) வெய்யில் நிலவாய் விண் விழுது வீழ்ந்து (வெப்பமான சூரிய கதிர்கள் சந்திரன் போல குளுமையாக ஆகாயத்திலிருந்து விழுதாக இறங்கினாலும்) பொன்றின (இறந்து போன) சவம் [உயிர் பெற்று] வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார். நன்று தீது என்னார் (ஒரு பொருளை நல்லது என்றும் ஒரு பொருளை தீயது என்றும் சொல்ல மாட்டார்) சாட்சி நடுவான (எல்லாவற்றையும் விலட்சணமாக இருந்து அறியும்) சீவன் முத்தர்.

தாத்பர்யம்: கோர மூட மனம் அடங்கி அநுபவமாக நிற்பதால் பிரமவித்து ஒன்றை கருதுவதும் வியப்புறுவதும் இல்லை.

7 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆஹா!
மனமிறந்த நிலையென்றும், மனமற்ற நிலையென்றும், மனம் புகை படிந்த அல்லது சாயம் ஏறிய கண்ணாடி மாதிரி அல்லாமல் போவதைப் பற்றிக் கொஞ்சம் புரிகிறார் போல இருக்கிறதே!

துளசி கோபால் said...

ஆசையாத்தான் இருக்கு இப்படி சீவன் முக்தர் ஆக.

அதுக்கெல்லாம் ஒரு அம்சம் வேணாமா?

இப்படி இருந்தாப் பைத்தியக்காரப் பட்டம்
வந்துரும், இந்தக் கலிகாலத்தில்.

Geetha Sambasivam said...

அப்பாடா! நல்லாவே புரிய ஆரம்பிச்சிருக்கு.

மெளலி (மதுரையம்பதி) said...

அந்த நாளும் வந்திடாதோன்னு பாடத்தான் தோன்றுகிறது.

திவாண்ணா said...

ஞான யோகம் எழுத ஆரம்பிச்சப்ப புரியறாப்போல எழுத முடியுமான்னு ஒரு சந்தேகத்தோடதான் ஆரம்பிச்சேன். கர்மாவோ பக்தியோ கொஞ்சம் அனுபவிச்சதுலேந்து எழுதினோம், கொஞ்சம் ஜஸ்டிபைட்; இது முக்காலே மூணுவீசம் தியரியாச்சே ந்னு தயக்கம்.
இப்ப சந்தோஷமா இருக்கு!

துளசி அக்கா, முக்காலே மூணு வீசம் ஜீவன்முக்தரை கண்டு பிடிக்கிறதே கஷ்டம். வெளியே காட்டிக்காம இருப்பாங்க. நேர்த்தியா பல விஷயங்களை செய்கிற ஆசாமியாதான் பார்ப்போம். உங்களுக்காக அடுத்து ஒரு கதை எழுதறேன்!
மௌலி, அந்த நாளும் ஒரு நாள் வரத்தான் வரும். இந்த ஜன்மாவிலேயோ வருகிற ஜன்மாக்களிலேயோ! அவளை நோக்கி கால் எடுத்து வெச்சாச்சே!

Kavinaya said...

அட, இது எனக்கே புரிஞ்சு போச்சே! :)

திவாண்ணா said...

@ கவிநயா
ஹிஹி! தாங்கீஸ்!