வெண்கலத்தில பல பொருட்கள் செய்கிறாங்க. நல்லா வெண்கலத்தை காய்ச்சி உருக்குவாங்க. அப்புறம் பல விதமான அச்சுக்கள் இருக்கும். ஆனை அச்சு, விளக்கு அச்சு, சாமி அச்சுன்னு பலது. எந்த அச்சில வெண்கலத்தை ஊத்தறாங்களோ அதை பொருத்து அது மாதிரியா பொருள் கிடைக்கும். வெண்கலம் ஒரே பொருளா இருந்தாலும் அது பல விதமாகிறது அச்சை பொருத்தது.
அதை போல சத்து பிரதிபலிச்ச மனசு (சரியா சொல்லப்போனா ஆபாச சகித அந்தக்கரண விருத்தி. ஹிஹிஹிஹி எனக்கு தாங்க்ஸ் எல்லாம் வேணாங்க) வெளிப்படுகிற போது உலக விஷயங்களில் இருக்கிற மறைப்பை -அதாங்க ஆவரணம்- பாதிக்கிறது. இந்த மறைப்பு தமஸ் ன்னு நினைவிருக்கு இல்லையா? சஞ்சரிக்கிற மனசு ரஜஸ். சத்துவமான ஆபாசன் உலக விஷயங்களை அது கடம் இது படம்ன்னு வெளிச்சம் போட்டு விளங்க வைக்கிறது.
இதிலே ஒரு விஷயத்தை அறிய விஸ்தாரமாகி வளருகிறது மனசு. அதான் மனோ விருத்தி. இதுக்கு அந்த பலத்தை தருகிறது சித் ஆபாசம்.
ஒரு அறையிலே ஒரு பொருளை தேடறோம். இருட்டா இருக்கேன்னு ஒரு விளக்கை வெச்சுகிட்டு தேடறோம். ஆனா விளக்கை தேட வேற விளக்கு தேவையில்லையே. சூரியனை பாக்க விளக்கு வேணாமே! அது அதோட வெளிச்சத்தாலேயே காணப்படும்.
இதைப்போல உலக பொருட்களை பாக்க மனசு அங்கே போகணும். பார்க்க சித் உடைய பலமும் வேணும். ஆனா சித்தையே பாக்கணும் ன்னா மனசு அங்கே போனால் போதும். சிதாபாச பலம் வேணாம்.
அதனால மனசுக்கு ரெண்டு பாகம். விருத்தி என்கிற பாகம். பலம் என்கிற பாகம். சித்தை பாக்க பலம் வேணாம், மன விருத்தி போதும் ன்னு பாத்தோம் இல்லையா? சித்தாவது எது? பிரம்மம்தான்.
ஆக பிரம்மம் மனசோட விருத்திக்கு எட்டும். பலம் என்கிற பாகத்துக்கு இல்லை.
இப்படித்தான் பிரம்மம் மனசுக்கு எட்டவும் எட்டும். எட்டாமலும் இருக்கும்.
12
ஞேய உற்பத்தியும் ஒரு விஷயத்தை விளங்க வைக்க இரண்டு ஏதுக்கு எனில்
உருக்கிய தராநீர் நாநா வுருவங்க ளானாற் போல
விருத்திகள் கடப டாதி விடயமாய்ப் பரிண மிக்கும்
அருப்பல விடய மெல்லா மாபாசன் றோற்று விக்கும்
இருட்டினில் விளக்குங் கண்ணு மில்லாமற் பொருள் காணாதே
உருக்கிய தராநீர் (அச்சில் விட்ட உடன்) நாநா உருவங்கள் ஆனாற் போல, விருத்திகள் (மன சங்கல்பங்கள்) கட (குடம்) பட ஆதி (முதலான) விடயமாய் [அதாவது உலகாக] பரிணமிக்கும். அருப்பல (அருவமான) விடயம் எல்லாம் ஆபாசன் தோற்றுவிக்கும். இருட்டினில் விளக்கும் கண்ணும் இல்லாமல் பொருள் காணாதே. (காண இயலாது).
(அது போல ஆவரணத்தை போக்க விருத்தியும் ஸ்புரண ரூப பிரயோசன நிமித்தம் சிதாபாசன் என்ற ஆத்ம சாயையும் இல்லாது ஆத்மாவல்லா பொருட்கள் பிரகாசியா) மனோ விருத்தியே ஞேயம் (அறியப்பட்டது) ஆகும், அதை சிதாபாசன் விருத்தியுடன் கூடி விளக்கி வைக்கும்.
13. பகிர்முக அந்தர் முக ஞானத்தால் அறிவது இவை:
எரிகிற விளக்காற் கண்ணா லிருட்பொருள் காணல் வேண்டும்
தெரிகிற பரிதி காணச் சென்றிடில் கண்ணே போதும்
விரிகின்ற சகத்தைக் காண விருத்தியும் பலமும் வேண்டும்
புரிகின்ற விருத்தி யொன்றே போதுமெய்ப் பொருள்காண்போர்க்கே
எரிகிற விளக்கால் கண்ணால் இருட்(டில் உள்ள) பொருள் காணல் வேண்டும். தெரிகிற பரிதி (சூரியனை) காணச் சென்றிடில் கண்ணே போதும். (பலவிதமாக) விரிகின்ற சகத்தைக் காண விருத்தியும் (விருத்தி ஞானமும்) பலமும் (சிதாபாச ஆத்ம நிழல்) வேண்டும். புரிகின்ற (விசார ரூபமான) விருத்தி யொன்றே போதும் மெய்ப் பொருள் (ஆத்மாவை) காண்போர்க்கே
சடமான ஜகத்தை காண மனமும் சீவனும் வேண்டும். சித்து ரூபமான ஆத்மாவை அறிய சத்துவ விருத்தி மட்டுமே வேண்டும்.
14.
மனத்தின் உருவம் கூறி பிரமம் மனத்துக்கு புலப்படும் புலப்படாது எனல்:
விருத்தியும் பலமும் கூடும் விகாரமே மனமென் பார்கள்
கருத்தெழு விருத்திவேண்டுங் கணக்கினான் மனத்திற்கெட்டும்
வருத்தியபலமாமிந்த மனத்திற்கெட்டாது கண்டாய்
அருத்தமிப்படியென்றைய மகன்றுநீ தெளிந்திடாயே
விருத்தியும் பலமும் (சிதாபாசன் என்ற ஆத்ம நிழல்) கூடும் விகாரமே (பரிணாமமே) மனம் என்பார்கள். கருத்தெழு விருத்திவேண்டும் (என்ற) கணக்கினால் (அந்தக் கரணத்தில் எழும் சுத்த சத்துவ விருத்தி வேண்டும் என்பதால்) [பிரமம்] மனத்திற்கெட்டும். வருத்திய (துன்பம் தரும்) பலமாம் (சிதாபாசனுடன் கூடிய) இந்த மனத்திற்கு [பிரமம்] எட்டாது கண்டாய். [ஸ்ருதி வாக்கியத்துக்கு] அருத்தம் (பொருள்) இப்படியென்று ஐயம் அகன்று நீ தெளிந்திடாயே.
No comments:
Post a Comment