Pages

Friday, June 5, 2009

சாத்திர அபிமானம்மூணாவது சாத்திர அபிமானம். அதாவது எல்லாரைவிட நமக்கு அதிகமா தெரியணும். நம்மை விட அதிகமா தெரிசஞ்ச ஆசாமி இருக்கவே கூடாதுன்னு ஒரு விசித்திர எண்ணம். "இதை தெரியுமா? அதை தெரியுமா? சொல்லுங்க பாப்போம்!” ன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. மத்தவங்க எதை சொன்னாலும் "அப்படியா? என்ன ஆதாரம்?"ன்னு கேட்டு மட்டம் தட்டப் பாப்பாங்க.

ஒரு வித்வான் இருந்தார். அவருக்கு எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ஆசை. சங்கரர் எழுதின பிரம்ம சூத்திரத்தை ஆராய்ஞ்சார், ஆராய்ஞ்சார், அப்படி ஆரய்ஞ்சார். ஆராய்ஞ்சு உரை எழுதினார். மனவி வீட்டு காரியத்தை எல்லாம் கவனிக்க இவர் பாட்டுக்கு படிச்சுகிட்டே இருப்பார். காலை முதல் இரவு நெடுநேரம் வரை படிப்புதான். நிறைய எழுதினார். ஊர் ஜனங்களும் இப்படி பெரிய வித்வான் நாம் ஊரிலே இருக்கறது பெருமைன்னு தேவையான உதவி எல்லாம் செய்தாங்க. அதனால சாப்பாட்டுக்கு கவலை இல்லாம படிச்சுகிட்டே, எழுதிகிட்டே இருந்தார்.
ஒரு நாள் ஒரு வழியா நூலை எழுதி முடிக்கும் சமயம் இருட்டிவிட்டது. விளக்கு வரக்காணோம். என்னடான்னு தலை நிமிர்ந்து பார்த்தார். ஒரு முதிர்ந்த பெண்மணி மெதுவா கஷ்டப்பட்டுகிட்டு ஒரு விளக்கை எடுத்து வந்தாங்க. "யாருமா நீ?” ன்னு கேட்டார். அவங்க சிரிச்சுகிட்டே "அப்பாடா இப்பவாவது என்னை யாருன்னு கேக்க தோணித்தே! நான்தான் உங்க மனைவி!” ன்னாங்க.

இவர் திகைச்சு போயிட்டார்! அவ்வளோ வயசாயிடுத்தா! இவ்வளோ நாளா உன்னை கவனிக்காம விட்டுட்டேனேன்னு வருத்தப்பட்டார். அதனால, அப்பதான் தான் எழுதி முடிச்ச நூலுக்கு அவங்க பேரையே வெச்சார். பாமதி. ஸ்ரீ சங்கரர் எழுதிய பிரம்ம சூத்திரத்துக்கு உரைநூல். வித்வான் பேர் கூட பிரபலம் இல்லாம போயிடுத்து. அவர் பேரு வாசஸ்பதி மிஸ்ரர் என்கிறாங்க. மிஸ்ரர் குடும்ப பேரு. வாசஸ்பதி டைட்டில். அவர் பேர் என்ன? தெரியாது! (வாசஸ்பதி என்பதே அவர் பேரா இருக்கலாம் என்கிறார் என் பையர்!) பாமதி இன்னும் பேசப்படுது.

பரத்வாஜர் பத்தி காடகத்திலே ஒரு கதை வருது.

எல்லா வித்தைகளையும் கத்துக்கப்பாத்தார். கத்துக்கொண்டேஏஏஏ... போனார். வாழ்நாள் முடியப்போகிறதுன்னு தெரிஞ்சது. "அடடா, இன்னும் படிக்க நினைச்சது பாக்கி இருக்கே!". இந்திரனை நோக்கி தபஸ் பண்ணார். இந்திரன் வந்து என்ன வேணும்ன்னு கேட்டான். இன்னொரு ஆயுசு கொடுன்னு கேட்டார். சரின்னு அவனும் கொடுத்துட்டு போயிட்டான். மேலே படிச்சு படிச்சு அந்த ஆயுசும் முடிகிற நேரம் திருப்பி தபஸ் செஞ்சு இரண்டாம் முறை ஆயுசை நீட்டிக்கொண்டார். அதுவும் போறலை. மூணாம் முறை தபஸ் செஞ்சப்பா இந்திரன் பாத்தான். "எதுக்கு இப்படி ஆயுசை நீட்டிக்கொண்டே போகிறாய்? என்ன பிரயோசனம்?" ன்னு கேட்டான்.

