Pages

Monday, June 15, 2009

PG


இந்த பதிவு முழுக்க கொஞ்சம் அட்வான்ஸ்ட் விஷயம்தான். தமிழ்லே படிச்சு மகிழறவங்களுக்கு. புரியாட்டாலும் ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஏற்கெனெவே சொன்னதுதான் இப்பவும் சில நூல்களிலேந்து மேற்கோள் காட்டப்படுது.
---------------------------
இப்படி எல்லாம் சொன்னதுல ஒண்ணு புரிஞ்சு இருக்கும்.எந்த உள்ளம் சலனமில்லாம (மனசோட குணம்) களங்கம் இல்லாம இருக்கோ அதுவே ஆன்மா, பேரறிவு என்கிறது. இந்த ஆன்மாவுக்கும் பிரமத்துக்கு ஒரே லட்சணம்தான். அதனால இரண்டும் கலந்து ஒண்ணாகும். ஆன்மா பரமான்மா நடுவில பேதம் சொல்கிறவன் ரௌரவம் என்கிற நரகத்தை அடைவான் ன்னு சொல்லி இருக்கு. இந்த இரண்டு நடுவிலே கட ஆகாசம், மஹா ஆகாசம் போல அளவிலேதான் வித்தியாசம். சொரூபத்திலே இல்லை.

சாந்தமே தற்சாட்சி யே பிரமம்......
போந்த பிரமமே பூரணமா-மாய்ந்துணர்ந்த
சுத்தபரி பூரணமே தோன்றாச் சுவானுபவஞ்
சித்தநிலை தானே சிவம் (சொரூப சாரம்)

கடமடமா முபாதிகளை நேதி செய்யிற்
கடவானும் மடவானு மொன்றே போல
மடமைமுத லுபாதிகளை நேதி செய்யின்
மாசற்ற வான்மாவும் பரமு மொன்றே
யிடமருவும் வேதாந்த விசாரத்தாலே
யிருமைதரு முபாதியெலா நேதி பண்ணித்
தடமருவு மான்மபர வைக்கி யத்தைத்
தடையறவே முமூட்சுவெலா முணர வேண்டும்
(ஈஸ்வர கீதை)
[நேதி செய்யின்= இல்லை என ஆக்குதல்]

தற்போதம் (தான் என்ற எண்ணம்=அகங்காரம்) இழந்து ஆன்மா பரமான்மாவோட ஐக்கியமாகும். இது ஆன்மா வேறேயா இருந்து பரமான்மாவை எதிரே பாத்து "அட! நீயும் நானும் ஒண்ணு"ன்னு கலக்கிறதில்லை. தான் யார் என்கிறதை உண்மையா அறிஞ்ச அளவிலே ஐக்கியம் ஆகிடும். எப்போ தான் ன்னு ஒரு எண்ணம் இருக்கோ அப்ப அது உண்மையான நிலையில்லை.

போதம் பதைப்பறவே பூரணமாம் பூரணமும்
போதம் பதைத்தளவே பொய்யாகு-மீது
விழித்திமைப்பர் நின்றால் வெளியசைந்தாற் காற்றாம்
பழக்கமதைச் சாட்சியைப்போற் பார்
(ஒழிவில் ஒடுக்கம்)

அகண்டாகார சொரூபத்தில் தன்னை இழத்தலே நிலையானது ஆகும். சிவம் ஆன்மாவை விழுங்கித்தான் தானாக பிரகாசிக்கும் என்று சொல்வாங்க. இதனால சிவனுக்கு உயிருண்னி ன்னு கூட ஒரு பேர் வெச்சு இருக்காங்க.

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே. 28- கந்தர் அனுபூதி

அல்லையுண்ட பகல் போல வவித்தை யெல்லா
மடையவுண்டு தடையறவுன் னறிவைத்தானே
வெல்லவுண்டிங் குன்னையுந் தானாகக் கொண்டு
வேதகமாய்ப் பேசாமை விளங்குந்தானே ..
(அல்லையுண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு, தடையற உன் அறிவைத் தானே வெல்ல உண்டு, இங்கு உன்னையும் தானாகக் கொண்டு வேதகமாய்ப் பேசாமை விளக்கும் தானே. 21.)

ஓராமலேயொருகா லுன்னாம லுள்ளொளியைப்
பாரம லுள்ளபடி பார்த்திருந்தால் -வாராதோ
பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்தவெள்ளந்
தத்திக் கரைபுரண்டு தான்
(ஓராமலே ஒரு கால் உன்னாமல் உள்ளொளியைப் பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால்-வாராதோ பத்துத் திசையும் பரந்தெழுந்து ஆனந்த வெள்ளம் தத்திக் கரை புரண்டு தான். 58.)
- தாயுமானவர்

ஐக்கிய நிலையில் தான் அதுவாதல் தவிர முன்னிலையில் ஒன்றுமில்லை. அதனால எதிரிட்டு அறிவதற்கு ஒண்ணுமே இல்லை. தான் அங்கே இல்லை. அதனால அது இதுன்னு சொல்ல ஹேது ஒண்ணுமே இல்லை.

ஊமைகண்ட சொப்பனம்போன் றுள்ளே யறிவதன்றி
நாமிதெனச் சொற்றிடவு நண்ணுமோ-தாமதம்போ
லாங்கதுவாய்ப் போவதலா லன்றிதா மென்றுரைக்க
வீங்கொருவ ருண்டோ விசை.
(ஊமை கண்ட சொப்பனம் போன்று உள்ளே அறிவதன்றி, நாம் இது எனச் சொற்றிடவும் நண்ணுமோ? தாமதம் போல் ஆங்கு அதுவாய்ப் போவதலால் அன்றி தாம் என்றுரைக்க ஈங்கு ஒருவர் உண்டோ இசை.)

ஒன்றென் றிரண்டென்று மொன்றிரண்டே யாமென்று
மென்றோ நீ முத்திதனி லேய்ந்திடுவா - யொன்றென்று
சொல்லு மறிவைத் துரியாதீ தம்விழுங்கிற்
சொல்லுமவ னெங்குற்றான் சொல்.
(ஒன்று என்று இரண்டென்றும் ஒன்று இரண்டேயாம் என்றும் என்றோ நீ முத்திதனில் ஏய்ந்திடுவாய். ஒன்றென்று சொல்லும் அறிவைத் துரியாதீதம் விழுங்கில் சொல்லும் அவன் எங்குற்றான் சொல்.)
-வள்ளலார்.- சிவஞான பிரகாச வெண்பா

ஞான நிலையிலே மனச் சலனமில்லை. பிரபஞ்சம் கனவு போன்ற அனுபவமாக தோன்றும். அதற்கு சந்தேகம் இல்லை என்கிறாங்க.

இப்படியா சொல்லுகிற விஷயங்களாலே என்ன புரியுதுன்னா சீவன் முக்தி என்கிறது மனம் இறந்த நிலை.
இதனால சீடனுக்கு ஒரு சந்தேகம் வருது.....


Post a Comment