Pages

Sunday, June 21, 2009

மாகர்த்தன், மாபோகி, மாதியாகி




24.
மா கர்த்தன் இலக்கணம்:
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்குங் காந்தச் சிலைமலைமுன் னிரும்புகள்சேட் டிக்குமாபோல்
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்கு மென்முன் சடமான வுலகெல்லாஞ் சேட்டை செய்யும்
மெய்கலந்த விந்திரிய விகாரரூப விவகார விருத்திக்கும் விருத்திதானா
மெய்கலந்த சமாதிக்குஞ் சாட்சியேநான் வெயில் போலென் றுறைத்தவனே விபுமாகர்த்தன்.

செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் காந்தச் சிலை(கல்) மலை முன் இரும்புகள் சேட்டிக்குமா (நகருதல்) போல், செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் என் முன் சடமான உலகெல்லாம் சேட்டை செய்யும் (தானே இயங்கும்). மெய் கலந்த இந்திரிய விகார ரூப விவகார விருத்திக்கும், விருத்தி தானாம். (சத்துவ விருத்திக்கும்) மெய்கலந்த (லயமான) சமாதிக்கும் சாட்சியே நான். வெயில் போல் (சூரியன் உலக விவகாரத்துக்கும் விவகாரம் இன்மைக்கும் சாட்சியாய் உள்ளது போல) என்றுறைத்தவனே விபுமாகர்த்தன்.

அமேரிக்காவிலே ஒரு இடம். அங்க குறிப்பிட்ட இடத்தில பூமியோட ஈர்ப்பு வித்தியாசமா இருக்கும். பக்கத்து பக்கத்துல நிக்கிறவங்க சாய்ஞ்சுகிட்டு இருக்கிறதா தெரியும். அந்த இடத்து காந்த தன்மை அப்படி. அது முனைஞ்சு மக்களை சாய்கணும்னா சாய்குது? அது பாட்டுக்கு அது இருக்கு. பக்கத்துல போற மத்தவங்கதான் பாதிக்கப்படறாங்க.
இப்படி காந்த மலை தான் தானா இருக்க மத்த இரும்பு பொருள் எல்லாம் தானா ஈர்க்கப்பட்டு நகருகிறா மாதிரி; சீவன் முக்தன் தான் செயலில்லாம செய்விக்கையும் இல்லாம இருக்க உலக விவகாரங்கள் பாட்டுக்கு தானா நடக்குது.

சூரியன் பாட்டுக்கு குஷியா கிழக்கே உதிக்கிறார். இந்த கோடையில எல்லாரும் திட்டி தீர்க்க காய்ஞ்சுட்டு நிதானமா அஸ்தமிக்கிறார். யாரையும் வருத்தனும்னு அவர் நினைக்கிறதில்லை. காலையில அவரை பாக்கிற தாமரை சந்தோஷமா மலருது. மத்த செடிகளில இருக்கிற பூக்களும் மலருது. ஆனா தரையில கிடக்கிற பூ வாடிப்போகுது. புல்லு மேல இருந்த பனி காணாமப்போகுது. ஈரம் காயுது. தண்ணி ஆவியா போகுது. சூரியனை பொருத்த வரை இப்படி நடந்தா என்ன? நடக்காட்டா என்ன? எப்படி இருந்தாலும் அதனால அவருக்கு தாக்கம் ஒண்ணுமில்லை. தன் சந்நிதான விசேஷத்தால உலகத்தில இருக்கிற பொருட்கள் நாநா விகாரங்களை அடைஞ்சாலும் தான் தாக்கமில்லாம சூரியன் சாட்சி மாத்திரமாய் இருக்கிறாப்போல; தேக சம்பந்தமான இந்திரிய விஷயங்களோ, மனசு சம்பந்தமான விஷயங்களோ, இல்லை பிரம்ம சமாதியோ எல்லாத்துக்கும் சாட்சியா மட்டும் இருக்கிறதாக திட அநுபவத்தில இருக்கிறவன் மாகர்த்தன் ஆவான்.

காட்டில தீ பிடிச்சுக்குது. அது என்ன இது புளிய மரம், இது சந்தன மரம், இது எட்டி மரம், இது காஞ்ச மரம், இது பச்சை மரம் ன்னு பாக்கிறதா? எல்லாத்தையும்தான் எரிக்குது. அத போல சாப்பிடுற பொருள்ல இது சுத்தம், இது அசுத்தம், இது குற்றம் உள்ளது, இது குற்றம் இல்லாதது, இது காரம், இது சுவையானது ன்னு பிரிச்சு பாக்காம பொறுமையோட கிடைச்சதை சாப்பிடுகிறவன் மாபோகி.

சின்னது, பெரிசு, தன்னோடது, மத்தவங்களுது ன்னு வித்தியாசம் பார்க்காம நல்லது, கெட்டது எது வந்தாலும் எதிலும் தாக்கமில்லாம இருக்கிறவனே மாதியாகி.

இப்படி மாகர்த்தன் மாபோகி மாதியாகியா இருக்கிறவரே மோக்ஷத்தை உடையவர் ஆவார்.

25.
மாபோகி மாத்தியாகி இலக்கணம்:
அறுசுவையின் குணங்குற்ற மசுத்தங்சுத்த மபத்தியம் பத்தியமென வூணாய்ந்திடாமல்
பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போற் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும்
சிறிதுபெரிது கடனதந்நி யங்கணன்மை தீமைகள் சேரினும்படிகச் செயல்போற்சித்தம்
வெறிதிருக்கு மவனேமாத்தி யாகியாவான் விரதமிம்மூன் றுடையவரே வீடுளோரே.

அறுசுவையின் குணம் குற்றம் அசுத்தம் சுத்தம் அபத்தியம் பத்தியம் என ஊண் ஆய்ந்திடாமல் பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போல் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும். சிறிது பெரிதுகள், தனது அந்நியங்கள், நன்மை தீமைகள் சேரினும் ஸ்படிகச் செயல் போல் சித்தம் வெறித்திருக்கும் (பற்று அற்று இருக்கும்) அவனே மாத்தியாகி ஆவான். விரதம் இம்மூன்று உடையவரே வீடுளோரே.

No comments: