34.
ஆரூடர்களிலும் சிலர் சமாதி முதலியன செய்வதென்ன என வினா +அதற்கு உத்தரம்
உத்தம குருவே யாரூடமா யொருதொழி லற்றவருள்
சித்தமடங்கு தியானாதிகள்சிலர் செய்குவதென் னெனெறால்
இத்தலமருவும் பிராரத்தப் பிரிவெப்படி யப்படியே
முத்தரும்வெகு விதமாவ ரென்பதுமுன்னே சொன்னேனே
உத்தம குருவே, ஆரூடமாய் ஒரு தொழில் அற்றவர் உள் சித்தம் அடங்கும் தியானாதிகள் (தியானம் முதலியன) சிலர் செய்குவது என்ன என்று கேட்டால், இத்தல (இவ்வுலகில்) மருவும் (பற்றும்) பிராரத்தப் பிரிவு எப்படி அப்படியே. முத்தரும் வெகு விதமாவர் என்பது முன்னே சொன்னேனே.
[முந்தைய படலத்தில் ஜீவன் முத்தரும் பிராரப்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது]
ஞானிகளோட விவகாரங்கள் எல்லாமெ உலக உபகாரத்தை கருதிதானே தவிர அவற்றால அவனுக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. ஏன்னா அதெல்லாம் அவன் எந்த பலனை கருதியும் ஆசையோட செய்வதில்லை. அதனால அவனுக்கு துன்பமும் கிடையாது. இது எப்படிருக்குன்னா ஈஸ்வரன் சிருட்டிக்கிறான், காக்கிறான், சம்ஹாரமும் செய்யறான். இதனால அவனுக்கு பாபம் புண்ணியம் ஒண்ணும் இல்லையே! ஞானிக்கு உலக உபகாரமா யாரும் கேட்டா அவங்களுக்கு போதனை செய்யறதும்; அவனோட உடம்பு விழும் வரை உடம்பு காப்பாத்தப்படணும் என்கிறதால அதுக்கு ஆகாரம் போடறதும் மட்டுமே விவகாரம். இதுவும் அவன் சத்துவத்திலேயே நிக்கிறதால அவனுக்கு எந்த வேலையும் செய்கிற பாவமும் இல்லை; அதனால எந்த கர்மாவும் அவனுக்கு ஒட்டாது.
35.
வேறொரு பிரகாரம் த்ருஷ்டாந்தம் பூர்வகம் விடை
நல்லவனேகே ளுலகுபகாரம் ஞானிகள் விவகாரம்
அல்லதுவே றொருபெறுபேறும் மிலையதனாற்பிணியுமிலை
வல்லசிருட்டி முதற்பல தொழிலால் வரு புண்ணிய பாவம்
எல்லவருக்கு மநுக்கிரகஞ் செயு மீசனடைந்திலனே
நல்லவனே கேள். ஞானிகள் விவகாரம் உலகு உபகாரம் அல்லாது வேறொரு பெறு பேறும் இல்லை. அதனாற் பிணியும் இல்லை. வல்லசிருட்டி முதல் பல தொழிலால் வரு புண்ணிய பாவம், எல்லவருக்கும் (எல்லா உயிர்களுக்கும்) அநுக்கிரகம் செய்யும் ஈசன் அடைந்திலனே.
[ஈசனும் தொழில் செய்கிறான். ஆனால் அவனுக்கு புண்ணிய பாவங்கள் சேர்வதில்லை அல்லவா? ஞானி பிராரத்தம் தீரும் வரை உடல் இருப்பதால் அதன் போஷனை பொருட்டு உண்ணல் ஆகியன செய்வான். ஆனால் அவனது உள்பார்வையில் எந்த தொழில் செய்வதாயும் அவன் உணர்வதில்லை. அவன் மனம் சத்துவ குணத்தில் மட்டும் நிற்பதால் அவனுக்கு எந்த கர்மமும் உண்டாவதில்லை.]
அட ஞானி ஈஸ்வரனுக்கு சமம்ன்னா சொல்லறீங்க? அது எப்படி?
எப்படின்னா ரெண்டு பேருக்குமே நான், என்னுது ன்னு ஒண்ணுமேஇல்லை.
ஞானிதான் ஈசன், பல ஜீவர்கள், உலகம் எல்லாமே! அப்படித்தான் அவனோட பாவனை இருக்கும்!
36.
ஞானவான் ஈசனுக்கு எப்படி ஒப்பாவான்?
ஈசனுமா யருவாயுருவாகி யெழுந்தரு ளுங்குருவே
ஈசனுஞானியு மொப்பென்றீரே யெப்படியொப் பென்றால்
ஈசனுஞானியு மமதையகந்தை யிகந்ததினாலொப்பாம்
ஈசனுமாம் பலசீவருமா முலகெல்லா மிவனாமே
ஈசனுமாய் அருவாய் உருவாகி எழுந்தருளும் குருவே, ஈசனும் ஞானியும் ஒப்பென்றீரே, எப்படி ஒப்பு என்றால், ஈசனும் ஞானியும் மமதை (என்னுடையது என்ற எண்ணம்) அகந்தை (நான் என்ற எண்ணம்) இகழ்ந்ததினால் ஒப்பாம். ஈசனுமாம் பலசீவருமாம் உலகெல்லாம் இவனாமே. ("நான், என்" போனதால் ஈசன், உலகு, பல சீவர்கள் எல்லாவற்றையும் தான் என்றே உணர்கிறான்)
ம்ம்ம்ம்ம்.. அப்படின்னா இவர் முக்தி அடைஞ்சா மத்த எல்லாருமே முக்தி அடையணுமே! அப்படி நடக்கிறதில்லையே!
(அட அதானே!)