பரத்வாஜர் எனக்கு எல்லா விதைகளையும் கரைச்சு குடிச்சு முடிக்கணுமேன்னார்.
இந்திரன் சிரிச்சுண்டே எதிரே இருந்த ஒரு பெரிய மலையை காட்டினான். "இதப்பாத்தியா எவ்வளவு பெரிய மலை? இது போல மனுஷனுக்கு கிடைக்கக்கூடிய சாத்திரங்கள். இதப்பாத்தியா ஒரு கைபிடி அளவு மண். இதான் நீ மூணு ஆயுசுலே கத்துகிட்டது. இதுக்கெல்லாம் முடிவே கிடையாது. "
"எந்த வித்தையை கத்து கொண்டால் எல்லாம் கற்றுக்கொண்டதாகுமோ அந்த பிரம்ம விதையை கத்துக்கப்பாரு" ன்னான்.

பரத்வாஜரும் அதை புரிஞ்சு கொண்டு வேதாந்த மார்கத்திலே மனசை செலுத்தி பெரிய ரிஷி ஆனார்.

இப்படி கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு ன்னு புரிஞ்சுகொண்டு எதை தெரிஞ்சு கொண்டா நம்ம ஆன்ம சாதனைக்கு பயனா இருக்குமோ அதை மட்டுமே ஆழ்ந்து படிச்சு தெரிஞ்சுகொண்டு உள் வாங்கிக்க பாக்கணும். படிச்சதை அனுபவத்துக்கு கொண்டு வரப்பாக்கணும். இதுவே ஒரு ஞான அப்பியாசி செய்ய வேண்டியது.

மனசோட சத்துவ குணம்தான் உத்தம குணம். ரஜோ குணம் மத்திமம். தமஸ் கீழானது. அந்தக்கரணம்ன்னு சொல்கிறதின் 5 பாகங்களிலே (நினைவிருக்கா?) உள்ளமே சத்துவம். மனம், புத்தி, சித்தம் ரஜஸ். அகங்காரம் தமஸ். இந்த சத்துவமான உள்ளம் மனசோட அருவ பாகம். மற்றது உருவ பாகம். பின்னாலே வரும்.

16.
மனத்தின் முக்குணமும் அவற்றின் காரியமும்.

கருதுமனோ குணமூன்றா மூன்றிலொன்று கதித்தெழுந்தான் மற்றிரண்டுங் கரந்து நிற்கும்.
தருமமிகுஞ் சத்துவமே லானபோது சன்மார்க மான தெய்வ சம்பத்துண்டாம்.
மருவுரசோ குணமாகி லுலகதேக வாதனையாஞ் சாத்திரவா தனையுமாகும்
அருமகனே தமோகுணமே லானபோதி லசுரசம்பத்துண்டாகு மறிந்துகொள்ளே

கருதும் மனோ (மனத்தின்) குணம் மூன்றாம் மூன்றில் ஒன்று கதித்தெழுந்தால் (ஓங்கி எழுந்தால்) மற்றிரண்டும் கரந்து (அடங்கி) நிற்கும். தரும மிகும் (நிஷ்காம்ய புண்ய குணம் அதிகரித்ததால்) சத்துவம் மேலானபோது சன் (நல்ல) மார்கமான தெய்வ சம்பத்துண்டாம். மருவும் ரசோ குணமாகில் (காம்ய புண்ணியத்தால் ரஜஸ குணம் அதிகரித்தால்) உலக, தேக, சாத்திர வாதனையும் (வாசனை) உண்டாகும். அரு மகனே [பாவ கர்மத்தால்] தமோ குணம் மேலான போதில் அசுர சம்பத்துண்டாகும் அறிந்து கொள்ளே.

நமக்கு ரொம்பவே ஆறுதல் தர விஷயம் நம் மனசோட இயற்கையான குணம் சத்துவம் என்கிறதுதான்.
ரஜஸும் தமஸூம் கூட வந்து சேர்ந்தது. இயற்கையானதே எப்பவும் நீடிக்கும். இடையிலே வந்ததை நீக்கினால் நீங்கும். சத்வ குணத்தயே மேலோங்கி இருக்கும்படி எப்பவும் பிடிச்சுகிட்டு இருந்தா ரஜோ தமோ குணங்கள் நசியும். உள்ளம் ஆகாய தத்துவம். அதுதானே சத்துவ பாகம்னு பாத்தோம்? சத்துவத்திலேயே மனசு நிலையா இருந்தா ஆகாயம் போல நிர்மலமா போகும். சலனமில்லாம அதி சூக்கும நிலைக்கு போயிடும். அதே போல சலனம் இல்லாத அதி சூக்குமமான பிரம்மத்தோட ஒன்றி போகும்.


Post a Comment