மனசு இல்லாம போகிறது என்கிறது ரெண்டு விதம் அப்பா. ஒண்ணு மனசோட சாதாரண இயல்பு -சொரூபம்- கெட்டு போகிறது. சீவன் முக்தருக்கு இப்படி கெட்டு போகும். இததான் சொரூப நாசம் என்பாங்க. மத்தது மனசு மொத்தமா காணாம செத்துப்போகிறது. அது அரூப நாசம். விதேக முக்தருக்கு (உடல் இறந்து போன முக்தருக்கு) இப்படி இருக்கும்.
20.
மனோ நாசம் இருவிதம் என பதில்
மனநாசஞ் சொரூபமென்று மரூபமென்றும் வகுத்துரைப்பா ரிருவகையா வருமிவற்றில்
வினவாத சீவன்முத்த ரிடத்திலொன்றும் விதேக முத்த ரிடத்திலொன்று மேவுங்கண்டாய்
தனதான சத்துவமாய் மனஞ்சே டித்துத் தமசுரசசு கணசித்தல் சொரூப நாசம்
அனகாசத் துவந்தானு மிலிங்க தேக மடங்கும்போ தடங்குதலே யரூப நாசம்.
மனநாசஞ் சொரூபமென்றும் அரூபம் என்றும் வகுத்துரைப்பார். இரு வகையாய் வருமிவற்றில் வினவாத (கற்க வேண்டியது இல்லாத) சீவன் முத்தர் இடத்தில் ஒன்றும், விதேக (தேகம் இல்லா அரூப) முத்தர் இடத்தில் ஒன்றும் மேவும் (பொருந்தி இருக்கும்) கண்டாய். தனதான (தன் சுபாவமான) சத்துவமாய் மனம் சேடித்து (மிஞ்சி) தமசு ரசசுகள் நசித்தல் சொரூப நாசம். அனகா (குற்றமில்லா) சத்துவம் தானும் இலிங்க (சூக்ஷ்ம) தேகம் அடங்கும் போது அடங்குதலே அரூப நாசம்.
ராஜசமும் தமஸும் போயாச்சுன்னா மனம் தன் இயல்பான சத்துவத்தில இருக்கும். அந்த வகையை சாதாரணமான மனசா சொல்ல முடியாது. அப்படி இருக்கிறவர் நிகழ்காலத்திலேயே எப்பவும் இருப்பார். கிடைச்சதை சாப்பிடுவார். இன்னைக்கு வடை பாயசத்தோட சாப்பாடா ரைட். அடுத்த நாள் வெறும் மோர் சோறுதானா அதுவும் ரைட். நேத்திக்கு பாயசம் கிடைச்சப்ப மகிழ்ச்சியும் இல்லை. இன்னைக்கு கிடைச்ச மோர் சோறு பத்தி வருத்தமும் இல்லை. நான் செய்கிறேன் என்கிற நினைப்பு இல்லை எப்பவுமே இல்லை என்கிறதால இவர் செய்கிற கர்மா எதுவும் இவரை ஒட்டாது. இறைவனோட ஏஜன்ட் மாதிரி தூண்டப்பட்டதை செய்து கர்மாவை தீத்துப்பார்.
இப்படியாக இவர் கர்மவினையை அனுபவிச்சு தீர்க்கவும் தீர்ப்பார் அதே சமயம் முக்தராகவும் இருப்பார்.
--
போன பதிவிலே உமேஷ் எழுப்பிய கேள்விக்கு இங்கே விடை இருக்கு.
ராஜசமும் தாமசமும் போய்விட்ட மனசு வேற மாதிரி ஆயிடுது. துன்பத்துக்கு வருந்தறது ராஜஸ விஷயம். என்ன நடந்தாலும் சாந்தமா எடுத்து கொள்கிறது சீவன் முக்தனுக்கு எஞ்சி இருக்கிற மனசின் சத்வ விஷயம்.
21.
உருவமின்றி அருவமாய் உணர்வுருவமான மனத்தினால் சீவன் முத்தி சுகமும் பிராரத்த போகமும் அனுபவிக்கலாம்.
சுத்தமாஞ் சத்துவமே யுண்மையாகுந் துகளிருள்போ னான்மனமென்சொல்லும் போம்போம்
வர்த்தமா னத்தில்வந்த வுணவை யுண்பார் வருவதும்போ வதுநினைந்து மகிழார்வாடார்
கர்த்தரா மகந்தையைவிட் டகர்த்தராகிக் கரணவிருத் திகளவத்தை காண்பாராகி
முத்தரா யிருக்கலுமாம் புசிப்புங்கூடு முட்டிலையென் றறிந்துசங்கை மோசிப்பாயே
சுத்தமாஞ் சத்துவமே உண்மையாகும் (மனதின் உண்மை சொரூபமாகும்) துகள் (ராஜஸம்) இருள் (தாமசம்) [ஒழிந்து] போனால் மனம் என் சொல்லும் (விவகாரமும்) போம்போம். (இறந்துவிடும்). வர்த்தமானத்தில் (நிகழ்காலத்தில்) வந்த உணவை உண்பார்; வருவதும் (எதிர்காலம்) போவதும் (இறந்தகாலம்) நினைந்து மகிழார் வாடார். கர்த்தராம் (இதை செய்பவன் நான் என்னும்) அகந்தையை விட்டு அகர்த்தராகிக் கரண விருத்திகள் அவத்தை காண்பாராகி, முத்தராய் இருக்கலுமாம் புசிப்பும் கூடும் (பிராரர்த்த போகம் புசித்தலும் ஆகும்) முட்டிலை (தடை இல்லை) என்றறிந்து சங்கை (சந்தேகம்) மோசிப்பாயே (நீக்குவாயே).
4 comments:
ஸ்வரூப நாசம், அரூப நாசம்
விளக்கம் நன்கு புரியும்படி உள்ளது.
தேவ்
நன்றி தேவ்!
ஒரு ஜீவந்முக்தருக்கு ஸ்தூல தேஹம் தவிர, லிங்க தேஹம், காரண சரீரம் இரண்டுமே அழிந்து
விடுகின்றன என்று பொருள் கொள்ள வேண்டுமா ?
மனம் மாய்ந்து விடுகிறது என்றால் அதை ஒட்டிய அனத்துமே இல்லை என்றாக வேண்டும் அல்லவா?
தேவ்
நல்ல கேள்வி தேவ் சார்!
சொரூப நாசத்திலே கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கும்.
அரூப நாசம் ஆயாச்சுன்னா எல்லாம் போயிடும்.
இது பத்தி ஒரு பதிவு போட நினைக்கிறேன்.
Post a Comment