Pages

Thursday, June 25, 2009

ஞானியும் பூர்வ வாசனையால்......



"சரி ஐயா. இன்னொரு சந்தேகம். தத்துவ ஞானிகூட மத்தவங்க மாதிரி நான் பாத்தேன், போனேன், செய்தேன்னு சொல்கிறங்களே! அப்படி சொல்லலாமா? இவருக்குத்தான் எல்லாம் போச்சே! நான் போயே போயிடுத்தே. நான் போகலைனா அவர் சீவன் முத்தரே இல்லையே! அப்புறம் என்ன நான் போனேன் வந்தேன்?" என்கிறான் சீடன்.....

அப்பா நீ சொல்கிறது சரிதான். ஞானிக்கு நான் இருக்க முடியாது.

நாம் ஒரு கனவு காண்கிறோம். முழித்து கொண்ட பிறகு அதைப்பத்தி மத்தவர்கிட்டே சொல்கிறோம். "நேத்து ஒரு கனா கண்டேன். தெருவிலே நடந்து போய் கொண்டு இருந்தேனா? அப்போ அங்கே ஒரு ஆனை வந்தது. என்னை துதிக்கையால அப்படியே தூக்கித்து" ன்னு கதை சொல்கிறோம். அப்படி ஒண்ணுமே நிச்சயம் நடக்கலை. அது நமக்கும் தெரியும்; கேட்கிறவருக்கும் தெரியும்.

இதே போலத்தான் ஞானியும் பூர்வ வாசனையால போனேன், வந்தேன் ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் அவங்களுக்கு அது பொய்ன்னு நிச்சயமா தெரியும். அவனுக்கு ஜீவ பாவமே இல்லை. பிரம்ம சொரூபம் தான் என்கிற அனுபவமே இருக்கு. உடல் கீழே விழுகிற வரை அவன் அப்படித்தான் இருப்பான்.

ஒரு ராஜா கனவு கண்டு விட்டு "நான் ஒரு பிச்சைக்காரனா இருந்தேன்; பிச்சை எடுத்தேன்" ன்னு சொன்னாலும் அவன் பிச்சைக்காரனா உணருகிறதில்லை. தான் ராஜா என்கிறது சர்வ நிச்சயமா அவனுக்கு தெரியும். அது போல பிரம்ம ஞானிக்கும் தான் பிரம்மமென்ற அனுபவமே இருக்கும். "தான்"ன்னு சொன்னாக்கூட அது அவன் மனசை பாதிக்காததே. அப்போதைக்கு அப்போது அதெல்லாம் கனவு போல போயிடும். சாதாரண மக்களுக்கோ தான், செய்தது, போனது போன்ற எல்லாம் நினைவிலேயே நிக்கும்.

30.
விவகாரம் நீங்கிய சீவன் முத்தருக்கு எப்படி விபரீதமுண்டாகும்?

ஐயாகேளீர் தத்துவஞானியு மஞ்ஞானிகள் போலே
செய்யாநின்றேன் கண்டேனுண்டேன் சென்றே னெனலாமோ
பொய்யாம்விபரீதங்க ளவற்க்குப்போயின வென்றீரே
மெய்யாம் பிரமவிகாரமி தன்றேவெளியா வுரையீரே

ஐயாகேளீர்! தத்துவ ஞானியும் அஞ்ஞானிகள் போலே செய்யா நின்றேன், கண்டேன், உண்டேன், சென்றேன் எனலாமோ? பொய்யாம் விபரீதங்கள் அவற்க்குப் போயின என்றீரே? மெய்யாம் பிரம விகாரம் இதன்றே? வெளியா (வெளிப்படையாக) உரையீரே.

31.
விவகாரம் பொய்யானால் அவை நீங்க வேண்டாவா?

ஓய்ந்தகனாவிற் கண்டபழங் கதையோ துவன் வாதனையால்
ஆய்ந்தறி வுற்றவ னப்படிசெப்புவ னாபாசனு மாகான்
மாய்ந்தத னுடல் வேமளவும் விண்ணவன் மனிதனெனப் படுவான்
வீய்ந்தசிதா பாசன்போமளவும் விவகாரந் தொடரும்

ஓய்ந்த கனாவில் கண்ட பழங் கதை வாதனையால் (பூர்வ வாசனையால்) ஓதுவன் (சொல்வான்) [போல்] ஆய்ந்து அறிவுற்றவன் அப்படி செப்புவன் [ஆனாலும்] ஆபாசனும் ஆகான். மாய்ந்த தன் உடல் வேகும் அளவும் விண்ணவன் (தேவன்) மனிதன் எனப் படுவான். வீய்ந்த சிதாபாசன் போம் அளவும் (விதேக முத்தி வரை) விவகாரம் (செய்தேன் எனல் முதலிய விவகாரம்) தொடரும்.

[கனவு கண்டவன் கண்ட கனவை கூறுகையில் அது கனவுதான் என்ற அறிவு இல்லாமல் போகவில்லை, அது போல பிரமம் நான் என்று அறிந்த ஞானியும் பூர்வ வாசனையால் "சென்றேன், உண்டேன் என சொல்லும்போதும் அவனுக்கு ஜீவ பாவமில்லை. அஞ்ஞானி அப்படி சொல்லும்போது நான் என்ற பாவம் இருக்கிறது. அவனுக்கு விவகாரங்கள் மனதில் தங்கிவிடும். ஞானிக்கு தங்காது. கனவு போல் அப்போதைக்கப்போது போய்விட அவன் பிரம சொரூபமாகவே இருப்பான். ]