Pages

Thursday, June 18, 2009

விவகாரம் செய்கையில் சமாதியில் இருத்தல் எப்படி?22
சத்துவ மனம் பிராரர்த்த கர்மப்படி விவகாரம் செய்கையில் சமாதியில் இருத்தல் எப்படி?

விவகார வேலையெலாஞ் சமாதியென்றால் விகற்பமன்றோ மனமலைந்து விடாதோ விட்டால்
அவதான நழுவுமன்றோ வென்றாயாகி லதற்கொருதிட் டாந்தங்கே ளாசை கொண்டு
நவமாகப் பரபுருடன் றன்னைகூடி நயந்தசுக மநுபவித்த நாரி நெஞ்சந்
தவமாக மனைத்தொழில்கள் செய்யும்போதுந் தழுவியநு பவித்தசுகந் தனைவிடாதே.

"விவகார வேலை எலாம் சமாதியென்றால் விகற்பம் (விரோதம்) அன்றோ? மனமலைந்து விடாதோ? விட்டால் அவதானம் (சொரூபம் நாமென்னும் ஞான நிச்சயம்) நழுவுமன்றோ?” என்றாயாகில் அதற்கொரு திட்டாந்தம் கேள். ஆசை கொண்டு நவமாகப் பரபுருடன்தன்னை கூடி நயந்த சுகம் அநுபவித்த நாரி நெஞ்சம் தவமாக மனை தொழில்கள் செய்யும்போதும் தழுவி அநுபவித்த சுகந்தனை விடாதே. (அது போல என அறிவாய்) [சுத்த சத்துவம் சொரூபானந்தத்தில் அழுந்தியிருப்பதால் விவகாரம் செய்யும்போதும் சமாதியிலேயே இருக்கும்]

" பிரம்மத்தில லயமாகி சமாதில இருப்பார்ன்னு நினைச்சா, நீங்க பாட்டுக்கு வியவகாரம் செய்வார் என்கிறீங்க. இது விரோதமா இருக்கே. வியவகாரம் னா மனசு அதில ஈடுபடாதா. ஈடுபட்டா மனசு அலையாதா? அப்படி ஏக்காக்கிர சித்தம் இல்லாம மனசு அலைந்தா அது சமாதி இல்லையே?” என்கிறான் சீடன்.

மனசு ஒரு இடத்தில இருக்க உடம்பு பாட்டுக்கு வேற வேலையை பாக்கிறது நமக்கு ஒண்ணும் புதுசு இல்லையே! அந்த காலத்தில அப்படி இருந்ததோ என்னமோ? பூஜைன்னு உட்காந்து ஆரம்பத்தில ரொம்ப கவனத்தோட ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில ஆபீஸ்/ வீட்டு பிரச்சினை ன்னு மனசு வேற எங்கோ போயிடுது. கை கால் பாட்டுக்கு தானியங்கியா பூஜைக்கான படிகளை சரியா செஞ்சுகிட்டே போகுது. கடைசில கொஞ்சம் கூட மனசு ஈடுபடாம பூஜையை முடிச்சு எழுந்திருக்கிறதும் உண்டு. இது வருத்தத்திலேயே இருந்து கொண்டு காரியம் செய்கிற விஷயம்.

வீட்டிலே டிமிக்கி கொடுத்துட்டு இரவு காதலனை சந்திச்சு சல்லாபிச்சுட்டு அடுத்த நாள் மனசு அந்த சுகத்திலேயே இருக்க தானியங்கியா வீட்டு வேலைகளை செய்கிற பெண் போலன்னு உதாரணம் கொடுக்கறார் ஸ்வாமிகள்.
என்ன இப்படி எல்லாம் ஒரு உதாரணமா என்கறீங்களா? கொஞ்சம் நிரடலா இருந்தாலும் அது ரொம்பவே பொருத்தமான உதாரணம். உடல் இன்பமே இப்படி ஒரு நிலையை கொடுக்கும்னா பிரம்ம ஆனந்தம் ஏன் தராது?

சொல்ல வந்தது மனசு ஒரு இடத்தில இருக்க காரியம் பாட்டுக்கு செய்ய முடியும் என்கிறதுதான். அதாவது பிரம்மத்தில சித்தம் இருக்க வியவகாரங்களையும் செய்யக்கூடும்.
"தாதி விளையாடி இருகை வீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தேதான்” என்கிறார் பட்டினத்தார்.

கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
குளிர்தீம் புனற்கைஅள்ளிக்
கொள்ளுகினும் ........
சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து
தமியேனை ரட்சைபுரிவாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.11.
- தாயுமானவர்.

இப்படி தொழில் செய்கிற சீவன் முக்தன் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறான். அட! ஒரு சாதாரண மனுஷனே சில காரியங்களை ஒரே நேரத்திலே செய்கிறாங்க. மெய்ல் பாத்துகிட்டே சாட்டறாங்க. வேலை பாத்துக்கிட்டே ப்ளாக் போஸ்ட் பண்ணறாங்க.

இப்படி இருக்க சீவன் முக்தருக்கு இது பெரிய காரியமா?

ஒருவன் ஒரு பெரிய ஏரிக்கரை மேலே இருக்கிறான். ஒரு பக்கம் பாத்தா ஏரியிலே தண்ணி; விசாலமா, பிரிவில்லாம ஒண்ணா இருக்கிறது. அவனே வெளிப்பக்கம் பாத்தா வீடு ரோடு, மிருகங்கள், பல மனிதர்கள், இன்ன பிற துன்பம் தருவன  எல்லாம் தெரியுது.

இதே போல சீவன் முக்தன் உள்ளே பாக்கும்போது களங்கமில்லாத, சலனமில்லாத, ஏகமானதாக, அகண்டாகாரமா ஆன்மாவை பாக்கிறான்.
இவனே பகிர் முகமா பாக்கிறப்ப நானா ரூபமா நாம ரூப பிரபஞ்சத்தை பாக்கிறான். ஆனா இந்த உலக விவகாரங்களிலே வெறும் சாட்சியா இருக்கிறதே அவனோட இயல்பா இருக்கு. நமக்கு எப்படி "நான் செய்கிறேன்" என்கிறது இயல்பா இருக்கோ அதே மாதிரி இவருக்கு சாட்சியா இருக்கிறது இயல்பா இருக்கு.


Post a Comment